வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர், இந்திய துாதரகத்தின், இடம் பெயர்வு பிரிவில் (மைக்ரேஷன்) அனுமதி பெற வேண்டும் என்ற, புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து, பல்வேறு வேலைகளுக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில், வெளிநாட்டில் வேலைக்கு செல்வோருக்கான, தனி அமைச்சகமே உண்டு.
விவரம் இல்லைஆனால், தமிழகத்தில், இதுபோன்ற அமைச்சகம் இல்லை. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டில் வேலைக்கு சென்று உள்ளோர் விவரம், இதுவரை முழுமையாக இல்லை.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர, தனி நிறுவனத்தை, தமிழக அரசு வைத்திருந்தாலும், அதன்மூலம் வேலை பெறுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.
தனியார் ஏஜன்டுகள் மூலம், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் தான் மிக அதிகம். இவர்களின் விவரங்களை சேகரிக்க, தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அவை முழுமையான பயன் அளிக்கவில்லை.வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான, மத்திய அமைச்சகத்தின் தகவலின் படி, 2015 ஜனவரி வரை, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2.71 கோடி. இதில், இந்திய வம்சாவளியினர், 1.57 கோடி. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், 1.13 கோடி.வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் பற்றிய போதிய தகவல்கள் இல்லாத நிலையில், அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் நெருக்கடிகளின் போது, உதவுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. பல நேரங்களில், அவர்கள் எங்கு பணியாற்றுகின்றனர்; ஊதியம் எவ்வளவு; தங்கி உள்ள வெளிநாட்டு முகவரி என்ன என்பது கூட, அரசுக்கு தெரிவதில்லை.
புது உத்தரவு:இந்நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர், குறிப்பாக, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர், இந்திய துாதரகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.இதன் மூலம், வெளியுறவு அமைச்சகத்தின், இடம்பெயர்வு இணைய தளத்தில், வேலையின் விவரம், வேலைக்கு அமர்த்தப்படும் நிறுவனத்தின் விவரம், வேலை ஒப்பந்தம் ஆகியவற்றை தெரிவித்து, அனுமதி பெற வேண்டும்.
'இந்த நடைமுறை, அரசு சார்ந்த வேலைவாய்ப்பு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம், செல்லும் அனைவருக்கும் பொருந்தும்' என, உத்தரவிடப்பட்டு
உள்ளது. இப்புதிய நடைமுறை மூலம், வெளிநாட்டுக்கு செல்வோரின் முழு விவரங்கள், அரசுக்குக் கிடைக்கும் என, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment