Saturday, June 17, 2017


அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல' !!

அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் பணி நியமன விவகாரம் தொடர்பான வழக்கு குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் சிலர்
நேரில் ஆஜராக வேண்டுமென்று அந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. அப்போது, அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வர முடியாத நிலையில் இருந்தனர். ஆனால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்' என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

அரசு அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு உயரதிகாரியாவது குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அதே நேரத்தில், இந்த வழக்குக்காக சிஆர்பிஎஃப் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024