இ சேவை மையங்கள் மூடல்: சான்றிதழ் பெறமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு
தாம்பரம், பல்லாவரம் பகுதியில் இ சேவை மையங்கள் மூடப்பட்டுள்ள தால் சான்றிதழ் பெறமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மக்கள் தங்குதடையின்றி அரசின் பல்வேறு சான்றிதழ்களை மிக எளிதாக பெறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாலுகா வாரியாக இ சேவை மையங்களை தொடங்கி னார்.
இம்மையங்களில் வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், விதவை மறுமண நிதி உதவி திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதி உதவி திட்டம், கலப்பு திருமண சான்று, ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டங்களுக்கான சான்றுகளை எளிதில் பெற முடியும்.
மேலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் ஒவ்வோரு தாலுகாவிலும் பல்வேறு பகுதிகளில் இ சேவை மையங்கள் தொடங்கப் பட்டன. எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவை இந்த இ-சேவை மையங்களை நடத்தி வந்தன. இதில் எல்காட் நிறுவனம் பல இடங்களில் சேவை அளித்து வந்தது. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஒரு சில இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு பயனளித்து வந்த எல்காட் இ சேவை மையங்கள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஒவ்வொரு தாலுகா அலுவலகத்துக்கும் ஒரு இ-சேவை மையம் மட்டுமே உள்ளது. இதனால் குறித்த நேரத்தில் சான்றிதழ் கிடைப்ப தில்லை. தற்போது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அரசின் உதவித் தொகை பெறுவதற்கும் சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. இவை தாலுகா அலுவலகத்தில் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. ஒரு மையத்தில் இரண்டு கணினி மட்டும் இருப்பதால் மக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சிரமம் தொடர்கிறது.
இது குறித்து மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன வட்டாட்சியர் கூறியதாவது:
எல்காட் நிறுவனம் மூலம் பல இடங்களில் இ-சேவை மையங்கள் இயங்கி வந்தது. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் முழுமையாக இந்த சேவை வழங்கப்படவுள்ளதால் எல்காட் மூலம் இயங்கி வந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் புதியதாக சேவை மையங்கள் ஓரிரு தினங்களில் தொடங்கப்படவுள்ளன என்றார்.
No comments:
Post a Comment