குழந்தைகள் உலகம்
By இ. ரகுகுமார் | Published on : 02nd December 2016 02:26 AM
குதூகலம் நிறைந்தது குழந்தைப் பருவம். துள்ளலும் மகிழ்ச்சியும் ததும்பி சிறகடித்துப் பறக்கும் வாழ்வு. கவலைகள், ஏற்றத்தாழ்வுகள் அறியாத பரிசுத்த மனம். இதுபோன்ற குழந்தைகளுக்கான உலகத்தில்தான் இன்றைய குழந்தைகள் வளர்கிறார்களா?
பெற்றோர்- கல்விக்கூடம்- சமூகம் ஆகிய தளங்களில் வலம் வரும் குழந்தைகள் இன்றைக்கு எப்படி வடிவமைக்கப்படுகிறார்கள்? குழந்தைகளின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றனவா?
குழந்தைகளின் உணர்வுகள், உரிமைகள் இன்றைக்கு எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன? இந்தக் கேள்விகளுக்கான தேடலில் புகுந்தால் அதிர்ச்சியும் கவலையுமே அதிகரிக்கின்றன.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியும் சுகாதாரமும் அளிப்பதாக நமது அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், நடைமுறையில் இவை இரண்டும் குழந்தைகள் விலை கொடுத்து வாங்கும் பொருட்களாகவே உள்ளன.
பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 65 நாடுகளில் கல்வி இலவசமாகக் கிடைக்கிறது. கல்வி-சுகாதாரத்துக்கு அங்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளைக் கடந்த பின்னரே இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறி.
சுகாதாரத்தைக் கணக்கில் கொண்டால், நோய்களின் தாக்குதலால் உயிரிழக்கிற ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவதை விட இந்தியாவில் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
இவற்றைவிட, குழந்தைகள் அடையாளமற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர் என்பதுதான் இன்றைக்குள்ள பெரும் ஆபத்து. தாய்மொழி வழிக்கல்வி அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது.
புதிய நுகர்பொருள்களை வாங்கும் பயனாளிகளை உருவாக்குவதுதான் உலகமயத்தின் நோக்கம். இந்தச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கியே நமது குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.
நியாயத்துக்காக, தர்மத்துக்காக உறவுகளைப் பேணிய நிலை மாறிவிட்டது. லாபத்துக்காக உறவுகளைப் பேணுபவர்களாக குழந்தைகள் மாற்றப்படுகின்றனர். இப்படியான வணிக கலாசாரத்தை நோக்கி குழந்தைகள் உருவாக்கப்படுவது மாபெரும் ஆபத்து.
வருங்கால வருமானத்துக்கான முதலீடாக பெற்றோரால் குழந்தைகள் கருதப்படுகிறார்கள். பாசமும் நேசமும் கலந்த குழந்தை வளர்ப்பு இன்றில்லை. அதிக ஊதியம் தரக்கூடிய துறைகளில் வேலைவாய்ப்பையும், வெளிநாட்டுப் பணிகளையும் இலக்காகக் கொண்டதாக குழந்தை வளர்ப்பு மாறிவிட்டது.
இதற்காக, காலையில் டியூஷன், மாலையிலும் டியூஷன் என, குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அவர்களை இயந்திரமாக்கி, அவர்கள் மீது மறைமுக வன்முறை அன்றாடம் நிகழ்த்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிக் கொடுப்பது, வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது என இயல்பாக இருந்த விஷயங்கள் தற்போது நாகரிகம் என்ற பெயரில் மறைந்து வருகின்றன.
கல்வியும் விளையாட்டும் கற்றுக் கொள்வதற்கே என்பதைத் தாண்டி, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஊட்டப்படுகிறது. அதிலும், இரண்டாமிடம், மூன்றாமிடத்தைக்கூட ஏற்க முடியாத மனப்பக்குவம் பல பெற்றோரிடம் இருக்கிறது. அதுவே குழந்தைகளிடமும் புகுத்தப்படுகிறது.
கடந்த காலத்தில் நொண்டி, கண்ணாமூச்சி, பன்னாங்கல், தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளில் கூடிக் களித்த குழந்தைகளிடம் தற்போது தனித்து அடையாளப்படுத்தும் விளையாட்டுகள் திணிக்கப்படுகின்றன.
வாழ்வை நெறிப்படுத்தும் கதைகள் குறைந்துவிட்டன. அதைச் சொல்லக் கூடிய முதியோரைக் கொண்ட வீடுகள் அருகிவிட்டன. மொத்தத்தில் யதார்த்தம் இல்லாத உலகை நோக்கி குழந்தைகள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
தற்போதைய ஆசிரியர்களின் பணி, குழந்தைகளை மதிப்பெண் ஈட்டும் இயந்திரமாக மாற்றுவதாக உள்ளது. இந்தக் கல்வி முறையில் கற்றல் - கற்பித்தல் நடைபெறுவதற்குப் பதிலாக, பயிற்றுவித்தல் மட்டுமே நடைபெறுகிறது.
ஒருகாலத்தில் கோத்தாரி கல்வி முறை மூலமாகவும், நடுநிலை வகித்த நாளேடுகள் வழியாகவும், சமூகத்தை நேசித்த எழுத்தாளர்கள் வழியாகவும், திறம்படச் சிந்தித்த அறிஞர்கள் வழியாகவும் தலைசிறந்த சமூகப் பிரஜைகளாக குழந்தைகள் வளர்ந்தனர்.
இன்றைக்கோ, சமூகத் தாக்கத்தின் விளைவாக, மனிதநேயம், சமூக அக்கறை போன்ற பண்புகளை இழந்து, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் செல்லவும் தயங்காதவர்களாக குழந்தைகள் மாற்றப்படுவதால், குற்றங்களும் சமூகவிரோதச் செயல்களும் அதிகரித்திருக்கின்றன.
உண்மையிலேயே குழந்தைகளின் நியாயமான அபிலாஷைகளை நாம் நிறைவேற்றி இருக்கிறோமா? குழந்தைகளின் உண்மையான அபிலாஷையை நிறைவேற்றுதல் என்பது, விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குவதும், நண்பர்களைத் தேர்தெடுக்கும் உரிமை அளிப்பதும், விரும்புவதைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதும்தான்.
ஆனால், இந்த மூன்றையும் நோக்கி குழந்தைகளைப் போக விடாமல் நமது சுயநலம் தடுக்கிறது.
இதற்கான தீர்வுகளில் முதன்மையானது கல்வி முறையில் மாற்றம். மாலை நேரங்களில் தங்களுக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளை அனுமதிப்பது அவசியம். அவர்களோடு அமர்ந்து கதைகள் கூறுதல், விளையாட்டு என நமது பாரம்பரிய குடும்பக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதும் முக்கியம்.
சக மனிதர்களை நேசிக்கும் பண்பைக் கற்றுக் கொடுப்பது, எல்லாக் குழந்தைகளுடனும் இணைந்து விளையாட அனுமதிப்பது, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர வாய்ப்பளிப்பது ஆகியவை இன்றியமையாதவை.
இவை அனைத்துக்கும் மேலாக குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த நூலகம் அழைத்துச் செல்வது பழக்கமாக வேண்டும்.
No comments:
Post a Comment