Wednesday, June 3, 2015

கடந்த ஆண்டு இலவசப் பேருந்து அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணிக்கலாம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்

பள்ளி மாணவ, மாணவிகள் புதிய இலவசப் பேருந்து அட்டை கிடைக்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இலவசப் பயண அட்டையைக் காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பேருந்து அட்டை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை செவ்வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 25 லட்சத்து 44 ஆயிரத்து 576 இலவச பேருந்து பயண அட்டைகள் 17 மையங்களில் தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இம்முறை இந்தப் பணியைத் துரிதப்படுத்தும் வகையில், கூடுதலாக 5 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 22 மையங்கள் மூலம் பயண அட்டைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
மாணவர்கள் புதிய இலவசப் பேருந்து பயண அட்டை கிடைக்கும் வரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைக் காண்பித்து அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024