Tuesday, May 12, 2015

அரசு டாக்டர்கள் மேற்படிப்புக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசுப் பணியை ராஜினாமா செய்த மூன்று டாக்டர்களை மேற்படிப்பிற்கு அனுமதிக்க, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி தேவி சங்கீதா, சுப்பையா ஸ்ரீராம், ஜானகி. இவர்கள் அரசு உதவி மருத்துவர்களாக பணிபுரிந்தனர். பணியை ராஜினாமா செய்து 2015-16ல் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்தனர். 'ராஜினாமாவை ஏற்று மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்க உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் எம்.சரவணக்குமார் ஆஜரானார். அரசு வழக்கறிஞர், 'மருத்துவப் பணி தேர்வு வாரிய விதிகள்படி பணியில் சேர்ந்து ? ஆண்டுகள் முழுமை அடைந்தால் தான் முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்' என்றார்.

நீதிபதி உத்தரவு:

'மனுதாரர்களுக்கு 'ஹால்டிக்கெட்' வழங்க வேண்டும். தேர்வு முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்' என ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. பின், தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதித்தது. மனுதாரர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். எந்த கல்வி நிறுவனத்திலும் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தங்கள் லட்சியத்தை அடையும் நோக்கில் அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா ஏற்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நியாயமற்ற காரணங்களைக்கூறி மனுதாரர்களின் கனவை நசுக்குவது சரியான நடைமுறை அல்ல. தகுதியான டாக்டர்கள் நாட்டிற்கு அவசியம். அவர்களால் நோயற்ற சமுதாயம் உருவாகி, நாடு வளர்ச்சி அடையும். மனுதாரர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024