Wednesday, May 10, 2017

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. 
 
புதுடெல்லி,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 61). இவர் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார்.

அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக ராஜ்யரீதியிலான அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

இந்த நிலையில், தனது நிறுவன பங்குகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டாஜியோ நிறுவனத்திடம் விற்று கிடைத்த பணத்தில் 40 மில்லியன் டாலரை (சுமார் ரூ.260 கோடி), நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தனது மகன் சித்தார்த் மல்லையா, மகள்கள் லீனா மல்லையா, தான்யா மல்லையா ஆகியோருக்கு விஜய் மல்லையா மாற்றி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும், மூத்த வக்கீல் சியாம் திவானும் ஆஜராகினர். விஜய் மல்லையா தரப்பில் மற்றொரு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜர் ஆனார்.

வழக்கு விசாரணையின்போது, விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறினார்.

‘கடவுள்தான் அறிவார்’

கடன் மீட்பு நடுவர் மன்றம், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகளை சியாம் திவான் சுட்டிக்காட்டி னார். விஜய் மல்லையாவிடம் இருந்து வசூலிக்க வேண்டிய சுமார் ரூ.9 ஆயிரத்து 200 கோடியை வசூலிப்பதற்காக வங்கிகளுக்கு ஆதரவாக கடன் மீட்பு நடுவர் மன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைக்கேட்ட நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம், “விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 200 கோடியை வசூலிக்க கடன் மீட்பு நடுவர் மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அந்தப் பணத்தை எப்படி திரும்ப வசூலிப்பது என்பதை கடவுள்தான் அறிவார்” என பதில் அளித்தார்.

குற்றவாளி என அறிவிப்பு

அதே நேரத்தில் விஜய் மல்லையாவின் வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) வரவில்லை என கூறினார். ஆனால் அதை கோர்ட்டு ஏற்கவில்லை.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் முடிவில், “இந்த வழக்கில் எதிர்வழக்குதாரராக சேர்க்கப்பட்டுள்ள மூன்றாவது நபர் (விஜய் மல்லையா) நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி” என அறிவித்தனர்.

நேரில் ஆஜராக உத்தரவு

அதைத் தொடர்ந்து வழக்கில் வழங்கப்பட உள்ள தண்டனை தொடர்பாக தனது தரப்பு கருத்தை கூறுவதற்கு ஜூலை மாதம் 10-ந் தேதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024