Saturday, July 15, 2017

மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பதிவு செய்த நாள் 14 ஜூலை
2017
23:58

சென்னை: 'மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க முடியாது' என்றும், உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தியது. இதில், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என, ௨௫க்கும் மேற்பட்ட மொழிகளில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும், தனித்தனி கேள்விகள் இடம் பெற்றன. அதில், சில எளிதாகவும், சில கடினமாகவும் இருந்தன. அதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இதை எதிர்த்து, நீட் தேர்வு எழுதிய, ௨௫க்கும் மேற்பட்ட மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை, மருத்துவ கவுன்சிலிங் நடத்த, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய, மூன்று நீதிபதிகள் பெஞ்சில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், சுப்ரமணியம் பிரசாத் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மனுதாரரர்கள் தரப்பில், 'நீட் போன்ற அகில இந்திய நுழைவு தேர்வில், நாடு முழுவதும், ஒரே வினாத்தாள் மூலம் தான் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு மொழியிலும், தனித்தனி வினாத்தாள் அளித்தது சட்டத்துக்கு புறம்பானது. இதன்மூலம், அகில இந்திய அளவில் மாணவர்களை, சமமாக தரப்படுத்த முடியாது. எனவே, மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுவரை, மருத்துவ கவுன்சிலிங் நடத்த, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என வாதிடப்பட்டது.

மத்திய அரசின் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் வாதாடுகையில், 'ஒவ்வொரு மொழி வினாத்தாளையும், அந்தந்த மொழி சார்ந்த, துறை வல்லுனர்கள் மூலம் ஆய்வு செய்து விட்டோம்; வினாத்தாள்கள் சமமாகவே உள்ளன. பல்வேறு மாநிலங்களில், நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதற்கு மாறாக, ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அது, மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்' என்றார்.

இதை ஏற்ற நீதிபதிகள், 'நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; மருத்துவ கவுன்சிலிங் நடத்தவும் தடை விதிக்க முடியாது' என, உத்தரவிட்டனர். மேலும், 'இந்த பிரச்னையில், எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, உரிய தீர்வு காணப்படும்' என கூறிய நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு, சி.பி.எஸ்.இ.,க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை, வரும், ௩௧க்கு தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...