இதையும் விளையாட்டா எடுத்துக்காதீங்க!
பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வரவிருக்கின்றன. தேர்வு முடிவைப் பார்த்து, “படிக்கும்போது விளையாட்டுத்தனமா இருக்காதேடான்னு சொன்னேனே கேட்டியா, பார் இப்போ மார்க் குறைஞ்சிடிச்சி…” என்பது போன்ற உரையாடல்கள் வீட்டில் எழும். படிப்பை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேநேரம், விளையாட்டையே ஒருவர் படிப்பாக எடுத்துக்கொண்டாலோ, விளையாட்டில் தனிக் கவனம் செலுத்தி நிபுணத்துவம் பெற்றாலோ மேற்படிப்பு, வேலை என அவருக்கும் எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கும்.
விளையாட்டுப் பிள்ளையா?
ஒரு மாணவன்/மாணவி ஆறு-ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே, பிடித்த விளையாட்டைத் தேர்வு செய்து அதில் முறையாகப் பயிற்சி பெற்றிருந்தால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது குறைந்தபட்சம் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றதற்கான சான்றிதழ்களும் பரிசுகளும் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டுக்குரிய இடஒதுக்கீடு எளிதாகக் கிடைக்கும்.
எப்போதும் படி படி என்று வலியுறுத்தாமல் விளையாட்டில் ஆர்வம் இருக்கும் மாணவர்களை அரசு சார்பிலும், விளையாட்டுக் கழகங்கள் சார்பிலும் நடைபெறும் வட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். பிளஸ் டூ தேர்வில் மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள், பதக்கங்கள் உயர்கல்வி கற்பதற்குப் பெரிதும் உதவும்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள்
கபடி, ஹாக்கி, பூப்பந்து, கால்பந்து, ஜூடோ, மல்யுத்தம், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், நீச்சல், கோகோ, வாலிபால், இறகுப் பந்து, தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், சதுரங்கம் உள்ளிட்ட 32 விளையாட்டுகளுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு இடையே திறனாய்வுப் போட்டிகளை அரசு நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இலவசப் பயிற்சியும் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகின்றன. மாணவ மாணவிகளுக்கு என அரசு தனித்தனியே விளையாட்டு விடுதிகளைப் பராமரித்து வருகிறது. இவற்றில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வி, இருப்பிடம், உணவு ஆகியவற்றை அரசு வழங்குகிறது.
ஆடியே ஜெயிக்கலாம்
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. உதாரணமாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர், அனைத்து பாடங்களிலும் சேர்த்து 720 மதிப்பெண்கள் பெற்றால், மாவட்ட அளவிலான போட்டிக்கு 25 மதிப்பெண்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு 75 மதிப்பெண்கள்வரை சராசரியாக அளிக்கின்றனர். இதனால், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களும் அவர்களுக்கு உரிய ‘கட் ஆஃப்’ கிடைத்துவிடும்.
வேலைவாய்ப்பு
உடற்கல்வியியல் படிப்பு படித்திருந்தால் (பி.பி.எட்.) பள்ளிகளில் பி.இ.டி. மாஸ்டர் ஆகலாம். இப்போது அனைத்துப் பள்ளிகளிலும் பி.இ.டி. ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. எனவே பி.பி.எட். முடித்தபின் வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. எம்.பி.எட். முடித்தவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணிபுரியலாம்.
பி.பி.எட். முடித்தவர்கள் உடற்கல்வி ஆசிரியர்களாகத்தான் ஆக வேண்டும் என்றில்லை. உடல்தகுதி நிபுணர் உள்ளிட்ட பல பணிகளில் சேரலாம். இப்போது ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சியாளர் போல, தனியாக ஒரு உடல்தகுதி நிபுணரும் நியமிக்கப்படுகிறார். பயிற்சியாளர் ஆட்ட நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை கவனித்துக் கொண்டால், உடம்பைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதற்கு ஏற்ற உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை உடல்தகுதி நிபுணர்களே நிர்ணயிக்கிறார்கள்.
இண்டர் ஸ்கூல் சாம்பியனாவதும் முக்கியம்!
பிளஸ் 2 தேர்வான மாணவர்களுக்குத் தற்போது மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு இருப்பதால், ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’ அவர்களுக்கு இருக்காது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, இண்டர் ஸ்கூல் பிரிவில் ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றவர் முதல் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கெடுக்கும் வீரர்கள்வரை அனைவருமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஏறக்குறைய 54 விளையாட்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஸ்போர்ட்ஸ் கோட்டா பிரிவில் இருக்கின்றன.
பாரதியார் நாள் விளையாட்டுப் போட்டிகள் (பி.டி.எஸ்), ரிபப்ளிக் டே ஸ்போர்ட்ஸ் மீட் (ஆர்.டி.எஸ்), பைக்கா முதல் அமைச்சர் கோப்பை உள்ளிட்ட ஆறு விதமான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. இண்டர் ஸ்கூல் நேஷனல் போட்டிகளிலும் இவர்கள் பங்கெடுப்பார்கள். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் படிப்படியாக மண்டலம், மாவட்டம், மாநிலம், தேசியப் போட்டிகளில் பங்கெடுப்பார்கள். ஸ்கூல் கேம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா பட்டியலில் கபடி, செஸ், கேரம், யோகா உள்ளிட்ட 37 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
- ஜாக்சன் சுதர்சிங்
(ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்
மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்)
(ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்
மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்)
No comments:
Post a Comment