Tuesday, May 12, 2015

மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி!

கடந்த ஆறு மாதங்களாக நிலவிய இறுக்கமும், எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது. மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் முற்றிலுமாக வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி.ஆர். குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானியத் தமிழ் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளித்திருக்கிறது. கடந்த 3 மாதங்கள், யாரையும் சந்திக்காமல் தனித்திருந்து பிரச்னையை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஜெயலலிதாவின் மன உறுதிக்கும், அவரது விடுதலைக்காக வேண்டாத தெய்வமில்லை என்று பிரார்த்தித்த தொண்டர்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி இது! கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பதுதான். அதனால் பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததைத் தவறு காண முடியாது.
"சட்டத்தின் போர்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுக்கப்படுவதை ஊக்குவிக்கக் கூடாது. சட்ட நெறிமுறைகள், அரசமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைகளுக்கு உள்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துகள் குவித்ததாகக் கூறப்படும் கணக்குகளை ஆராயக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை அதிகாரி வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற நீதிபதி குமாரசாமியின் கருத்து வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த ஒவ்வோர் அம்சத்தையும், உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919 பக்கத் தீர்ப்பில் மிகத் தெளிவாக மறு ஆய்வு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல. விரிவாக அலசப்பட்ட, விவரங்களுடன் கூடிய தீர்ப்பு.
வழக்குப் பதிவு செய்த அன்றைய தி.மு.க. ஆட்சியில், கட்டுமானம் தொடர்பான பொதுப் பணித் துறைப் பொறியாளர்களின் மதிப்பீடுகள் அதிகப்படியாக இருந்தன என்பதாலும், திருமணச் செலவினங்கள் சரியாக மதிப்பிடப்படவில்லை என்பதாலும் அந்தச் செலவினங்களை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மறு மதிப்பீடு செய்திருக்கிறார். அதற்குப் பிறகு கணக்கிடும்போது வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு மொத்த வருமானத்தில் வெறும் 8.12%தான். இதன் அடிப்படையில்தான் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் உச்சநீதிமன்றமும், ஏனைய உயர்நீதிமன்றங்களும் காட்டியிருக்கும் முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறார். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் 10% வரை கணக்கில் காட்டப்படாத அல்லது கணக்குக் காட்ட முடியாத சொத்துகளை அனுமதிக்கலாம் என்கிற தீர்ப்பு முன்னுதாரணம் ஏற்கெனவே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ஆந்திர அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்ட, அரசு ஊழியர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில், கணக்கில் வராத சொத்தாக 20% வரை அனுமதிக்கலாம் என்பதை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், "மிகையான சொத்து மதிப்பு வெறும் 8.12%தான் என்பதால், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் நிரபராதிகள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைச் சரியான முறையில் கணிக்க கீழமை சிறப்பு நீதிமன்றம் தவறிவிட்டது என்றும், அதனால் கீழமை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றும் நீதிபதி குமாரசாமி தெரிவித்து, கீழமை சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் விதித்த தண்டனை, அபராதத் தொகை ஆகியவற்றை ரத்து செய்ததுடன் நான்கு பேரின் பிணையப் பத்திரங்களையும் விடுவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29.09.2014-இல் வெளியான "தினமணி' தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
"ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை' என்பதுதான் அது.
இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024