Tuesday, June 2, 2015

குற்றுயிராக கிடந்த வாலிபர்... காப்பாற்ற போராடிய கலெக்டர்... கண்டுகொள்ளாத 108 ஆம்புலன்ஸ்!

நாகப்பட்டினம்: நாகையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் நின்று போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அழைத்தும், 108 ஆம்புலன்ஸ் வாகனம் கடைசி வரை வரவில்லை.
நாகை டாடா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். மீனவரான இவர் மோட்டார் சைக்கிளில், நாகூரில் இருந்து நாகை நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார். அப்போது நாகை கலெக்டர் அலுவலகம் அருகில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அந்த சமயத்தில் கலெக்டர் பழனிச்சாமி தன் வீட்டில் இருந்து, அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். விபத்தை பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தினார்.

காரில் இருந்து இறங்கி அங்கிருந்தவர்கள் உதவியுடன் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி விபத்தில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தார். ஏராளமான ஆட்டோக்கள் சென்றபோதும், ஒரு ஆட்டோ டிரைவர் கூட நிறுத்தவில்லை. பின்னர் ஆட்சியரே மருத்துவ இணை இயக்குனரை தொடர்பு கொண்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் 108 ஆம்புலன்சும் வரவில்லை. 

கலெக்டர், 45 நிமிடங்களாக, நடுரோட்டில் நின்று அழைத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் கோபடைந்த கலெக்டர், மருத்துவமனை அதிகாரிகளைத் திட்டி தீர்த்து விட்டார். பின்னர் நாகையில்  நின்று கொண்டிருந்த ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா திட்டத்துக்கான ஜீப்பை எடுத்துக்கொண்டு, மருத்துவ இணை இயக்குனர் குருநாதனே சம்பவ இடத்துக்கு வந்தார். அதன்பிறகு  சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலையில் நின்று, உயிருக்கு போராடியவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அவருக்கு கைகொடுக்காமல் நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர்களின் செயலையும், அவசரத்திற்கு உதவாத, 108 ஆம்புலன்ஸ் சேவையையும் மக்கள் கடுமையாக விமர்சித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024