ரஜினி, அஜித், விஜய் இணைந்தால் அரசியலில் மாற்றம் வரும்: புதுசு புதுசா ஐடியா கொடுக்கும் எஸ்.வி.சேகர்!
ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்று இன்னும் அவரே அறிவிக்கவில்லை. அதற்குள் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க, ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் இணைந்து அரசியலுக்கு வந்தால், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி, “வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து செய்தி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த எஸ்.வி.சேகர், ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று பெரும் இணைந்தால், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறி இருக்கிறார்.
மேலும், அரசாங்க பணத்தையோ, மக்கள் பணத்தையோ திருட வேண்டிய இடத்தில் ரஜினி இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?
தங்களை சினிமா இயக்குநர் என்று சொல்லிக்கொள்ளும் சிலரே, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என ஊளையிடுகிறார்கள். அவர்கள் கட்சிக்கு பணம் எங்கேயிருந்து வந்தது என்பதை சொல்வார்களா?
நதிநீர் இணைப்பை ஆரம்பித்தால் 1 கோடி ரூபாய் கொடுப்பதாக சொன்ன ரஜினியிடம், இப்போதே ஒரு கோடி ரூபாயை கேட்கும் அய்யாக்கண்ணு, மீதி பணத்தை போட்டு அந்த திட்டத்தை நிறைவேற்றுவாரா?
ரஜினியை பார்க்க வேண்டும். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு போய்விட்டு, அதன் பிறகு எதையாவது கூறுவதா?
ரஜினி அரசியலுக்கு வருவார். அவர் கிங்காக வருகிறாரா? கிங் மேக்கராக வருகிறாரா? என்று தெரியாது. அவர் விஜய்யையும், அஜித்தையும் அழைத்து பேச முடியும்.
நாம் மூவரும் இணைந்து செயல்படலாம் என்று கூற முடியும். நான் வழிகாட்டுகிறேன், எனக்கு பிறகு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூற முடியும்.
அவர்கள் மூவரும் இணைந்து செயல்பட்டால் நல்லாட்சி கொடுக்க முடியாதா என்ன? நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?
சொந்த பணத்தில் அரசியல் நடத்த வருபவர்களை பார்த்து கேள்வி கேட்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
Dailyhunt
No comments:
Post a Comment