ஆதார் உடன் தொலைபேசி எண் இணைக்க கொடுத்த விலை ரூ. 1.3 லட்சம்!
By DIN | Published on : 12th October 2017 04:06 PM
நாடு முழுவதும் தனி நபரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மேலும், தனி நபருடைய தொலைபேசி, பான் கார்டு, வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்தும் அதார் உடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதார் எண் உடன் தனது தொலைபேசி எண் இணைப்பது தொடர்பான விவகாரத்தின் போது இளைஞரிடம் ரூ. 1.3 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மும்பையைச் சேர்ந்தவர் சாஷ்வந்த் குப்தா, இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது ஆதார் எண் உடன் தொலைபேசி எண் இணைக்க முயற்சித்தார்.
அப்போது, குப்தாவின் நம்பருக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண் 121-க்கு சிம் கார்டு நம்பருடன் குறுஞ்செய்தி அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது ஆதார் மற்றும் தொலைபேசி எண் இணைப்பது தொடர்பான நடவடிக்கை என்று நினைத்த குப்தாவும் அதில் குறிப்பிட்டது போன்று செய்துள்ளார்.
அவ்வாறு குப்தா குறுஞ்செய்தி அனுப்பிய சில மணித்துளிகளில் அவரது தொலபேசி எண் செயலிழந்தது. அவருக்கு குறுஞ்செய்தி வந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது செயல்பாட்டில் இல்லை.
இதற்குள்ளாக குப்தாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.3 லட்சம் திருடப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தொலைபேசியில் வரும் இதுபோன்ற அழைப்புகள் குறித்து காவல்துறையில் புகார் செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
No comments:
Post a Comment