5 பேரை பலி வாங்கிய 'விபத்து'... இதற்குத்தானா அரசுப் பேருந்துகள்?
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட புள்ளி விவரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை மாநகரில் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் காலாவதியானவை. ஆயுட்காலம் முடிந்து இயக்கப்படுபவை. சென்னையில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இதே நிலை தான்.
இதை கண்முன் நிகழ்த்தி காட்டியிருக்கிறது விழுப்புரம் அருகே இன்று நடந்த விபத்து. விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டார் கடுமையான காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து சரியான பராமரிப்பு இல்லாத, இயக்க தகுதியற்ற பேருந்து என்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள் மக்கள். இந்த புகாரை எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. காரணம். சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் தந்த புள்ளி விவரங்கள் தான்.
சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னர் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதாமல் நிறுத்த முற்பட பேருந்து நிற்கவில்லை. பேருந்தை ஓட்டுநர் வளைக்க, எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மிக மோசமான விபத்து பேருந்து முழுமையாக சேதமடைந்திருந்தது. இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5. படுகாயமடைந்தவர் 32 பேர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலர் மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணம் செய்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சவுந்தரராஜனிடம் பேசினோம். “முண்டியம்பாக்கம் தாண்டி எங்க பஸ் வந்துட்டு இருந்துச்சு. அப்போ ரோட்டோரம் ஒரு ப்ரைவேட் பஸ் நின்னு டிக்கெட் ஏத்திகிட்டு இருந்தாங்க. எங்க பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்த முடியலை. அந்த பஸ் மேல மோதாம இருக்க பஸ்சை திருப்பினார். எதிர் பக்கம் ரோட்டை தாண்டி எதிர வந்த இன்னொரு மேல பஸ் மோதீடுச்சு. நான் பின்னாடி உட்கார்ந்து இருந்ததால அதிர்ஷ்டவசமா நான் பொழைச்சேன்” என்றார் உதறலாக.
“சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்த கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட TN-32. N-3398 எண் கொண்ட வண்டி டவுன் பஸ் தரத்தில் கூட இல்லை என்பது கண் கூடாக தெரிகிறது. பல பேருந்துகள் ஆயுள் காலம் முடிந்தும் பல ஆண்டுகளாக இயக்கப்படுகின்றன. இதுவும் அது மாதிரி பேருந்தாக இருக்கும்," என பலர் சந்தேகம் தெரிவித்தனர்.
"நொறுங்கி கிடந்த பேருந்தின் பக்கவாட்டு கம்பிகள், சீட்டுகள், மேல் கூரை அனைத்தும் ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிறது. இந்த விபத்தில் இவை எல்லாம் காணாமல் போய் இருந்தன. பயணிகள் உயிரையும் ஓட்டுநர் உயிரையும் பணையம் வைத்து தான் ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களும் இயங்கி வருகின்றன. அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கினால் உயிருக்கு நிச்சயம் உத்தரவாதமில்லை அந்த லட்சணத்தில் தான் போக்குவரத்து கழகங்கள் நடத்தப்படுகின்றன.” என்ற கோபம் விபத்தில் சிக்கிய, அதை வேடிக்கை பார்த்த... இன்னும் சொல்லப்போனால் போக்குவரத்து கழக ஊழியர்களிடமே இருந்ததை கவனிக்க முடிந்தது.
வசூலை வாரி குவிக்க அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத சாலைகள் என விபத்துகளுக்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கிய ஒன்றாக இணைந்துள்ளது அரசு பேருந்துகளின் மிக மோசமான நிலை. இதன் காரணமாகவே ஆண்டு தோறும் விழுப்புரம், கடலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளால் ஏற்படும் உயிர் பலி அதிகரித்து வருகிறது. 2016 ஜனவரியிலிருந்து நவம்பர் 21 வரை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 710 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றன புள்ளி விவரங்கள். இதில் அரசு பேருந்துகளின் மோசமான நிலையும் முக்கிய காரணம்.
இதற்கு தானா அரசு பேருந்துகள்... இவ்வளவு தானா மக்களின் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை?
படங்கள் : தே.சிலம்பரசன்
No comments:
Post a Comment