Sunday, June 25, 2017

குழந்தைகளை நிமிடத்தில் மரணிக்கச் செய்யும் செடி இருக்கிறதா? வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

இரா.கலைச் செல்வன்

“ஜாக்கிரதை... இது ஓர் உண்மைக் கதை. சமீபத்தில் என் மகன், இந்தச் செடியின் இலையை சாப்பிட்டதால் இறந்து விட்டான். இது நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் ஒரு செடிதான். ஆனால், நாம் நினைப்பதுபோல் இது அத்தனை அழகானது அல்ல... மிகவும் ஆபத்தானது. இது ஒரு குழந்தையை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடும். ஒரு பெரியவரை 15 நிமிடத்தில் கொன்றுவிடும். இந்தச் செடியில் கைகளை வைத்துவிட்டால், தயவு செய்து அதைக் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை பறி போகும் வாய்ப்புகள் அதிகம். உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து, அவர்களைக் காப்பாற்றுங்கள்..." சமீபத்தில் இந்தச் செய்தி வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டது. இதே செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இப்படி பகிரப்பட்டது. ஆனால், இது உண்மை தானா?



இன்று டெக்னாலஜி ஆளும் யுகத்தில் இருக்கிறோம். ஜஸ்ட் ஒரு க்ளிக்... அவ்வளவுதான். எங்கும், எப்போதும் , எதுவும், கிடைக்கும். இன்று தகவல்கள் என்பது ஒரு கடல் அலை பொங்கி வருவது போல் நமக்கு கிடைக்கின்றன. அதிகப்படியான விஷயங்களைத் தெரிந்துக் கொள்வது நல்லதுதான். ஆனால், பல சமயங்களில் அந்த அலை பல குப்பைகளையும் கொண்டு வந்து விடுகிறது. இந்தத் தகவல்களில் உண்மையையும், பொய்களையும் பிரித்தறிவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது... அல்லது அதற்கான சிரத்தையை நாம் மேற்கொள்வதில்லை. சரி... இந்த செய்திக்கு வருவோம். நிச்சயம் நம்மில் பலர் இந்த செய்தியையோ... இப்படியான ஏதோ ஓர் செய்தியையோ அது என்ன, ஏது என்ற உண்மையை ஆராயமல் பலருக்கும் பகிர்வோம். அது பலருக்கும் தேவையற்ற அச்சத்தையும், உணர்வுக் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியும் கிட்டத்தட்ட அப்படித்தான்...

இது " டைஃபன்பேக்கியா " ( Dieffenbachia ) என்ற ஒரு செடி வகை. இது அழகிற்காக வளர்க்கப்படும் செடி. பெரும்பாலும் அபார்ட்மெண்ட்களில், அலுவலகங்களில் உள்ளேயே வைத்து வளர்க்கப்படுகிறது. இரண்டு வாரத்திற்கொரு முறை இதற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். குறைந்தளவிலான சூரிய வெளிச்சம் இதற்குப் போதும். தேவையும் அதுதான். வெட்டவெளியில் வைத்து வளர்த்தால் மொத்த செடியும் கருகிவிடும். இதன் பூர்வீகம் மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அர்ஜெண்டினா என்று சொல்லப்படுகிறது. இன்று உலகம் முழுக்கவே, அலங்காரத்திற்காக இந்தச் செடி வளர்க்கப்படுகிறது. பரவும் செய்திகள் சொல்லும் அளவிற்கு இது அபாயகரமானதா என்று கேட்டால்... பதில் இல்லை என்பதுதான்.



டைஃபன்பேக்கியா குறித்து முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டவர், அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் யூனிவர்சிட்டியின் பேராசிரியர் எட் க்ரென்ஸெலோக். அவர் பரவும் இந்த வதந்திகள் குறித்து இப்படியாக பதிவிட்டுள்ளார்...

“நான் பல ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். என்னைச் சுற்றி இந்த "டைஃபன்பேக்கியா"க்கள் எப்போதும் இருக்கும். ஆனால், என் அனுபவத்தில் இதுவரை இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதில்லை. சமயங்களில் இதிலிருந்து வெளியேறும் பால் கைகளிலோ, கண்களிலோ பட்டால் சற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்." என்று சொல்லியுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவியல் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.

டைஃபன்பீக்கியாவில் கால்சியம் ஆக்சோலேட் ( Calcium Oxalate ) என்ற வேதியியல் பொருள் உள்ளது. அது ஒரு ஊசியைப் போல, ஒரு பக்கம் கூர்மையாக உருமாறுகிறது. இதை ராஃபைட்ஸ் ( Raphides ) என்று சொல்கிறார்கள். அந்தச் செடியின் இலைகளை உடைக்கும் போதோ, அல்லது பிற பகுதிகளை தொந்தரவு செய்யும் போதோ, இந்த ராஃபைட்ஸ் நம் கைகளில் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஒரு வித எரிச்சலை அளிக்கும். சமயங்களில் மரத்துப் போகும் உணர்வினை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் சமயங்களில் மற்றபடி பார்வை பறி போகும் என்பதெல்லாம் வதந்திதான்.



டைஃபன்பேக்கியாவை "டம்ப் பிளான்ட்" ( Dumb Plant ) என்று சொல்கிறார்கள். அதாவது, " ஊமைச் செடி ". இதை சாப்பிடுபவர்கள் ஊமையாகிவிடுவார்கள் என்ற ஒரு வதந்தியும் இருக்கிறது. ஆனால், அது அப்படிக் கிடையாது. இலை நாவில் படும்போது, ராஃபைட்ஸ் நாவினை மரத்துப் போகச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல், அது வாயை வீங்கச் செய்துவிடும். இதனால், சில மணி நேரங்களுக்கு சரியாக பேச முடியாது. இது குறித்த ஒரு வரலாற்றுப் பதிவையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, அந்தக் காலங்களில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக கொண்டு செல்வார்கள். அப்போது, சில முதலாளிகள் அடிமைகளின் வாய்களில் இந்தச் செடிகளைப் போட்டு, அவர்கள் பயப்படுவதைக் கண்டும், பேச முடியாமல் அலறுவதைக் கண்டும் சிரித்து விளையாடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படி, நிகழ்கால ஆராய்ச்சிகளிலும், கடந்த கால வரலாறுகளிலும் கூட இந்தச் செடிகள் உயிரைப் பறித்தாக எந்த சான்றுகளும் இல்லை. இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி வேளான் அலுவலரான ரூபன் செல்வக்குமாரிடம் கேட்டபோது,

"அழகிற்காக வளர்க்கப்படும் இந்தச் செடிகள் அவளவு ஆபத்தானவை அல்ல. இதுகுறித்த ஆராய்ச்சிகள், தமிழ்நாட்டில் எங்கும் நடந்ததில்லை. அதனால், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், அதுதான் உண்மையாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், இந்தச் செடி உயிர் பறிக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கும்பட்சத்தில், உலகளவில் இது பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், அத்தனை வீடுகளிலும், அலுவலகங்களிலும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன. " என்று சொல்கிறார். இப்படி மொத்தமாக ஆராய்ந்துப் பார்க்கும்போது, பல லட்சம் ஷேர்களைக் கண்ட அந்த செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என்பது நிரூபணமாகிறது.



இன்றைய யுகத்தின் ஆகச் சிறந்த ஆயுதமாக இருப்பது நம்முடைய செல்போன்கள். அதில் நாம் பகிரும் ஒவ்வொரு தகவல்களும், ஒரு அணுகுண்டிற்கு ஒப்பானவை. எனவே, அந்த அணுகுண்டுகளைக் கைமாற்றும் போது அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனென்றால், அந்த குண்டு வெடித்தால் பாதிக்கப்படப் போவது நீங்களும் , நானும் தான்...

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...