Saturday, June 20, 2015

தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி உறுதியளித்தார்.
தொடர்ந்து கலந்தாய்வு: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
இதே அரங்கில் சனிக்கிழமை (ஜூன் 20) முதல் தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை அனைத்துப் பிரிவு உள்பட பிற சமுதாயப் பிரிவு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அரசு தலைமை வழக்குரைஞர் உத்தரவாதம்: கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடுத்துள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி உத்தரவாதம் அளித்தார்.
பழைய மாணவர்களுக்கு எதிர்ப்பு: சென்னை, நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபிநாத் உள்பட 60-க்கும் மேற்பட்ட இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர் கபிலன் ஆகியோர் சென்ற ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எதிராகத் தொடுத்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய முக்கியப் பாடத் தேர்வுகள் எளிதாக இருந்ததாகவும், இந்த ஆண்டு இந்த முக்கியப் பாடத் தேர்வுகள் கடினமாக இருந்ததாகவும் வழக்கு தொடுத்தவர்களின் சார்பில் வாதிடப்பட்டது.
இதனால் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களின் எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்து விட்டது. எனவே கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
548 பழைய மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: இந்த வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, ""எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மொத்தம் 31,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில் 4,679 பேர் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த பழைய மாணவர்கள்; கட்-ஆஃப் மதிப்பெண்- சமுதாய ரேங்க் அடிப்படையில், பழைய பிளஸ் 2 மாணவர்களில் 548 மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து நடைபெற உள்ள கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
அடிப்படை ஆதாரமற்றது: எனவே மனுதாரர்கள் கூறுவது போல மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் (2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்), 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களில் (1,000-த்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள்) பழைய மாணவர்கள் சேரக் கூடும் என்பது அடிப்படை ஆதாரமற்றது. மேலும், கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் சுதந்திரமாக நடைபெற்றது என்று கூறுவதையும் ஏற்க முடியாது. அதை நிரூபிக்க அவர்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை'' என்றார்.
கலந்தாய்வு நடத்தத் தடை இல்லை: அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வை தொடர்ந்து நடத்தத் தடை இல்லை என்றும் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சேர்க்கைக் கடிதத்தை அளிக்கக் கூடாது என்றும் கூறினர்.
மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது என்று அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜுன் 22) ஒத்திவைத்து
உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024