Sunday, June 25, 2017

மனுக்கள் அளித்தே பள்ளியை சீராக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

ANANDARAJ K




"மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு ஓர் ஆசிரியரின் கடமை முடிந்துவிடுவதில்லை. நல்ல குடிமக்களை உருவாக்குவதிலும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது என் எண்ணம். ஆசிரியர்கள் செய்யும் நல்ல விஷயங்கள், மாணவர்கள் மனதில் நன்றாகப் பதிந்து, நாம் சொல்லாமலே அவர்களைச் செய்யவைக்கும். அதனால்தான் என்னால் முடிந்த சிறுசிறு சமூக விஷயங்களைச் செய்துவருகிறேன்" என அடக்கமாகப் பேசுகிறார், ஆசிரியர் சாந்தகுமார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள சானார்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். சலிப்பின்றி மனுக்களைக் கொடுத்து பள்ளியின் தேவைகளைப் பெறுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தேவைப்படுவோருக்கான உதவிகளைப் பெற்றுத் தருவது, மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகளை உருவாக்குவது என இவரது சமூக அக்கறை நீள்கிறது.



"கும்பகோணம் தீ விபத்து சம்பவம் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச்சு. நாம் வேலை செய்யும் இடத்தில் ஒரு குழந்தைக்குக்கூட சின்ன விபத்து நடந்துடக்கூடாதுனு உறுதியாக இருந்தேன். சில வருஷங்களுக்கு முன்னாடி, பள்ளிக்குள்ளே இருந்த டிரான்ஸ்ஃபார்மரில் அடிக்கடி தீப்பொறி வந்துட்டு இருந்துச்சு. பள்ளிக்கு மேலாக உயரழுத்த மின் கம்பியும் இருந்துச்சு. இது எந்த நேரத்திலும் மாணவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கலாம்னு நினைச்சேன். கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியாக மனுக்களைப் போட்டு இரண்டையுமே வேறு பகுதிக்கு மாற்றினேன். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் ஒரு மூடாத கிணறு இருந்துச்சு. அதைச் சுற்றி இரும்புத் தடுப்புகள் அமைக்க வைத்தேன்'' என்கிறார் சாந்தகுமார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கடந்த ஏழு ஆண்டுகளில் முந்நூற்றுக்கும் அதிகமான மனுக்களை விண்ணப்பித்து, பலவற்றில் வெற்றிபெற்றிருப்பது இவரது ஹைலைட்.



''எல்லாமே பள்ளிக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்படும் விஷயங்கள். ஆண்டுதோறும் திருச்செங்கோடு நகராட்சி சார்பில், அரசுப் பள்ளிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கல்விப் பணிகளுக்குச் செலவழிக்க வேண்டும் என்பது நடைமுறை. இந்தச் செலவினங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ, அந்தப் பணம் முறையாக பல பள்ளிகளுக்கும் செலவழிக்கப்படுது. டி.எல்.ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட தேர்தல் சார்ந்த முகாம் பணிகளுக்கும், கள ஆய்வு மற்றும் மனு வாங்கும் பணிகளுக்கும் உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாங்க. இதை எதிர்த்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுக் கொடுத்தேன். இப்போ, உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் டி.எல்.ஓ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்காங்க" என்கிற சாந்தகுமார், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் தான் பணியாற்றும் பள்ளிகளுக்கு உதவி பெற்றுள்ளார்.

"பல வருஷங்களுக்கு முன்னாடி கல்வி அதிகாரி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அலுவலகச் செலவுக்காக எல்லா ஆசிரியர்களும் குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கணும்னு கேட்டு வாங்கினார். இதை எதிர்த்து கலெக்டரிடம் புகார் கொடுத்து, பணத்தைத் திரும்ப வாங்கினோம். மற்றொரு கல்வி அதிகாரி, ஆசிரியர்கள் பணம் கொடுக்க வேண்டும் என சர்க்குலரே வெளியிட்டார். அதனை ஆதாரமாக வைத்து பள்ளிக் கல்வி இயக்குநருக்குப் புகார் அனுப்பினேன். அந்த அதிகாரியைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தாங்க. எங்கள் ஒன்றியத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரை தரக்குறைவாகப் பேசிய தாசில்தார் பற்றி, உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து மன்னிப்பு கேட்கவெச்சேன். திருச்செங்கோட்டில் தனியார் கட்டடத்தில் இயங்கிவந்த அரசு நூலகத்தை, பல முயற்சிகளுக்குப் பிறகு அரசுக் கட்டடத்துக்கு மாத்தினேன்'' என்று அடுக்குகிறார் சாந்தகுமார்.



மாணவர்களிடமும் சமூகச் சிந்தனையை விதைக்கும் விதமாக, பள்ளி மற்றும் அவரவர் வீடுகளுக்கு அருகே இருக்கும் மரங்களிலிருந்து விழும் விதைகளைச் சேகரிக்கச் செய்கிறார் சாந்தகுமார். ''அப்படிச் சேகரிக்கும் விதைகளை மழைக்காலங்களில் விதைப்பந்துகளாகத் தயார்செய்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசுவோம். விதைப்பந்துகள் பலவும் செடிகளாகி, மரங்களாக வளர்ந்துட்டிருக்கு'' எனப் புன்னகைக்கிறார்.
தனது அடுத்த செயல்பாடாக, பள்ளியில் பாழடைந்த நிலையிலிருக்கும் எ.எஸ்.ஏ கட்டடம் ஒன்றை இடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார் சாந்தகுமார்.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...