மதுரை:மதுரை மாவட்ட கூட்டுறவு விவசாய சேவைகள் சங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால், தனி அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மனுதாக்கல்:மதுரை, செல்லுார் புருஷோத்தமன் உள்ளிட்ட, 10 பேர் தாக்கல் செய்த மனு:
மதுரை, கூடல் நகரிலுள்ள, மாவட்ட கூட்டுறவு விவசாய சேவைகள் சங்கத்தில், 29 ஆண்டுகளாக பணிபுரிகிறோம். 2008 செப்., முதல், 2011 ஜூலை வரை, சங்க நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. ஆனால், தனி அலுவலர், அவருக்குரிய சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார். எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்தனர்.
ஏற்க முடியாது:இம்மனு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் துறை கருத்துக்களை கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள், சங்கத்தின் ஊழியர்கள், வருகைப்பதிவேட்டில் தினமும் கையெழுத்திட்டுள்ளனர். சங்கத்தை நிர்வகிப்பவர் தனி அலுவலர்.பணி நடக்கவில்லை; இதனால், சம்பளம் வழங்கவில்லை என அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. அதிகாரிகள் கடமைமனுதாரர்கள், நிரந்தர ஊழியர்கள். அவர்களை நியமித்த பின், அவர்களுக்கு தகுந்த பணியை ஒதுக்கி, சம்பளம் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை.பணி நடைபெறாத சூழ்நிலையில், பணி நீக்கம் செய்திருக்கலாம்; மனுதாரர்கள், வேறு பணிக்கு சென்றிருப்பர்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் மறுப்பது, அவர்களை பட்டினியால் இறக்க விடுவதற்கு சமம். பொருளாதார ரீதியான மரணத்தை ஊக்குவிப்பது போலாகும். தனி அலுவலர் தான், சங்கத்தின் நஷ்டத்திற்கு காரணம். தனி அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.இதை, தலைமை நீதிபதியின் நேபாள பூகம்ப நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும்.
மனுதாரர்கள், கடைசியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படையில், மீதி நிலுவைத் தொகையை, ஒரு மாதத்தில், தனி அலுவலர் வழங்க வேண்டும்; தாமதித்தால், வட்டியுடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment