Friday, December 2, 2016

அதீத ஆர்வம்! ஓயாத உழைப்பு! குன்றாத உற்சாகம்! ஏனென்றால், அவர் கருணாநிதி!

vikatan.com

தி.மு.க தலைவர் கருணாநிதியின் அரசியலோடு நேரெதிராக ஒருவர் முரண்பாடலாம். அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். அதிகாரத்தில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட முறைகளில், இன்றுவரை ஆத்திரம் இருக்கலாம். அவருடைய மதிநுட்பம், நகைச்சுவை உணர்வு, தன்முனைப்பு, தனிநபர் துதிபாடல் குறித்து, கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், யாருக்கும்... ஏன் கருணாநிதியை பரமவைரியாக நினைப்பவர்களுக்கும் கூட அவருடைய உழைப்பு, உற்சாகம், ஆர்வம் குறித்து எந்தக் கேள்வியும் இருக்க முடியாது. எந்த விமர்சனத்தையும் அவர்களால் வைக்க முடியாது. ஒவ்வொரு நொடியையும் அவர் உழைத்தே கழிப்பார். கருணாநிதிக்கு எதற்கும் நேரம் இல்லாமல் போனதே இல்லை. அந்த உழைப்புத்தான், 93-வயதிலும், அவர் நினைத்ததை செய்வதற்கான நேரத்தை அவர் வசம் வைத்துக் கொண்டே இருந்தது.

2 மாதங்களுக்கு முன் கருணாநிதி...

“தலைவர் கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஓய்வில் இருக்கிறார். எனவே, அவரைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்” என்று கடந்த அக்டோபர் 25-ம் தேதி, அறிவாலயத்தில் இருந்து அறிக்கை வந்தது. அதன்பிறகுதான், அவர் தனது அன்றாட வேலைகளில் இருந்து பிசகினார். ஆனால், அந்த அறிக்கைக்கு முன்புவரை, கருணாநிதி உற்சாகமாக உழைத்துக் கொண்டே இருந்தார்.

93 வயதில் கருணாநிதியின் ஒருநாள்!

கருணாநிதிக்கு தற்போது 93 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய செயல்பாடுகளை அவர் கொஞ்சம் குறைத்துக்கொண்டார். ஆனால், எதையும் உதறித் தள்ளிவிடவில்லை. காற்றைப்போல் கருணாநிதி இயங்கிக் கொண்டே இருந்தார். அவருடைய ஒருநாள், காலை 5 மணிக்கு ஆரம்பித்துவிடும். வீட்டில் இருந்து 5.30 மணிக்கு அறிவாலயம் சென்றுவிடுவார். முன்பு நடைப்பயிற்சிக்காக அறிவாலயம் சென்றவர், நடக்கமுடியாமல் போனதற்குப் பிறகு, அறிவாலயம் செல்வதை நிறுத்தவில்லை. நடக்க முடியாவிட்டால் என்ன? சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டே, அறிவாலயத்தை தினமும் காலையில் சுற்றி வந்தார். நடைபயிற்சியால் கிடைக்கும் உற்சாகத்தை அவருக்கு இந்தப் பழக்கம் கொடுத்தது. காலையில் நிரம்பியிருக்கும் புதிய காற்றை சுவாசித்துக் கொண்டு, கைகளை அசைத்து, அவரால் முடிந்த அளவில் சில யோகா பயிற்சிகளை செய்து கொண்டிருந்தார். பயிற்சி முடிந்ததும், அங்கு வைத்தே பத்திரிகைகள் அனைத்தையும் படித்துவிடுவார். தொலைக்காட்சி செய்திகளை அங்கேயே பார்த்துவிடுவார். அந்த நேரத்திலேயே, அன்று கொடுக்க வேண்டிய அறிக்கை அவர் மனதில் பிறந்துவிடும்.



