Sunday, December 4, 2016

இதெல்லாம் தேவையா?

By வாதூலன்  |   Published on : 03rd December 2016 02:35 AM 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை சாஸ்தா கோயில் "அய்யப்பன் கோயில்' என பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் சில இடங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய அனுமதியைப் பெறாமல் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு எடுத்தது ஏன் என்று கேரள அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலை உள்ளபடிக்கே இந்து மதத்துக்கு ஒரு பொதுவான அடையாளம் என்று கூறலாம். தமிழ்நாட்டிலிருந்து பல பக்தர்கள் விரதம் இருந்து, உள்ளூர் கோயிலுக்குச் சென்று மாலை போட்டு அங்கு செல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அனைவருமே "மலைக்கு போகிறேன்' என்று மட்டுமே கூறுவது வழக்கம். "மலை' என்றாலே சபரிமலை என்று குறிப்பிடுமளவுக்கு, அந்த இடம் புகழ் பெற்றது.
ஐயப்பனைப் பற்றி காஞ்சி முனிவர் இவ்விதம் சொல்கிறார்: "மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும், பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒன்று சேர்ந்தவுடன் ஒரு பெரும் ஜோதி பிறந்தது. இந்தத் தேஜúஸ ஐயப்பனாக உருக் கொண்டது. ஹரிஹர புத்திரா என்றும், சாஸ்தா என்றும், ஐயனார் என்றும் சொல்வது இந்த ஐயப்பனைத்தான்...'
கேரள மக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் பெயர் மாற்றத்தால் எந்தச் சின்னக் கலவரமும் அங்கு வெடிக்காததே இதற்குச் சான்று.
மாறாக, தமிழ்நாட்டில் எந்தப் பெயர் மாற்றமும் சர்ச்சையையும், போராட்டத்தையும் கிளப்பாமல் இருந்ததில்லை. அரசியல் தலைவர்களாகட்டும், சாதித் தலைவர்களாகட்டும்
எந்தப் பெயர் சூட்டினாலும், குறைந்தபட்சம் எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஊர்வலமாகவது நடைபெறும்.
தமிழ்நாடு என்ற பெயரையே எடுத்துக் கொள்வோமே. இந்தப் பெயர் மாற்றத்துக்காக, சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். விசித்திரம் என்னவென்றால், மாறி மாறி வருகிற ஆட்சிகளில், தமிழ்நாடு என்ற பெயர் தற்போது சென்னை என்று உருமாறி விட்டது.
சாலைகளும் அவ்வப்போது பெயர் மாற்றத்துக்கு உட்படுகின்றன. ஆனாலும் பொதுமக்கள் மனத்தில், பழைய புழக்கத்தில் இருந்த பெயர்களே, பதிந்து இருக்கின்றன.
ஒரு வருடம் முன்பு கிரிக்கெட், ஹாக்கி போன்ற பல ஆட்டங்களுக்கு ஊக்கம் தந்து புரவலராகவும் விளங்கிய ராமச்சந்திர ஆதித்தன் பெயரை அடையாறில் ஒரு தெருவுக்குச் சூட்டினார் முதல்வர். என்றாலும், காந்தி நகர் மெயின் ரோடு என்ற பெயரே பரவலாக புழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்தப் பெயர் மாற்ற தன்மை சில ஆண்டுகளாகப் பிற மாநிலங்களுக்கும் தொற்றிக் கொண்டு விட்டது. ஒடிஸô, பெங்களூரு, மைசூரு, கொல்கத்தா போன்ற பல பெயர்கள்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கேட்பு வரைவோலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்கையில், "பெங்களூரு' என ஆங்கிலத்தில் குறிப்பிட மிகவும் சிரமப்பட்டார். ஓர் ஊழியர் புன்னகையுடன், "பெங்களூர் என்றே எழுதுங்கள்' என்றார். அதே சமயம், இந்தப் புதிதான பெயர்கள் அரசாங்க கெஸட்டில் பதிவாகியுள்ளன என்பது வெளிப்படை.
சிலைகள் விஷயமும், பெயர்கள் போலத்தான், அதுவும் தமிழ்நாட்டில் சிலை இல்லாத இடமே இல்லை எனலாம். சிலையின் உருவ அமைப்பு சிலையின் கீழே பொறிக்கப்பட்ட வாசகங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.
சென்னை கடற்கரைப் பகுதியில் உள்ள கண்ணகி சிலை போன்றவை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டபோது, பெரிய போராட்டம் நிகழ்ந்தது; உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு சொன்ன பின்னர்தான் ஆர்ப்பாட்டம் அடங்கியது.
அண்மையில் குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை நிறுவ பா.ஜ.க. முனைந்தபோது, எதிர்ப்பு எழுந்தது. காந்தி, நேரு போன்று வல்லபபாய் படேலை பெரும்பான்மையான மக்களால் தேசத் தலைவராகக் கருத முடியாத மனப்பான்மை முக்கிய காரணம்.
"பொதுவாக, சிலைகளுக்காகவும் நினைவிடங்களுக்காகவும் அரசு பணம் செலவாவதை விரும்பவில்லை என்று ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற வேறு ஓர் எழுத்தாளரோ ஒரு படி மேலே போய், "நினைவிடங்களுக்குப் பதில் தூய்மையான கழிப்பிடங்கள் கட்டலாம் என்று எள்ளலாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.
ஆனால் அண்மைச் செய்தி ஒன்று, நம்மைத் தூக்கி வாரிப் போடுகிறது. மகராஷ்டிர பாஜக அரசு 3,600 கோடி ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கி வருகிறதாம். சிவசேனாவைத் திருப்திப்படுத்தும் செயல்தான் இது.
இதுகுறித்து யாரும் எதுவும் கேட்க இயலாது. "மராத்தியர்கள்' "சிவாஜி' போன்ற சொற்களே அங்கு உணர்ச்சியைத் தூண்டி விடக் கூடியவை. ஏற்கெனவே காஷ்மீர விவகாரத்திலும், கருப்புப் பண விவகாரத்திலும் மைய அரசுடன் சிவசேனா கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறைக்கு ஞாபகமூட்ட சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்கள், மற்றும் பிரமுகர்களுக்குச் சிலை வைப்பது அவசியம்தான்! ஆனால் அது மட்டும் போதாது. அவர்களிடம் உள்ள பல நல்லியல்புகளை இன்றைய இளைஞர்கள் கற்றுப் பின்பற்ற வேண்டும்.
பெயர் வைப்பதில் பெரிதாகச் செலவில்லை. அரசாங்கச் செலவில் ஒரு கூட்டம் போதும். ஆனால் சிலை?
இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில், உற்பத்தி சாராத ஒரு செயலுக்கு பெருமளவு பணம் விரயமாவது நல்ல அறிகுறிதானா?



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024