Tuesday, June 20, 2017

நடுவானில் பறந்து கொண்டிருந்த சீன விமானம் காற்று சுழற்சியில் சிக்கி குலுங்கியதால் 26 பயணிகள் காயம்

2017-06-19@ 15:34:32


பெய்ஜிங்: சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து சீனாவின் தென்மேற்கு நகரமான கன்மிங் வந்து கொண்டிருந்தது. அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம், வான்பரப்பில் காற்று வெற்றிடம் அல்லது காற்று சுழற்சி ஆகியவற்றால் ஏற்படும் அதிர்வுகளால் அதிர்ந்தது. டர்புலன்ஸ் எனப்படும் இந்த காற்று சுழற்சியில் சிக்கி விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதில் விமான பயணிகள் பலர் காயம் அடைந்தனர். மேல்லாக்கர்களில் மோதியும் லக்கேஜ்கள் பயணிகள் மீது விழுந்ததிலும் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதில் 26 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனம், சீனாவில் உள்ள வெய்போ சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், விமான பயணிகளுக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இரண்டு முறை மிகவும் வலுவான டர்புலன்ஸ்களும், மூன்று முறை லேசான டர்புலன்ஸ்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வாரத்தில் இரண்டாவது முறையாக சீன ஏர்லைன்ஸ் விமானம் இத்தகைய சம்பவத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024