150 நேர்காணல்கள்... 84 பைல்கள்

கருணாநிதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை ஏறக்குறைய நிறுத்திவிட்டார். மிக முக்கியமான திருமணங்கள், கட்சிப்பொதுக்கூட்டம், மாநாடுகள், ஆர்ப்பாட்டம் தவிர வேறு எதிலும் நேரில் சென்று கலந்து கொள்வதில்லை. ஆனால், வீட்டுக்கு வரும் தொண்டர்களை சந்திக்காமல் அவர் திருப்பி அனுப்பியதில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரையிலும், நாள்தோறும், 100 முதல் 150 அப்பாயின்ட்மென்ட்களை பார்த்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்கு வாழ்த்து வாங்க வருபவர்கள், வெளியூர்களில் இருந்து வரும் கட்சிக்காரர்களுக்கு இதில் முன்னுரிமை. அதுபோல,

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை தினமும் கண்டிப்பாக அறிவாலயம் வந்துவிடுவார். அங்கு வந்து, அறிக்கை தயார் செய்து கலைஞர் தொலைக்காட்சிக்கும் முரசொலிக்கும் முதலில் அனுப்பிவிடுவார். அதன்பிறகு, அறிவாலயத்தில் இருக்கும் பைல்களைப் பார்ப்பார். கட்சிக்காரர்களின் கோரிக்கைகள், மாவட்டச் செயலாளர்கள் பஞ்சாயத்து தொடர்பான பைல்களைப் பார்த்து, அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை வலியுறுத்துவார். அறிவாலயத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான உத்தரவுகள் கொடுப்பார். தேவைப்பட்டால், அப்போதே சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிவிடுவார். தேவை இருந்தால், நேரில் வரச் சொல்வார். கடைசியாக அவர் அறிவாலயம் வந்து, பைல்களைப் பார்த்தபோது, ஒரே நாளில் 84 பைல்களைப் பார்த்து, அதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். அதன்பிறகு, தான் கொடுத்த அறிக்கைகள், தொலைக்காட்சியின் மதிய நேரச் செய்திகளில் எப்படி வருகிறது என்று பார்த்துவிடுவார். அவர் நினைத்தது வரவில்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு திருத்தம் சொல்வார்.



அறிவாலயம் டூ சி.ஐ.டி காலனி

அறிவாலயத்தில் இருந்து கிளம்பி, மதியத்துக்கு மேல், சி.ஐ.டி காலனி வீட்டுக்குப்போவார். மதிய உணவு அங்குதான். அரை மணிநேரத் தூக்கம் கண்டிப்பாக இருக்கும். அதன்பிறகு மாலை தேவைப்பட்டால் மற்றொருமுறை அறிவாலயம் வருவார். இல்லையென்றால் நேராக கோபாலபுரம் சென்றுவிடுவார். அங்குபோய், அவர் கதை வசனத்தில் வெளியாகும் ராமானுஜர் தொடரைப் பார்ப்பார். அடுத்தவாரம் ஒளிபரப்பாகும் தொடர், ஒருவாரத்துக்கு முன்பே கருணாநிதிக்கு வந்துவிடும். அதைப் பார்த்துவிட்டு அதில் திருத்தம் இருந்தால் சொல்வார். இதற்கிடையில், தென்பாண்டிச் சிங்கம் தொடருக்கான கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

தயாளு அம்மாளுக்கு தனியாக நேரம்!

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கடந்த சில ஆண்டுகளாக அல்சைமர் எனும் ஞாபக மறதிப் பிரச்னையில் இருக்கிறார். அதுபோல, அவருக்கு வாயில் உமிழ் நீர் சுரப்பது குறைந்துவிட்டது. அது செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. கோபாலபுரம் வீட்டில் கீழ் தளத்தில்தான் தயாளு அம்மாளின் அறை இருக்கிறது. மேல்தளத்தில் கருணாநிதியின் அறை இருக்கிறது. தினமும் தயாளு அம்மாளுடன் பேசிக்கொள்ளும் கருணாநிதி, அவரையும் உற்சாகப்படுத்துவார். அவருக்கு நினைவு திரும்பும் நேரங்களில், அவரிடம் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருப்பார்.

