வானவில் பெண்கள்: அஞ்சா நெஞ்சமும் அசாத்திய துணிச்சலும்
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றால் பொதுவாக நம் நினைவுக்கு வரும் பிம்பம் ஓர் ஆணுடையதாகத்தான் இருக்கிறது. ஆனால் இனி வரும் காலங்களில் இந்தப் பிம்பம் தகர்ந்து போய்விடும். அரசின் நேரடி அதிகார மையமான குடிமையியல் பணிகளில் (சிவில் சர்வீஸ் துறை) கணிசமான பெண்கள் நுழைந்து, குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துவருகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை இருபதுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பதினோராவது குடிமையியல் தினம் கொண்டாடப்பட்ட இந்த நேரத்தில் சவால்களை எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வரும் சில பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்போம்.
சஞ்சுக்தா பரஷார்
சஞ்சுக்தா பரஷார் யூ.பி.எஸ்.சி. தேர்வில் 85-வது இடத்தைப் பிடித்தவர். அஞ்சா நெஞ்சமும் அசாத்தியத் துணிச்சலும் கொண்டவர். தற்போது காவல் துறையில் பணியாற்றிவருகிறார். சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் 16 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார். 64 தீவிரவாதிகளையும் ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கிறார். போபால் - உஜ்ஜைன் ரயில் குண்டு வெடிப்பு குறித்து தற்போது ஆய்வு நடத்திவருகிறார்.
ரஜினி ஷெக்ரி சிபல்
ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அது மாநில முதல்வராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சாதவர். ஹரியாணா மாநிலத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரைச் சிறையில் அடைத்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
துர்கா சக்தி நாக்பால்
அகில இந்திய அளவில் 2009-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இருபதாவது இடத்தைப் பிடித்தார். முதல் பணியின்போதே யமுனா, ஹின்டன் ஆறுகளில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையைக் கண்டுபிடிக்கச் சிறப்புக் குழுவை அமைத்து, குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினார். அரசியல்வாதிகள் இவர் மீது கோபம்கொண்டு பணியிடை நீக்கம் செய்ய வைத்தனர். இதனால் பிரச்சினைகள் ஏற்படும் என்று அஞ்சிய உத்தரபிரதேச அரசு பின்னர் பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற்றது.
பூனம் மாலகொண்டையா
துணிச்சலான செயல்களுக்காகவே ஏழு ஆண்டுகளில் ஏழு முறை பணி மாற்றம் செய்யப்பட்டவர். எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் விட்டுக்கொடுக்காமல் தன் கடமையைச் செய்பவர். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விவசாயிகளுக்கும் விவசாய நிலத்துக்கும் பெரும் பாதிப்பு உண்டாகியுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்திய மான்சாண்டோ அமெரிக்க நிறுவனத்தைக் கேள்வி கேட்கத் தயங்கிய அரசியல் சூழ்நிலையில், அதிக விலையில் விதைகளை விற்றதற்காக Monopolies and Restrictive Trade Practices ஆணையத்தின் முன் நிறுத்தியவர்.
No comments:
Post a Comment