Tuesday, May 9, 2017

'உள்ளாடைல ஹுக் இருந்தா, 'பீப்' சத்தம் கேக்கத்தான் செய்யும்!''- நீட் தேர்வில் கதறிய மாணவி

எம்.குமரேசன்

VIKATAN 

‘சார்... 'உள்ளாடைல ஹுக் இருந்தா, மெட்டல் டிடெக்டர்ல 'பீப்' சத்தம் கேக்கத்தான் செய்யும்!''- அந்தக் கண்காணிப்பாளருக்கு மாணவி விளக்கம் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. 'அதெல்லாம் முடியாது பீப் சத்தம் வந்தா உள்ளே விட மாட்டோம்' எனக் கறாராக பதில் கிடைத்துள்ளது. பக்கத்தில் கழிவறை கூட இல்லை. தேர்வுக்கு இன்னும் 10 நிமிடங்கள்தான் இருக்கின்றன. கழிவறை இல்லாத நிலையில், மறைவிடம் சென்று, உள்ளாடையைக் கழற்றிவிட்டு தாயைத் தேடி ஓடியுள்ளார்.





தேர்வறைக்கு வெளியே இருந்த தாயைக் கண்டுபிடித்து அவரிடம் உள்ளாடையைக் கொடுக்க, அவருக்கோ என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மூச்சு வாங்க தேர்வறைக்குள் நுழைந்த 18 வயது மாணவியால், எப்படி தேர்வை நல்ல முறையில் எழுதியிருக்க முடியும்? பயங்கர அனுபவத்தையையும் அவஸ்தையையும் சந்தித்த அந்த மாணவி தனது பெயரைக் கூறவோ... முகத்தைக் காட்டவோ விரும்பவில்லை. சம்பவம் நடந்தது கேரளத்தின் கண்ணூரில். எதற்கெடுத்தாலும் மனிதஉரிமை பற்றி பேசும் நகரம் இது.

மற்றொரு மாணவி ஜீன்ஸ் அணிந்தவாறு தேர்வுக்கு சென்றுள்ளார். ஜீன்ஸ் பேன்ட்டில், இரும்பு பட்டன்தானே இருக்கும். உடனே, அதனை பிடுங்க உத்தரவிட்டுள்ளனர். மாணவியின் தந்தை 3 கி.மீ தொலைவு அவசரம் அவசரமாக ஓடிச் சென்று புதிய உடை வாங்கி வந்துள்ளார். அதனை அணிந்து கொண்டு, மாணவி தேர்வு எழுதியுள்ளார். 'இந்த சம்பவத்தால் என் மகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி, தேர்வு கூட சரியாக எழுதவில்லை' என குற்றம் சாட்டுகிறார் மாணவியின் தந்தை.

கேரளாவில், பல மாணவிகளுக்கும் நீட் தேர்வு பயங்கர அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தேர்வு நடந்தது, ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திறக்கும் கடைகள்கூட காலை 9 மணியளவில் அடைத்து கிடந்துள்ளன. இதனால், மாணவிகளும் பெற்றோர்களும் கடும் அவஸ்தைக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால், எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாத அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர்' பீப்' சத்தம் கொடுத்தால் போதும் அதைக் கழற்று... இதைக் கழற்று என கட்டளையிட்டுள்ளனர்.

தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் அடாவடி நடவடிக்கைகள் மாணவிகள், பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தந்தை ஒருவர் கண்ணூர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெற்றோர்கள் பலரும் புகார் அளித்துள்ள நிலையில், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலக் குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ஆடைக் கட்டுப்பாடு என்கிற பெயரில் நடந்துள்ள அத்துமீறல்களை எந்த நாகரிகமான சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது. குழந்தைகளுக்கு இப்படி தொந்தரவு கொடுத்திருப்பது அவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கும் செயல்'' என கண்டித்துள்ளார்.

மாணவியின் உள்ளாடையை கழற்றச் சொன்ன சம்பவம் நடந்த, கண்ணூர் பள்ளியின் முதல்வரோ,' மெட்டல் டிடெக்டர் 'பீப்' சத்தம் வந்தால், நிச்சயம் உள்ளே அனுமாதிக்காதீர்கள்' என எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சிபி.எஸ்இ நிர்வாகம் தந்த உத்தரவை எங்களால் எப்படி மீறி முடியும்' என கேள்வி எழுப்புகிறார். மாணவ -மாணவிகள் காப்பியடிப்பதை சாத்தியமான முறையில் தடுப்பதை விட்டு விட்டு, இப்போது சாக்குபோக்கு சொல்வதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024