Wednesday, May 20, 2015

நர்சுகளுக்கு தனி பல்கலைக்கழகம்


தமிழ்நாட்டில் எந்த அரசு பணி என்றாலும், வேலைக்கு ஆள் எடுக்க அறிவிப்பு வந்தால்போதும், ஆயிரக்கணக்கான என்றநிலை மாறி, லட்சக்கணக்கில் படித்து முடித்து வேலை இல்லாத இளைஞர்களும், இளம்பெண்களும் விண்ணப்பம் செய்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர், வரித்தண்டலர் போன்ற பணிகளுக்கு 4,963 பேர்கள் எடுக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டவுடன், அதற்கான தேர்வை எழுத 12 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல, தமிழ்நாடு காவல்துறையில் 1,078 சப்–இன்ஸ்பெக்டர் பணிக்காக நடக்கப்போகும் தேர்வுக்கு, ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இப்போது தமிழக அரசின் மருத்துவசேவைகள் தேர்வு வாரியத்தின் சார்பில் 7,243 ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அறிவிப்பு வந்துள்ள நிலையில், ஏறத்தாழ 40 ஆயிரம் விண்ணப்பங்களே வந்துள்ளன. இதில் நிச்சயமாக பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். ஆக, நர்சு வேலைக்கு படித்தவர்களில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேபோகிறது. இந்த மருத்துவமனைகளில் எல்லாம் டாக்டர்களின் எண்ணிக்கையைவிட, நர்சுகளுக்கு அதிக கிராக்கி இருக்கிறது. வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறமுடியும். இதுமட்டுமல்லாமல், அரபு நாடுகள் உள்பட வெளிநாடுகளிலும் உள்ள மருத்துவமனைகளில் நல்ல சம்பளத்துடன் இந்திய நர்சுகள் என்றால் கருணை உணர்வுமிக்கவர்கள், பிளாரன்சு நைட்டிங்கேல் போல ஒளிவிளக்கு பெண்மணியாக, வெண்ணிற ஆடை தேவதைகளாக அன்னை தெரசா போல இருப்பார்கள் என்ற எண்ணத்தில், நோயாளிகளை காக்கும் கரங்களாக திகழ்வார்கள் என்று முன்னுரிமையை அவர்களுக்கே கொடுக்கிறார்கள். கேரளாவில் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, அந்த மாநிலத்தில் நர்சு படிப்பு படித்தவர்களை வழிகாட்டி, நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப உதவுகிறார்கள். இப்போது மத்திய அரசாங்கம், தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்பட 3 நிறுவனங்களை மட்டும் வெளிநாடுகளில் நர்சு வேலைக்கு தேர்வு செய்வதற்காக அங்கீகாரம் அளித்துள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு நிறுவனம் கேரள அரசுத்துறையைச் சேர்ந்தது. தமிழக அரசின் நிறுவனம் இந்த நல்லவாய்ப்பை நழுவவிடாமல், அயல்நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழக நர்சுகளை அனுப்புவதில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கவேண்டும்.

தமிழக நர்சுகள் அன்பானவர்கள், இரக்கமுள்ளவர்கள், கருணை, தியாக உணர்வுமிக்கவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. ஆனால், அவர்களின் பணித்திறமை ஒளிரும் வகையில் நவீனகாலத்தில் உள்ள நோய்கள், அதற்கான சிகிச்சைமுறைகளுக்கேற்ப அவர்களின் பாடத்திட்டங்கள், செயல்முறைகள் மேம்படுத்தப்படவேண்டும். இதற்கு வசதியாக இப்போது தமிழ்நாட்டில் உள்ள 169 நர்சிங் கல்லூரிகளையும் உள்ளடக்கி நர்சிங் படிப்புக்காக மருத்துவ பல்கலைக்கழகம் போல, நர்சிங் பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும். இதே கோரிக்கையை தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், அரசுக்கு விடுத்து அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. மருத்துவம், என்ஜினீயரிங், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம், ஆசிரியர் படிப்புகளுக்கு தனி பல்கலைக்கழகம் இருப்பதுபோல, நர்சிங் படிப்புக்கும் தனி பல்கலைக்கழகம் வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024