Tuesday, June 2, 2015

வாழும் மொழி ஆக வாய்மொழி பேணுவோம்

மண் சார்ந்தும், மனம் சார்ந்தும் வெளிப்படும் ஒலிக்குறிப்புகள் பொருள் உணர்த்தும் பான்மையில் மொழியாகிவிடுகின்றன. சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இடையில் உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைவதுபோல வளரும் உரையாடல் பல்வேறு கருத்துருக்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்துவிடுகிறது.
அறிவும், அனுபவமும் கூடிக்குலவிப் பெற்றளிக்கும் குழந்தையேபோல் வளரும் இன்பம் இலக்கியமயமாகிறது. இவ்வண்ணம், மக்கள் பேசும் மழலையில் தமிழ்வாணி தன்னைப் புதிதாய்ப் பிறப்பித்துக் கொள்கிறாள். ஒலிவழியாக வெளிப்படும் மொழியின்தன்மை பொதுமை கொண்டிருப்பினும் மொழிபவர்களின் குரல் வளம், குணநலம், மண் மணம் கலந்து அது புதுமை பெற்றுவிடுகிறது. இத்தகு வட்டாரத் தன்மைகளின் பங்களிப்புகளால் செந்தமிழ் செழுந்தமிழாகி வளர்கிறதே ஒழியச் சிதைவது கிடையாது.
மனோன்மணியம் சுந்தரனார் சொல்வதுபோல, உலக வழக்கு அழிந்து ஒழிந்தால்தான் மொழியானது சிதையும். இந்த அழிவிலிருந்து மொழியைக் காக்க, இலக்கிய வழக்கு மட்டும் போதாது. உலகியல் வழக்கும் மிகமிகத் தேவை. உற்று கவனித்தால், உலகியல் வழக்கிலிருந்துதான் இலக்கிய வழக்கே உருவாவது புலனாகும். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் என்கிறது தொல்காப்பியம்.
எனவே, ஒரு மொழியைச் சிதைவுறாமல் காக்கவும், செழுமையோடு வளர்க்கவும் உடனடியாகச் செய்ய வேண்டியது செழுந்தமிழை, மழலைச் செல்வங்களில் செம்பவள மெல்லிதழ்களின் உள்ளே தவழ்ந்து உலவும் செந்நாவுகளில் நட(ன)மாட விடுவதுதான். பேச்சில் இருந்து சொல்லுக்கும், சொல்லில் இருந்து எழுத்துக்கும் வருவதே இயல்பான கற்றல் முறை.
ஆனால், நடைமுறையில் என்ன செய்கிறோம்? எழுத்துகளைத்தான் வலிந்து திணிக்கிறோம். எழுதுகோல்களைவிடவும் பிஞ்சு விரல்களை அஞ்சும்படியாய் வளைக்கிறோம், சுழிக்கிறோம், இழுக்கிறோம். கூடவே அவர்தம் நெஞ்சங்களையும். பற்றாக்குறைக்கு, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்கிற அங்கலாய்ப்பு வேறு. இதில் கொடுமை என்னவென்றால், ஐம்பது வயதுக்கும் மேலே வ(ள)ர வேண்டிய அறிவை, ஐந்து வயதுக்குள்ளேயே அவசரப்பட்டுத் திணித்துவிட வெறிகொள்வதுதான்.
புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கக் கட்டாயப்படுத்துவதைவிட, புதிய உறவுமுகங்களை நிறுத்திப் பேசவிடுவதே கற்றலுக்குப் பெரிதும் துணை புரியும். பேச்சு, பேச்சுக்குப் பதில் பேச்சு என்று வளர்வதே உரையாடல். அதனோடு சேர்ந்து உறவும் வளர்கிறது.
எங்கள் ஊர்ப் பகுதிகளில் பேச்சாக்குதல் என்றே ஒரு மரபு உண்டு. பழகியவர்களையும், புதியவர்களையும் கண்டு பேச்சாக்குவது வழக்கம். குறை களைந்து நிறைபடுத்துவதே ஆக்கம். பேச்சு ஆக்கம் எழுத்து ஆக்கம் ஆகவும், ஏற்கெனவே எழுத்தாக்கம் ஆகியவை பேச்சாக்கமுமாக ஆகிறபோது வாழ்க்கை ஆக்கம் பெறும்.
ஆக, ஆக்குதல் என்ற சொல், எவ்வளவு அடர்பொருள் தருகிறது பாருங்கள். சொல்லச் சொல்லத்தான் சொல் வ(ள)ரும். பாடப் பாடத்தான் பாட்டு. எழுத எழுதத்தான் எழுத்து. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் என்பதுதான் நம்மரபு.
இன்றைய கல்வியில் சித்திரம் இருக்கிறது. மனப்பாடம் இருக்கிறது. நல்லதொரு நாப்பழக்கம் நல்கும் பேச்சுத் தமிழ் இருக்கிறதா? ஆனால், ஸ்போக்கன் இங்க்லீஷ் மட்டும் இருக்கிறது. அதற்கு லாங்குவேஜ் லாபும் (Language lab) இருக்கிறது. அப்படியொரு மொழிப் பயிற்சிக் கூடம் தமிழுக்கு இருக்கிறதா? நன்றாய்த் தமிழில் பேசப் பழகிவிட்டால் ஆங்கிலம் வராது எனச் சொல்வது நவீன மூடத்தனம்.
தமிழின் முதல் எழுத்துக்களான 30 தொடங்கி, முழுவதுமான 247 எழுத்துக்களோடு, ஒலித்தலுக்காக நாம் உருவாக்கிக் கொண்ட ஷ, ஸ, ஜ, ஹ, க்ஷ உள்ளிட்ட எழுத்துக்களையும் அறிந்து கொண்ட குழந்தைக்கு வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலத்தைக் கற்றுத் தேறுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்?
எங்கள் வீட்டு மாடியில் வாழ்கிற வட இந்தியப் பெண் குழந்தை தன் தாயிடம் ஹிந்தியிலும், என் தாயிடம் தமிழிலும், எதிர்வீட்டு மாயா அக்காவிடம் தெலுங்கிலும், பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் மலையாளத்திலும், சில ஆங்கிலச் சொற்கலந்தும் பேசிக்கொள்கிறாள். (இதில் வட்டாரத் தமிழ் வேறு. மெய்யாகவே பாரத விலாஸ்தான் எங்கள் அடுக்ககம்).
அவள் இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. சென்ற பிறகு, கற்றுக் கொடுப்பவர்களின் கட்டாயத் திணிப்பால், வேறு எந்த மொழியைவிடவும் நம் சொந்த மொழியாகிய தமிழ்தான் உயிரிழக்கும். கட்டாயம் அவள் வீட்டில் ஹிந்திதான் பேசுவாள். ஆனால், தாய்மொழி தமிழாகக் கொண்ட தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் வீடுகளில் தமிழ் இருக்காதது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, செம்மையான ஆங்கிலமும். பிள்ளை வளர்கிறபோது பேச்சுதான் முதலில் இயல்பாக வருவது.
எண்ணியதை எண்ணியவாறு எடுத்துச் சொல்ல குழந்தைக்கு முதலில் மொழிச் சுதந்திரம் வேண்டும். வாயைத் திறந்தவுடன் வரும் அம்மா - அடிக்கோ, அதட்டலுக்கோ பயந்து விழுங்கப்பட்டு - மம்மியென மொழி மாறி, முணுமுணுக்கப்படுகிற போதே சொல்ல வந்தது மறந்துவிடுகிறது. தொடர வேண்டிய சிந்தனைக்கண்ணி அறுந்துவிடுகிறது.
தயக்கம் பெருகி, தேக்கமாகிறபோது வளர்ச்சி குன்றிவிடுகிறது. அதனால்தான், வெடிப்புறப் பேசு என்று கட்டளையிடுகிறார் பாரதி. எல்லாக் கவலைகளையும், தயக்கங்களையும் விட்டுவிட்டுப் பேசுகிற வீட்டிலேயே தனக்கான மொழி மறுக்கப்படுகிறபோது, அது வீடா? சின்னச் சிறைச்சாலை ஆதல் தகுமா?
புகுந்த வீட்டில் தன் வாக்குக்கு மதிப்பில்லையென்று நீதிமன்றத்துக்கே சென்று மணவாழ்வை நிராகரிக்க நினைப்பதை நியாயம் என்கிறோமே, அதில் பகுதிப் பங்கேனும் பிள்ளைகட்கு இல்லையா?
அந்த ஆத்திரத்தில்தான் பாரதி, "வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ' என்று துரத்துகிறார். இவரது வாக்கின்படி, எந்த மொழி கற்கவும் தடையில்லை. ஆனால், சொந்த மொழி பேசுதற்குத் தடை விதிப்பதுதான் கொடுமை. அது தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் சுயகொள்ளி.
