Tuesday, June 2, 2015

உயர் கல்வியில் நெகிழ்வுத் தன்மை!

நிகழாண்டில் பொறியியல் கல்விக்கான ஆர்வம் குறைந்து, கலை அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதை வெளிப்படையாகக் காண முடிகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப் படிவம் பெறுவதற்காக அலைமோதும் மாணவர், பெற்றோர் கூட்டமே இதற்குச் சான்று.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பப் படிவம் வாங்கியவர்கள் அனைவருமே பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்கவில்லை. கடைசி நாள் வரை சுமார் 1.60 லட்சம் படிவங்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
பொறியியல் படிப்பு மட்டுமே படிப்பு என்கின்ற மாயை விலகி, மற்ற படிப்புகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். இருப்பினும், இந்த மாற்றத்துக்கு ஏற்ப, மாணவர்கள் சேர்க்கையைக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் எளிமைப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில், இதிலும் முறைகேடுகளும், நன்கொடை அபகரிப்பும் இடம் பெறுவது நிச்சயம்.
தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 635 கலை - அறிவியல் கல்லூரிகளும், 672 கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 85% தனியார் கல்லூரிகள். இந்தக் கல்லூரிகள் எவ்வாறு மாணவர்களைச் சேர்க்க வேண்டும், இவர்களது விண்ணப்பப் படிவத்தின் விலை எவ்வளவாக இருக்க வேண்டும் என்கிற நடைமுறைகள் யாவும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய சிக்கல்- ஒரு மாணவர் அல்லது மாணவி எத்தனை கல்லூரிக்கு விண்ணப்பித்துக் காத்திருக்க முடியும் என்பதுதான். இடம் கிடைப்பது அரிது என்ற அச்சத்தால் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் நன்கொடையை வெளிப்படையாக அல்லது மறைமுகமாகச் செலுத்திவிட்டுச் சேரும் நிலை உருவாகி வருகிறது.
பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 60%க்கு அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள். இளநிலைப் படிப்புகள் எதுவானபோதிலும், அதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையானது, அக்கல்லூரியில் இருக்கும் இடங்களைவிட மூன்று, நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு மாணவரும் நான்கு அல்லது ஐந்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் நிலையும் உள்ளது.
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு எவ்வாறு பொதுக் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகிறதோ, அதேபோன்று கலை அறிவியல் இளநிலைப் படிப்புக்கும், பி.எட். போன்ற கல்வியியல் படிப்புக்கும் பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட்டாக வேண்டும். அதுதான் நேர்மையான மாணவர் சேர்க்கைக்கு வழி வகுக்கும். 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்காக பொதுக் கலந்தாய்வு நடத்த முடியும் என்றால், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொதுக் கலந்தாய்வு நடத்துவது சாத்தியமே!
பொதுக் கலந்தாய்வை சென்னையில் நடத்தாமல், தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் நடத்தலாம். பொறியியல் கலந்தாய்வுக்கு கட்ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பதைப் போல கலை அறிவியல் படிப்புகளுக்கு நிர்ணயிப்பது சாத்தியமில்லை. இருப்பினும், இதையும் எளிமைப்படுத்த முடியும். ஒவ்வோர் இளநிலைப் படிப்புக்கும் ஒரு முதன்மைப் பாடம் உண்டு. அதில் அவர் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடத்துவது மிக எளிது.
உதாரணமாக, ஆங்கில இலக்கியம் படிக்க விரும்பும் மாணவரின் தரவரிசை அவர் பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அமையும். அதேபோன்று, கணிதம், கணக்கியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு அவர்தம் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி ஒரே நாளில் தமிழ்நாட்டின் அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கையை முடிக்க முடியும். இதனால், பெற்றோருக்கு அலைச்சல் இருக்காது. மாணவர்கள் பதற்றத்துடன் பல்வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும் செலவு மிச்சமாகும்.
தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், அந்தக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை, கலை அறிவியல் படிப்புகளுக்காக ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? இதன்மூலம், இளநிலைப் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் பகுதியில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆயிற்று. பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேராததால் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்பட்டுள்ள மனவாட்டத்துக்கு மருந்தும் ஆயிற்று.
பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்தக் கல்லூரிகள் வழங்கவுள்ள சில இளங்கலைப் படிப்புகளுக்கு மட்டுமே அந்தந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குக் கட்டுப்பட்டதாகவும், அவர்கள் நிபந்தனைப்படி ஆசிரியர், பேராசிரியர் நியமனங்களைச் செய்ய வழி கோலப்பட வேண்டும். பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் வரவில்லை என்பதற்காக அந்த வளாகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் வீணாக வேண்டுமா?
தற்போதும்கூட, பல பொறியியல் கல்லூரிகள் தங்கள் கணினிப் பாடப் பிரிவுக்கு வரவேற்பு இல்லை என்பதால், அந்தப் பிரிவுக்குப் பதிலாகத் தற்போது அதிக வரவேற்பு உள்ள சிவில் அல்லது மெக்கானிக்கல் தொடங்க விண்ணப்பிக்கிறார்கள். மாணவர்கள் விரும்பும் படிப்புகளைப் பரவலாகக் கிடைக்கச் செய்யவும், அவற்றுக்கு வரவேற்பு குறையும்போது அதை நிறுத்தி வைக்கவுமான நெகிழ்வுத் தன்மை உயர் கல்வியின் இன்றைய தேவை.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024