அற்றுப் போய்விடுமோ அரவை மில் சத்தம்..?
நெல் அரவை மில்லில் இருந்து வரும் காதைப் பிளக்கும் கர..கர.. சத்தம். தவிட்டு மழையில் நனைந்து நிற்கும் அரவைக்காரர். கரகரப்பை மிஞ்சிய டெசிபலில் அவரோடு அரவைக் கூலியை அவதானிக்கும் சம்சாரிகள்.. இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் அரவே வழக்கொழிந்துவிடும் போலிருக்கிறது.
முன்பெல்லாம், ஓரளவுக்கு பெரிய ஊராக இருந்தால் நிச்சயம் ஒரு நெல் அரவை மில் இருக்கும். சம்சாரிகள் தங்களது நிலத்தில் அடித்த நெல்லை, கருக்கலில் அவித்து பக்குவமாய் காயவைத்து பதம் பார்த்து அரைப்பதற்காக இந்த அரவை மில்லுக்கு வண்டிகட்டி வருவார்கள்.
அலம்பல் அரவைக்காரர்
அரவைக்காரர் வருவதற்கு முன்னதாகவே நெல்லைக் கொண்டுபோய் வரிசையில் வைத்துவிட்டுக் காத்துக் கிடப்பார்கள். அரைக்கால் டிராயரை மாட்டிக் கொண்டு, கடைவாயில் வெற்றிலையை அதக்கியபடி ஒன்பது மணிக்கு ஆடி அசைந்து வருவார் அரவைக்காரர். மில் முதலாளிகூட அவ்வளவு பிகு பண்ணமாட்டார்.. இவரது அலம்பல் தாங்கமுடியாது. அதனால், நம்மவர்கள் அவரிடம் அவ்வளவு பவ்யம் காட்டுவார்கள்.
கிடக்கும் நெல் மூட்டைகளை கண்களால் கணக்குப் போட்டபடியே மெஷினைத் தட்டிவிடுவார்; கரகரக்க ஆரம்பித்துவிடும் சத்தம். பொழுது சாய்ந்த பிறகும் ஓயாத இந்த சத்தம் சில சமயங்களில் 2 கிலோ மீட்டருக்கு அப்பாலும் எதிரொலிக்கும். இப்படி, சம்சாரிகள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக ஏகாந்தம் பரப்பிய நெல் அரவை மில்களை இப்போது பார்க்கமுடியவில்லை. எல்லாம் ‘மார்டன் ரைஸ் மில்’ மயமானதால் சம்சாரிகளும் இப்போது பளபளக்கும் பை அரிசிக்கு மாறிவிட்டார்கள்.
இதுவும் எத்தனை நாளைக்கோ?
இதனால், பெரும்பாலான ஊர்களில் அரவை மில்கள் இழுத்துமூடப்பட்டு விட்டன. மிளகாய் பொடி, மாவு வகைகள் அரைப்பதை நம்பி ஏதோ ஒரு சில மில்கள் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் ஓடிக் கொண்டி ருக்கின்றன. இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ! “எங்க மில்லை ஆரம்பிச்ச புதுசுல இங்கிருக்கிற மழவராயர் வீட்டுல ரெண்டு நாளு காத்துக்கிடந்து நெல் அரைச்சிட்டுப் போவாங்களாம். ஆனா இப்ப, நாள் முழுக்கக் காத்துக் கெடந்தாலும் ஒரு மூட்டை நெல் அரவைக்கு வரமாட்டேங்குது. இந்த லட்சணத் துல ஓடுனா கரன்டு பில்கூட கட்டமுடியாதுன்னு தெரிஞ்சுது. அதனால, மில்லை மூடிட்டோம்’’ என்கிறார் மூன்றாவது தலைமுறையாக அரவை மில் வைத்திருந்த நல்லூர் ரமேஷ்,
என்ன நெல்லுல வந்த அரிசின்னே தெரியாம, எப்படி தயாராகுதுன்னே தெரியாம அதை வாங்கிச் சாப்டுறாங்க. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க.
“எங்க மில்லை ஆரம்பிச்ச புதுசுல இங்கிருக்கிற மழவராயர் வீட்டுல ரெண்டு நாளு காத்துக்கிடந்து நெல் அரைச்சிட்டுப் போவாங்களாம். ஆனா இப்ப, நாள் முழுக்கக் காத்துக் கெடந்தாலும் ஒரு மூட்டை நெல் அரவைக்கு வரமாட்டேங்குது. இந்த லட்சணத் துல ஓடுனா கரன்டு பில்கூட கட்டமுடியாதுன்னு தெரிஞ்சுது. அதனால, மில்லை மூடிட்டோம்’’ என்கிறார் மூன்றாவது தலைமுறையாக அரவை மில் வைத்திருந்த நல்லூர் ரமேஷ்,
பை அரிசிக்கு பழகிட்டாங்க
தட்டுத் தடுமாறி அரவை மில் நடத்திக் கொண்டி ருக்கும் ஆச்சாள்புரம் மயில் வாகனன், “விவசாயக் குடும்பங்கள்லயே இப்ப நெல் அரைச்சுச் சாப்பிடும் பழக்கம் குறைஞ்சு போச்சு. வெளஞ்ச நெல்ல களத்து மேட்டுலயே வித்துக் காசாக்கிட்டு பை அரிசியை வாங்கிச் சாப்பிடப் பழகிட்டாங்க. அதனால, எங்களுக்கு வேலை இல்லாம போச்சு. ஏதோ, மிளகாய் பொடி, மாவுன்னு அரைக்க வர்றவங்களால எங்களுக்கு வாய்க் கும் கைக்குமா பொழப்பு ஓடுது’’ என்கிறார்.
சீர்காழி அருகே திருமைலாடி யிலிருந்து நெல் அரைக்க வந்திருந்த ராஜேந்திரன் “பகட்டா தெரியும் பை அரிசியில எவ்வளவு கெடுதல் இருக்கு தெரியுமா? என்ன நெல்லுல வந்த அரிசின்னே தெரியாம, எப்படி தயாராகுதுன்னே தெரியாம அதை வாங்கிச் சாப்டுறாங்க. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. ஒருமூட்டை நெல் அரைச்சா இரண்டு மாசத்துக்கு வரும். தீர்ந்துட்டா திரும்ப அரைச்சுக்குவோம். இதுல உள்ள திருப்தியும், தெம்பும் வேற எதுலயும் வராதுங்க’’ என்கிறார்.
ராஜேந்திரன்கள் இருப்பதால் தான் இன்னமும் எங்காவது ஒரு மூலையிலாவது நெல் அரவை மில்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருக் கின்றன.
No comments:
Post a Comment