அதன்பிறகு, இரவு செய்திகள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை சிறிது நேரம் பார்ப்பார். இப்போது புழக்கத்தில் இருக்கும் ரிமோட்களில் ஏகப்பட்ட ஆப்ஷன்கள். அதை கையாள்வதில் கருணாநிதிக்கு சிக்கல் இருந்தது. அதற்காக அவருடைய செல்போனில் ஒரு ஆப் டவுன்லோடு செய்து வைத்திருந்தார். அதைப் பயன்படுத்தி செல்போனில் இருந்தே, சேனலை மாற்றிப் பார்ப்பார். அதன்பிறகு, இரவு உணவை முடித்துவிட்டு மறுநாள் வெளிவரும் முரசொலியின் ‘பைனல்’ பார்த்துவிட்டு, திருத்தம் சொல்வார். இரவு அவர் தூங்குவதற்கு 11.30 மணிக்குமேல் ஆகிவிடும். இந்த நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் சாதரணமானவையாகத் தோன்றலாம். ஆனால், 93 வயதில் கருணாநிதி இந்த நிகழ்ச்சி நிரலை, கட்டுக்கோப்பாக கடைபிடிப்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான், அதில் மறைந்து இருக்கும் ஆச்சரியம் புரியும்.



எதையும் தாங்கும் இதயம்!

கருணாநிதியின் ஆஸ்தான மருத்துவர்களில் ஒருவர். அவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதனுக்கு வயதான காலத்தில் இதயம், கிட்னி, சர்க்கரைநோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால்தான் பிரச்னைகள் உருவாகும். கருணாநிதிக்கு இந்த 4 பிரச்னைகளும் இல்லை என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். இருதயத்தில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உண்மையில், எதையும் தாங்கும் இதயம்தான் அவருடையது. அதனால்தான், தனது செல்லமகள் கனிமொழி கைது செய்யப்பட்டபோது, “இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்ன கருணாநிதி, “ஒரு மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்குமோ... அப்படி இருக்கிறது'' என்று உடையாமல் பதில் சொன்னார். அவருடைய சிறுநீரகங்கள் இப்போதும் நன்றாகச் செயல்படுகின்றன. அவருக்கு சர்க்கரை நோய் கிடையாது. ரத்தக் கொதிப்பும் கிடையாது.

32 வயதில் ஹார்ட் அட்டாக், 35 வயதில் பி.பி., சுகர் என்று கேள்விப்பட்ட இன்றைய தலைமுறைக்கு இது மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கும் விஷயம்தான். இத்தனைக்கும் கருணாநிதி எம்.ஜி.ஆரைப்போல் கடுமையான உடற்பயிற்சிகள் செய்தவரில்லை. ஆனால், அப்படி உடற்பயிற்சி செய்த எம்.ஜி.ஆருக்கே உடல் ஆரோக்கியம் விஷயத்தில் கருணாநிதிக்கு கிடைத்த வரம் வாய்க்கவில்லை. கருணாநிதியின் இந்த உடல் ஆரோக்கியத்துக்கு, அவருக்கு இயற்கை கொடுத்த கொடை என்றே சொல்லலாம். எப்போதுமே அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். 15 வயதில் தொடங்கி 44 வயதுவரை அவர் கூட்டங்களுக்காக போகாத ஊர்கள் இல்லை. நடக்காத தொலைவு இல்லை. அந்த ஊர்களில் கிடைத்த சாதாரண உணவுகள், சாதாரண தண்ணீரை கருணாநிதியின் உடல் ஏற்றுக்கொள்ளும். இது கருணாநிதியின் சமகாலத்தவர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், கண்ணதாசனுக்கு வாய்க்காதது. அவர்கள் திரைத் துறையில் கோலேச்சத் தொடங்கிய பிறகு, ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். கருணாநிதி அதில் கொஞ்சம் தள்ளியே இருந்தார்.



கடுமையான கட்டுப்பாடு! அதீத முன்ஜாக்கிரதை உணர்வு!