எனவே, ஆங்கிலமோ, ஹிந்தியோ, அயலக மொழிகளோ, யாது கற்பதற்கும் அவரவர் வாய்மொழியாகிய தாய்மொழி தூண்டுதலாகித் துணை செய்யுமே ஒழியத் தடையாகாது. என்றாலும், தமிழகத்தில் தமிழ் அதற்குத் தடையெனக் கருதுதற்குப் பெருங்காரணம், இங்கு எழுத்துமொழி வேறாகவும், பேச்சுமொழி வேறாகவும் இருக்கிறது. நாளுக்கு நாள் இதன் இடைவெளி அதிகமாகிக் கொண்டு வருகிறபோது பயன்பாடு குறைகிறது.
தேர்வில் எழுதப் பயன்படும் மொழியாகத் தமிழ் இருக்கிறதேயல்லாமல், பேசப் பயன்படும் மொழியாக இல்லை. எழுத்துப் பயிற்சிக்குக் கொடுக்கப்படுவதுபோல, பேச்சுப் பயிற்சிக்கு மதிப்பெண்கள் இல்லை.
மேலும், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பவர்களே தடுமாறும்போது, வருங்காலத்தில் தமிழ் எங்ஙனம் வாழும்? பண்டைக்காலப் பேச்சு வழக்கை அடியொற்றிப் பிறந்த சங்கப் பாடல்கள் பயிற்றுவிக்கப்படுகிறபோது, சமகாலத் தமிழின் பேச்சு வழக்குப் படைப்புகள் பாடமாகக் கூடாதா?
தாமே படைக்கிறவண்ணம், படிப்பவர்களை உருவாக்கும் பாட முறைகள் என்றைக்கு நடைமுறைக்கு வருகின்றனவோ, அன்றைக்குத்தான் அதற்குக் கல்வி என்று பெயர். ஆக, அடிப்படைக் கல்வியில் பேச்சுத் தமிழ் வேண்டும். வட்டார வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வளர்ந்த நடை நோக்கிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கான புதிய அகராதிகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். முதலில், நினைப்பதைச் சொல்லவும், சொல்லியவண்ணம் எழுதவும் பழகுதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
அப்போது, பிள்ளைகளின் கருத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய, பிழைகளுக்கு அழுத்தம் கொடுக்கலாகாது. இதற்கு, இசையும், நாடகமும் சிறப்பான வாயில்கள். சில தனித்தன்மை வாய்ந்த பள்ளிகளில் இவற்றுக்குச் சிறப்பிடம் உண்டு. சின்னத்திரை, பெரியதிரைக் காட்சிகளை விட்டொதுக்கி, பல்கலைக்கழக இசை, நாடகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இதற்கெனப் பயிற்சி அளிக்க வேண்டும்.
பெற்றோர் கூட்டம் நடத்துவதுபோல, பெற்றோர்களின் பெற்றோர்கள் கூட்டமும் (grandparents meeting) நடத்த வேண்டும். அவர்களைக் கொண்டு பாடல்களும், கதைகளும், விடுகதைகளும், பழமொழிகளும், சொலவடைகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படுமானால், பன்முக ஆளுமைபெற்று இளையபாரதம் எழுச்சியோடு வளரும். காரணம், அறிவியல் சார்ந்த அனைத்துத் துறைக் கல்விக்கும் எண்ணும் எழுத்துமே அடிப்படை. கண்ணெனத் தகும் இவ்விரண்டையும் செம்மையாய்ப் பெற மொழியே துணை.
வாக்கு நன்றானால் வாழ்வும் நன்றாகும். வாழ்வையும், வாக்கையும் இனிது பேணுகிற நாட்டுக் கல்வியும், வீட்டுக் கல்வியும் தவிர்த்து வழங்கும் வேறுவிதப் பயிற்சிகளால் புல்லே வளராதபோது, நல்ல புதல்வர்களா வளருவார்கள்?
பேச்சுத் தமிழ் மரபு பேணப்படாத நிலை நீடிக்கும் என்றால், வழக்கொழிந்த மொழிகளின் வரிசையில் தமிழும் போய்ச் சேரும். பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்பதை உணர்ந்து கடைப்பிடித்தால், நாளும் தமிழ் மகள் புதிதாய்ப் பிறப்பாள்.

கட்டுரையாளர்:
துணைப் பேராசிரியர்,
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,
புதுச்சேரி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024