Sunday, June 25, 2017

ஆம்’ என்கிறார் அமைச்சர்... ‘இல்லை’ என்கிறார் செயலாளர்...! என்னதான் நடக்கிறது பால் கலப்பட விவகாரத்தில்?

கே.பாலசுப்பிரமணி




"தனியார் பால் நிறுவனங்கள், பாலில் உயிருக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்களைக் கலக்குகிறார்கள்" என்று கடந்த மே மாதம் 24 ஆம் தேதி அதிரடி குண்டைத் தூக்கி வீசினார்பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இது தமிழகத்தையே அதிர வைத்தது. ஆனால், எந்த நிறுவனத்தின் பாலில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அமைச்சர் சொல்லவில்லை.


புனே ஆய்வு நிறுவனம் மறுப்பு

பொத்தாம், பொதுவான அவரது அதிரடிக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். எந்த நிறுவனம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். ஆனால், இதுவரை அவர் அது குறித்து வாய் திறக்கவில்லை.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டார். "பால் கலப்படம் என்பது உண்மைதான். புனேவுக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்" என்றார். ஆனாலும், அதிலும் அமைச்சருக்கு சறுக்கல்தான். புனே ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து, "எங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பால் மாதிரி எதுவும் சோதனைக்காக வரவில்லை" என்று கூறி அமைச்சரை அதிர வைத்தார்கள்.

ராஜினாமா நாடகம்

உச்சகட்டமாக, "பாலில் கலப்படம் இருப்பது உண்மைதான். நான் அதை நிரூபிக்கத் தவறினால், பதவியை ராஜினாமா செய்யத் தயார்" என்று அறிக்கை விட்டார். இந்த அதிரடி அறிக்கைக்குப் பின்னர், பால் கலப்படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சைலண்ட் ஆகிவிட்டார். தொடர்ந்து பால் கலப்படம் என்று கூறி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முதல்வர் பழனிசாமி, "எதையும் ஆதாரம் இல்லாமல் பேசி மாட்டிக்கொள்ளாதீர்கள்" என்று அறிவுறுத்தினாராம். பால் கலப்பட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர் பொது நல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த 19 ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், "2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2017 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழகம் முழுவதும் 886 பால் மாதிரிகள் எடுத்துச் சோதனை செய்யப்பட்டது. அதில் தண்ணீர் மற்றும் காய்கறி கொழுப்பு கலந்து விற்பனை செய்ததாக 132 மாதிரிகளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் சொல்லி இருக்கிறார். தரம் குறைந்த பால் மட்டுமே விற்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ராஜேந்திர பாலாஜிக்கு அதிகாரம் இல்லை

தவிர பால் கலப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு அமைப்புதான். உணவுப் பாதுகாப்புத்துறையின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களை தொடர்ந்து மாதிரிகள் எடுத்துச் சோதனைகள் செய்து வருகிறார்கள். கலப்படம் இருந்தால், நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பால் வளத்துறை அமைச்சர் என்ற முறையில், பால் கலப்படம் குறித்து அவருக்கு எந்தத் தகவல்களும் தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால், இதெல்லாம் தெரியாமலேயே அதிரடி அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து ராஜேந்திரபாலாஜி மாட்டிக்கொண்டார். பால் கலப்படம் குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. எதற்காக திடீரென்று ராஜேந்திர பாலாஜி பால் கலப்படம் என்று அறிவித்தார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

உண்மை இதுதான்

உண்மையில் இதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஊரைச் சேர்ந்த ஒரு தனியார் பால் நிறுவனம், ஆவினுக்கு இணையாக தமிழகம் முழுவதும் பால் விற்பனையில் ஈடுபடுகிறது. அந்த நிறுவனத்துக்கும் அமைச்சருக்கும் இடையே எழுந்த மோதல்தான் இந்த அளவுக்கு வந்து நின்றிருக்கிறது என்கிறார்கள். எனினும் அமைச்சரின் அதிரடிக்கு அந்த நிறுவனம் பணியவில்லை. "நாங்கள் எந்தவித கலப்படமும் இல்லாமல் பால் விற்கிறோம். முடிந்தால் அமைச்சர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்" என்று சொல்லிவிட்டு, அமைதியாக இருந்து விட்டார்கள். இப்போது அமைச்சர் பேசியது போல பாலில் உயிருக்கு ஆபத்தான ரசாயனங்கள் இல்லை என்று நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது. சொன்னபடி ராஜினாமா செய்வாரா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று பல்வேறு மட்டத்திலும் நெருக்கடி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...