இயற்கையாக கருணாநிதிக்கு அமைந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி, அவர் கடைபிடித்த கடுமையான சில கட்டுப்பாடுகளும் இயல்பாக அவருக்கு வாய்த்த முன்ஜாக்கிரதை உணர்வும், அவரை 93 வயதில் உற்சாகமாக வைத்ததற்கு முக்கிய காரணங்கள். ஒரு காலத்தில், புகை, மதுப் பழக்கங்கள் கருணாநிதிக்கும் இருந்தன. இதுபோன்ற கேளிக்கைகளில், கவிஞர் கண்ணதாசனின் கூட்டாளியாக இருந்தவர்தான் கருணாநிதி. இதை கருணாநிதியே கண்ணதாசனின் பிறந்தநாள் விழா மேடையில் பேசி உள்ளார். அதுபோல், இரவு முழுவதும் கண்விழித்து சீட்டாடும் பழக்கமும் கருணாநிதிக்கு பால்ய காலத்தில் இருந்துள்ளது. ஆனால், பொறுப்புகள் கூடக்கூட இதுபோன்ற பழக்கங்களில் இருந்து கருணாநிதி தன்னை விடுவித்துக் கொண்டார்.

‘டயட்’ என்ற வார்த்தை கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் பிரபலமானது. ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே அதைக் கடைபிடித்தவர் கருணாநிதி. அவர் 44 வயதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனாதுமே, தனது வாழ்க்கை முறையை மாற்றிவிட்டார். காலை சரியான நேரத்துக்கு உணவு, 11 மணிக்கு பழச்சாறு, மதியம் 1.30 மணிக்குள் மதிய உணவு, 3 மணிக்கு குட்டித் தூக்கம், 5 மணிக்கு சிற்றுண்டி என்று வழக்கப்படுத்திக் கொண்டார். 9 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவார்.

அசைவம் சாப்பிடாத அசைவர் கருணாநிதி!

கருணாநிதி அசைவம் விரும்பி. ஆனால், அவர் மாமிசம் சாப்பிடுவதில்லை. அவருக்கு ஆட்டுக்கறி குழம்பு பிடித்தமானது. ஆனால், அதில் உள்ள கறித்துண்டுகளை எடுத்துக்கொள்ளமாட்டார். கோழிக்கறி அறவே கிடையாது. ஆனால், மீன் நிறைய சாப்பிடுவார். இப்போதும் அவருக்கு மீன் சமைத்து முட்களை நீக்கி அடிக்கடி பரிமாறுவார்கள். அதை விரும்பி சாப்பிடுவார். கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்வார். முட்டை சாப்பிடுவார். ஆனால், அதில் மஞ்சள் கருவை தவிர்த்துவிடுவார். தாளிக்காத குழம்பு, சட்னிதான் பல காலமாக அவர் சாப்பிடுகிறார். எந்த நிலையிலும், இந்த வழக்கங்களில் இருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. ஆனால், இப்படி இருந்தபோதும், அவருக்கு வயிற்றில் குடல் புண் பிரச்னை ஏற்பட்டது. உடனடியாக தேசிகாச்சாரியாரை நியமித்து, பிரத்யோகமாக யோகா கற்றுக் கொண்டார். தான் விரும்பியது இல்லை என்றாலும் கவலைப்படமாட்டார். இருப்பதை, தனக்கு தகுந்ததாக மாற்றிக் கொள்வார் கருணாநிதி.



ஆர்வம்... ஆர்வம்... ஆர்வம்...

