குறள் இனிது: அறிஞர் அவையில் பேச முந்தலாமா...?
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
(குறள் 715)
|
வங்கிகளில் பெரிய கடன்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான தற்போதைய நடைமுறை தெரியுமா உங்களுக்கு? அண்ணே, எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், யாரும் யாருக்கும் தனி ஒருவராகக் கடன் கொடுத்து விட முடியாது!
கடன் தொகையைப் பொறுத்து, வங்கியின் வெவ்வேறு நிலைகளில் கடன் ஒப்புதல் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதுபோல் அமைக்கப்படும் குழுக்களில் உறுப்பினர்கள் ரிஸ்க் மேலாண்மையில், வங்கியின் கடன் கொள்கை போன்றவற்றில் அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பல சமயங்களில் சிமெண்ட், இரும்பு போன்ற பல்வேறு தொழில்களுக்குக் கடன் கொடுத்து நேரடி அனுபவம் பெற்றவர்கள் இருப்பார்கள்.
அத்துடன் அந்தக் கோப்பைக் கையாளும் இளநிலை அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள். கடன் ஒப்புதல் வழங்குவதற்கு இக்குழு கூடி விண்ணப்பத்தின் நன்மை தீமைகள் குறித்து விவாதிக்கும். இதனால் கடன் விண்ணப்பத்தைப் பல கோணங்களில் தீர ஆராய்ந்து நல்ல முடிவெடுக்க முடியும். நம்ம குமார் அவரது வங்கியின் தலைமை அலுவலகத்தில் கடன் துறையில் மேலாளர். அவரது பணி அங்கு வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து மேலதிகாரிகளிடம் அனுப்ப வேண்டியது.
அதிகார வரம்பில் குமார் குறைவானவரே என்றாலும், அந்தக் கோப்பைக் கையாளுபவர் எனும் முறையில் அவரும் மேலே குறிப்பிட்ட குழுக்களில் உறுப்பினர். கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்ற குழுவில் உறுப்பினராக இருப்பது அவருக்கு பெருமகிழ்ச்சி அளித்தது. முதல் கூட்டம் தொடங்கியது. நிர்வாக இயக்குநர் தலைமை தாங்கினார். நம்ம குமாரிடம் உற்சாகம் கொப்பளித்தது. அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. இந்தக் கடனுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து விட வேண்டியதுதான் என படபடவென பேசிக் கொட்டினார்.
ஆனால் அங்கிருந்தவர்கள் சாதாரணப்பட்டவர்களா என்ன? அந்த விண்ணப்பம் சர்க்கரை ஆலைக்கு என்றும், அரசின் கொள்கைகளால், அவற்றில் நிரந்தரத் தன்மையின்மையால் லாபத்தில் நடத்துவது மிகக் கடினம் என்று செய்தித்தாள்களில் வந்த மேற்கோள்களுடன் ஒரு பொது மேலாளர் சொன்னார். அடுத்தவரோ அந்நிறுவனத்தில் கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையின் சதவிகிதம் மற்ற தொழிற்சாலைகளை விடக் குறைவு என புள்ளி விபரங்களுடன் விவரித்தார்.
இன்னொருவர் வங்கியில் ஏற்கெனவே நிறைய சர்க்கரை ஆலைகளுக்குக் கடன் கொடுத்திருப்பதால் இனியும் கொடுக்க வேண்டாம் என்றார். இதையெல்லாம் கேட்ட பின் குமாருக்குத் தலை சுற்றியது. கடனுக்கு ஒப்புதல் கிடைக்காததுடன் குமாரின் அறியாமையே அதிகம் வெளிப்பட்டிருந்தது!
‘நீங்கள் பேசும் பொழுது, உங்களுக்குத் தெரிந்ததைத் திருப்பிச் சொல்லலாமே தவிர, மற்றவர்கள் பேச்சைக் கேட்கும் பொழுது தான் எதையாவது புதிதாகத் தெரிந்து கொள்ள முடியும்’ என்கிறார் தலாய் லாமா! அண்ணே, அவையில் இருப்போர் தம்மைவிட அறிஞர்களாக இருக்கும் பொழுது முந்திரிக் கொட்டையாக முந்தலாமோ? தன்னிலும் சிறந்த அறிஞர் அவையில், முந்திப்பேசாத அடக்கம், மிக நல்லதாகும் என்கிறது குறள்!
- somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment