Wednesday, June 3, 2015

வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வராமல் இழுத்தடிப்பு! காசு கொடுத்தும் வெயிலில் காயும் வாகனங்கள்

கோயம்பேடு: கோயம்பேட்டில், இரண்டடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டியும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், காசு கொடுத்து, வெயிலில் நிறுத்தும் அவலம், கடந்த ஓராண்டாக நீடிக்கிறது. மேலும், வாகனங்கள் தீப்பிடித்தாலோ, திருடு போனாலோ, நிர்வாகம் பொறுப்பில்லை என்ற பதிலால், பயணிகள் கடும் கோபத்திற்கு ஆளாகின்றனர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய முன்பகுதியில், திறந்தவெளி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. அங்கு வந்து செல்லும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்தததால், புதிய வாகன நிறுத்துமிடம் கட்ட, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. அதன்படி, 20 கோடி ரூபாய் செலவில், 9,400 ச.அடியில், வாகன நிறுத்த கட்டுமான பணிகள், 2013ல் துவங்கின.

பூமிக்கு கீழ் இரண்டு தளங்களும், தரை மட்டத்தில் ஒரு தளமும் என, கட்டப்பட்டன. பூமிக்கு கீழ், அடித்தளத்தில், 1,177 இருசக்கர வாகனங்களும், முதல் தளத்தில், 1,256 இருசக்கர வாகனங்களும், தரை தளத்தில், 50 கார்களும் நிறுத்துவதற்கான இட வசதியுடன், கடந்தாண்டு செப்டம்பரில் வாகன நிறுத்தம் கட்டி, முடிக்கப்பட்டது. இதற்கிடையே, சி.எம்.டி.ஏ., அனுமதியுடன், அந்த அடுக்குமாடி வாகன நிறுத்தம் அருகே, திறந்தவெளியில், தனியார் மூலம், மூன்று மணி நேரத்திற்கு காருக்கு 10 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய், சைக்கிளுக்கு 2 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, காருக்கு 15 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், சைக்கிளுக்கு 4 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரம் அதிகரித்தால், அதற்கு ஏற்றாற்போல், கட்டணம் மாறுபடும். ஆனால், வாகனங்கள் திருடு போனாலோ, தீப்பிடித்து எரிந்தாலோ, சேதமானாலோ, நிர்வாகம் பொறுப்பல்ல என, தனியார் நிறுவனம், வாகன நிறுத்த ரசீதில் எழுதியுள்ளது. அப்படி என்றால், எதற்காக வாகனத்தை அங்கு நிறுத்த வேண்டும் என, பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், பணம் கொடுத்து நிறுத்தப்படும் வாகனங்கள், வெயில் மற்றும் மழையில் நனைந்து நாசமாகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு, கட்டி முடிக்கப்பட்ட, அடுக்குமாடி வாகன நிறுத்த கட்டடம் திறக்கப்படுவது தான். ஆனால், கடந்த எட்டு மாதங்களாக, அந்த கட்டடம் திறக்கப்படாமல், வீணாக கிடக்கிறது. இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற, சில காரணங்களால், வாகன நிறுத்து மிடம் திறக்கப்படுவது தள்ளிப்போகிறது' என்றார்.


எல்.ஐ.சி., ஊழியர்களுக்கு என, பிரத்யேகமாக உள்ள வாகன நிறுத்துமிடத்தில், பயணிகளின் வாகனங்களையும் நிறுத்த அனுமதி வழங்கப்படுகிறது; பணம்வசூலிக்கப்படுகிறது. இதனால், எங்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. சி.எம்.டி.ஏ.,அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.

-சந்திரன், எல்.ஐ.சி., ஊழியர், கோயம்பேடு

வேறு வழியின்றி, பணம் கொடுத்து, வாகனத்தை வெயிலில் நிறுத்திவிட்டு செல்கிறோம். டோக்கன் தொலைந்தால் மட்டும், அபராதம் விதிக்கின்றனர். ஆனால், பல மாதங்களாகியும் புதிய கட்டடம் திறக்கப்படவில்லை. அதனால், எங்கள் வாகனங்கள் நாசமாகின்றன. இதற்கு யார் பொறுப்பு?

- ஸ்ரீகாந்த், தனியார் நிறுவன ஊழியர், மடிப்பாக்கம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024