93 வயதில் உடல் தளர்ந்த நிலையிலும், கருணாநிதியை உற்சாகமாக வைத்திருந்தது, அவருடைய ஆர்வம்தான். “இப்போதும் தன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தான் உழைக்க வேண்டும்” என்ற கருணாநிதியின் பிடிவாதம் கொஞ்சம்கூட தளரவில்லை. 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், ஸ்டாலினின் லகான் இன்னும் கருணாநிதியின் கைகளில்தான் இருக்கிறது. கருணாநிதியை மிஞ்சி ஸ்டாலினால், இப்போதுவரை எதையும் சாதித்துவிட முடியவில்லை. இப்போதும்கூட ஸ்டாலினுக்கு ஒவ்வொருநாளும் கருணாநிதி செக் வைத்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக, காலையில் மு.க.ஸ்டாலின் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியாக எதையாவது ஒரு கருத்தைத் தெரிவிப்பார். அது செய்திகளில் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை மங்க வைக்கும் வகையில், அதற்கு நேர் மாறாக அல்லது அதைவிட முக்கியமான ஒரு விவகாரத்தை கையில் எடுத்து, கருணாநிதி அறிக்கை விடுவார். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஓ.பி.எஸ்-யிடம் முதலமைச்சர் இலாகாக்களை ஒப்படைத்தது பாராட்டத்தக்கது. நான் அதை வரவேற்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். ஆனால், சிறிது நேரத்தில், கருணாநிதியிடம் இருந்து அறிக்கை வந்தது, “இது தாமதமான நடவடிக்கை. இந்த நடவடிக்கை முதலமைச்சரின் ஒப்புதலுடன்தான் நடைபெற்றதா? என்று அறிக்கை கொடுத்தார். அவ்வளவுதான், ஸ்டாலின் பேட்டி பின்னால் போனது. கருணாநிதி அறிக்கை தலைப்புச் செய்தியானது. தனக்குப்பின் கட்சியைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள்... அறிவாலயத்தை நிர்வாகிக்க, நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி ஒருபோதும் தன் வேலைகளில் சுணக்கம் காட்டியதே இல்லை.

பேஸ்புக், ட்வீட்டர்...

இவ்வளவு வேலைகளுக்கு இடையில் தன்னுடைய முகநூல் பக்கத்தையும் அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் பக்கங்களை நவீன் என்பவர் நிர்வகிக்கிறார். ஆனால், அதில் கருணாநிதியின் பதிவுகளுக்கு லைக்குகள் குறைந்தால், என்னய்யா... லைக் எல்லாம் குறையுது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். எது டிரெண்டிங் செய்தி என்பது வரை அப்டேட் செய்து கொள்வார்.



ஏனென்றால்... அவர் கருணாநிதி!

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகுதான், கருணாநிதி கொஞ்சம் சொகுசு வாழ்க்கைக்குப் பழகினார். அப்போதுதான் அவருக்கும் சிறுசிறு பிரச்னைகள் வர ஆரம்பித்தன. எண்ணெய் பலகாரம் சாப்பிட்டால் மயக்கம் வர ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக கூட்டங்களில் பல மணிநேரம் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் பேசியதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் பேனா பிடித்து எழுதுவதை நிறுத்திவிட்டார். காரணம், தோள்பட்டையிலும் கைகளிலும் வலி வரத் தொடங்கியது. அதன்பிறகு, இப்போதுவரை அவர் ‘டிக்டேட்’ செய்யச் செய்ய உதவியாளர்கள் எழுதுகின்றனர். உடலின் எடையை தாங்கும் சக்தியை கால் மூட்டுகள் இழந்தன. உடனே, அதில் கௌரவம் பார்க்காமல், தனக்கு ஏற்றார்போல, சக்கர நாற்காலியை வடிவமைத்துக் கொண்டார். அதில் வலம்வந்து உழைத்துக் கொண்டிருந்தவரை, 2016- சட்டமன்றத் தேர்தல் தோல்வி மிகவும் பாதித்தது. அந்த வருத்தம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. இந்த நேரத்தில் தன்னால் பழையபடி உழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் கொஞ்சம் இருந்தது. இப்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு தன்னைப்போல சாமர்த்தியம் இல்லையே என்ற வேதனையும் இருந்தது. இந்த நிலையில்தான், அவர் மேற்கொள்ளும் பிசியோதெரபி சிகிச்சைக்காக தேய்க்கப்படும் எண்ணெய் அவர் உடலில் அலர்ஜியை ஏற்படுத்தியது. அதில் உருவான கொப்புளங்களால், அவர் தான் வாழ்நாளில் இருந்திடாத அளவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக கோபாலபுரத்தில் முடங்க வேண்டியதானது. இந்தப் பிரச்னையில் இருந்து அவர் மீண்டபிறகும், அவர் ஒய்வுக்குப் போய்விடமாட்டார். அப்போதும், உற்சாகமாக உழைக்கவே பிரயத்தனப்பட்டுக்கு கொண்டிருப்பார். ஏனென்றால், அவர் கருணாநிதி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024