Tuesday, June 2, 2015

நீதிபதி குன்ஹாவுக்கு பதவி உயர்வு

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற பொது பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக பொறுப்பேற்ற 11 மாதங்களில் தீர்ப்பு தேதியை அறிவித்தார். இறுதிவாதத்தை வேகமாக முடித்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். ஜெயலலிதாவுக்கு ரூ.100.1 கோடியும், சசிகலா,சுதாகரன், இளவரசிக்கு ரூ. 10.1 கோடியும் அபராதம் விதித்தார். மேலும் ஜெயலலிதா தரப்புக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் க‌ர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 7 மாதங்களாக அங்கு சிறப்பாக செயல்பட்டு, கீழ் நீதிமன்றங்களில் நடைபெற்ற பல ஊழல்களை வெளியே கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று, குன்ஹா கர்நாடக உயர் நீதிமன்ற பொது பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பல்வேறு முக்கிய பொறுப்புகள் அடங்கியுள்ள பதவிக்கு குன்ஹா மாற்றப்பட்டதால், பதவி உயர்வு கிடைத்திருப்பதாக அவரது அலுவலக ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024