Friday, December 9, 2016

என்னிடம் உத்தரவை எதிர்பார்க்க வேண்டாம்!’  -அமைச்சர்களுக்கு கட்டளையிட்ட சசிகலா

vikatan.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, இன்று காலையில் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர் அமைச்சர்கள். ‘ அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யுங்கள். என்னுடைய உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டாம்’ எனத் தெரிவித்ததாகச் சொல்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க விரும்பினர். நேற்று காலை முதலே, ‘அவரிடம் இருந்து அழைப்பு வரும்’ எனக் காத்திருந்தனர். எந்த உத்தரவும் கார்டனில் இருந்து வரவில்லை. “ நேற்று மதியம் பத்திரிகையாளர் சோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் கிளம்பினார் சசிகலா. ‘ அம்மா மறைந்து மறுநாளே செல்ல வேண்டுமா?’ என உறவினர்கள் கேட்கவும், ‘ அவர் இருந்திருந்தால் அடுத்த நிமிடமே சென்றிருப்பார். எனவே, நான் செல்கிறேன்’ எனப் பதில் கொடுத்தார். இன்று காலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி உள்பட சில அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களிடம், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது உள்பட சில விஷயங்களை விவாதித்தார்” என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர்,

“ நேற்று முழுக்கவே எந்த அமைச்சருக்கும் போயஸ் கார்டனில் இருந்து போன் செல்லவில்லை. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் இருந்ததால், சற்று ஓய்வெடுக்கவே விரும்புகிறார். முதல்வராக ஓ.பி.எஸ் நியமிக்கப்படும் முடிவை எடுத்தபோதும், உறவுகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்குப் பதில் கொடுத்தவர், ‘ அம்மா இருந்திருந்தால், அவருடைய சாய்ஸாக அவர்தான் இருந்திருப்பார். அவரே முதலமைச்சர் பதவியில் தொடரட்டும்’ என்றார். இன்று அவரிடம் ஆலோசிப்பதற்காக கார்டன் வந்தார் பன்னீர்செல்வம். அவரிடம் பேசியவர், ‘ நான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன். விவாதிக்கும் அளவுக்கு எனக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. என்னிடம் இருந்து உத்தரவு வரட்டும் என நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அம்மா இருந்திருந்தால் என்ன சொல்வாரோ, அதன்படியே நினைத்துச் செயல்படுங்கள். கட்சியின் பொதுக் குழுவுக்குப் பிறகு அனைத்தையும் முடிவு செய்வோம். அதுவரையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்’ என்றார். இந்த நிமிடம் வரையில், பன்னீர்செல்வத்தின் பணிகளில் எந்தக் குறுக்கீடும் இல்லை. இப்படியே தொடருமா அல்லது பொதுக் குழுவுக்குப் பிறகு நிலைமை மாறுமா என்ற கேள்விதான் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்றார் விரிவாக.


“ ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில், அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறார். சோ மறைவுக்கு வந்தபோது, அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் மேனரிசத்தை ஒட்டியே இருந்தன. தொண்டர்கள் மத்தியில் தீவிரமாக வலம் வரத் திட்டமிட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களையும் அவர் பக்கம் தக்க வைப்பதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏழு நாள் துக்கம் முடிந்த பிறகு, பொதுக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. கட்சியின் முழு அதிகாரம் நிரம்பிய பொதுச் செயலாளர் பதவி தேர்வுக்குப் பிறகே, ஆட்சியின் லகானை தன் பிடிக்குள் கொண்டு வருவார் சசிகலா” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024