Wednesday, May 10, 2017






தலையங்கம்
ஆற்று மணல் அல்ல, இனி மாற்று மணல் தான்



துபாய் நாட்டின் முக்கிய வருவாய் சுற்றுலா பயணிகளால்தான். துபாய் என்றவுடனேயே, சுற்றுலா பயணிகள் பார்க்கும் பட்டியலில் முதல் இடத்தை பெறுவது ‘புர்ஜ் கலிபா’ என்று கூறப்படும் மிகஉயரமான 163 மாடி கட்டிடம்தான். மேகத்தை தாண்டிநிற்கும் இந்த கட்டிடம் 2,717 அடி உயரமானதாகும். இவ்வளவு பெரிய கட்டிடத்தை எப்படி கட்டினார்கள்?, எப்படி இவ்வளவு வலிமையாக நிற்கிறது? என்று காரணம் கேட்டால், இதை ஆற்று மணலைக்கொண்டு கட்டவில்லை. மாற்று மணல் என்று கூறப்படும் ‘எம் சாண்ட்’ என்று அழைக்கிறோமே, அந்த வகையிலான கருங்கல் ஜல்லி மணலைக்கொண்டு கட்டப்பட்டது என்று கேள்விப்படும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்கள், பல நாடுகளில் மாற்று மணலைக்கொண்டுதான் கட்டிடப்பணிகளை மேற்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மொத்தமுள்ள 33 ஆறுகளில் இருக்கும் மணலை எல்லாம் கொள்ளையடித்து கட்டாந்தரையாக்கிவிட்ட நிலையில், இப்போது அதற்கும் கீழே சுரண்டி ஆற்றின் நீரோட்டமே பாதிக்கப்பட்டு, நிலத்தடிநீரும் இல்லாமல், மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டின் நீர்வளமே மிகமோசமான நிலைமைக்கு போனதற்கு காரணம், இந்த ஆற்று மணல் கொள்ளைதான். கேரளாவில் ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த தடையை கொண்டுவந்து, மாற்று மணலை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. எம்.அப்பாவு ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்த நேரத்தில் மாற்று மணலை பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஏற்கனவே பரிசீலித்துக்கொண்டு இருப்பதைக் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஏற்கனவே கடந்த 30.8.2012 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் கட்டுமான பணிகளுக்கு கருங்கல் ஜல்லி, குவாரி துகள்களை பயன்படுத்துமாறு குறிப்பிட்டிருந்தது.

இப்போது மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பாராட்டத்தக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் இனி அரசே முழுமையாக எடுத்து செயல்படுத்தும். லோடு காண்டிராக்ட் அதாவது, மணலை அள்ளி நிரப்புவது, மணலை சேமித்துவைப்பது அனைத்துமே அரசின் மேற்பார்வையில்தான் செயல்படுத்தப்படும். இதுபோல, பொதுமக்களும் இனி தாங்கள் கட்டும் கட்டிடங்களுக்கு மாற்று மணலைத்தான் பயன்படுத்தவேண்டும் என்றும், கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் படிப்படியாக மாற்று மணலுக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுமட்டுமல்லாமல், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பை, தமிழக மக்கள் வரவேற்கிறார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, குவாரிகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் ‘எம் சாண்ட்’ என்று அழைக்கப்படும் மாற்று மணலை தயாரிக்கும் வகையில், கருங்கற்களை அரைத்து தூளாக்கும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபடவேண்டும். தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் தேவைக்கு இது தாராளமாக போதும். அரசும் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆற்றுமணலுக்கு நிகராக மாற்று மணல் கிடைக்க அரசு உன்னிப்பாக செயல்படவேண்டும். ஆற்றில் மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று கூறினாலும், உடனடியாக ஒருபக்கம் மாற்று மணல் உற்பத்தியை அதிகரித்து, மறுபக்கம் ஆற்று மணல் எடுப்பதை பெருமளவில் குறைக்கவேண்டும். இரண்டு மூன்று ஆண்டுகள் என்றில்லாமல், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆற்று மணல் அள்ளுவதை அடியோடு நிறுத்தவேண்டும். இது நீர்வளத்துக்கு நல்லது.

















































No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024