மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ்லே நிறுவன அதிகாரிகள் இருவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய பிகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 5 பேரையும் காவல் துறை கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் மீது புகார் தெரிவித்து பிகார் மாநில வழக்குரைஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸாஃபர்பூரின் லெனின் செüக் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 30-ஆம் தேதி மேகி நூடுல்ஸ் வாங்கி வந்து சாப்பிட்டேன்.
அதன் பிறகு, எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மோகன் குப்தா, இணை இயக்குநர் சபாப் ஆலம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேகி நூடுல்ஸ் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, மாவட்ட தலைமை நீதிபதி ராமசந்திர பிரசாத் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஹரியாணா அரசு அதிரடி நடவடிக்கை: இதனிடையே, மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு உகந்ததா? என்பதை ஆய்வு செய்ய ஹரியாணா மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்வோம். அதில், உணவு தரக் கட்டுப்பாடு விதிகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வந்துள்ள மேகி நூடுல்ஸ் பொட்டலங்களை திரும்ப பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர்.
"மேகி நூடுல்ஸ்' மாதிரிகளை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் "மேகி நூடுல்ஸ்' மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை செய்யுமாறு தமிழக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் "மேகி நூடுல்ஸ்' மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை,கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய ஆறு இடங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வு பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
"மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருளில் சுவையை அளிக்கும் "மோனோசோடியம் குளுட்டாமேட்' என்ற ரசாயனப் பொருள், ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா என சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருளுக்கு கேரள மாநிலம் தடை விதித்திருப்பதையடுத்து தமிழக அரசும் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment