Friday, December 9, 2016

ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலுக்கு வருவதற்கு முன், போயஸ் கார்டனில் என்ன நடந்தது? 

#VikatanExclusive


"முதல்வர் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி திங்கள்கிழமை. அவருடைய இறப்பு அறிவிப்பு வருவதற்கு முன் மாலை போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அடுத்தடுத்து கார்கள் வந்தன. அந்த நேரத்தில் ஜெயலலிதா அப்போலோவில் சீரியஸாக இருந்தார் என்றுதான் எங்களுக்கு தகவல். காரை எட்டிப் பார்த்தோம். சசிகலாவின் உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள் என பலர் ஒன்றன்பின் ஒன்றாக வந்தனர். இவர்களை உள்ளே விடலாமா? என்கிற குழப்பம். அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம் தொடர்புகொண்டு எங்கள் உயர் அதிகாரி பேசினார். ’அனுமதியுங்கள்’ என்று உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் உள்ளே நுழையவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளாக போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டவர்கள் பலரும் இருந்தனர். வீட்டுக்குள் நுழைந்தவர்கள் டூரிஸ்ட் ஸ்பாட் போல வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மன்னார்குடியில் இருந்து வந்திருந்த பெண்கள் பட்டாளம், ' ஒ...இதுதான் பெரியம்மா அறையா? இதுதான் சின்னம்மா அறையா? இதுதான் பூஜை அறையா?' என்றெல்லாம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர். தஞ்சாவூர் பக்கத்திலிருந்து ஒரு வயதான பெண்மணி வந்திருந்தார். அவர் நேராக மேக்கப் அறையில் போய் தன்னை அலங்கரிக்க ஆரம்பித்தார். அவர் சில வருடங்களுக்கு முன்பு, அம்மாவின் கோபத்துக்கு ஆளானவர். அவர்கள் அனைவருக்கும் உணவு தயாரானது. இஷ்டப்பட்ட உணவை சமைக்கச் சொல்லி சாப்பிட்டனர்.

போயஸ் கார்டனில் சமையல் செய்துவந்த 66 வயது பெண்மணி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர். சிவகங்கையைச் சேர்ந்தவர். கடந்த பல வருடங்களாக, போயஸ் கார்டனில் தங்கி உணவு தயாரித்துக் கொடுத்து ஜெயலலிதாவை அசர வைத்தவர். ஜெயலலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். சசிகலா உறவினர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி பேசிக்கொள்வதை சமையல்அறை ஒரத்தில் நின்று பதற்றத்துடன் கேட்டார். கண்ணீர் விட்டார். அவர் அன்று முழுக்க சாப்பிட வில்லை. ஆனால், சசிகலாவின் உறவினர்களுக்கு சமைத்துப்போட்டார். மாலை 7 மணி இருக்கும். அப்போலோவில் இருந்து போன் வந்தது. வீட்டில் இருந்த பணிப்பெண்களுடன் சசிகலா பேசினார்.

மடிசார் பட்டுப்புடவை, கைக்கடிகாரம், வைரம் பதித்த டாலர் செயின், மோதிரம்... இதையெல்லாம் எடுத்துக்கொண்டு உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்கள். அப்போதே எங்களுக்குப் புரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாகிவிட்டது என்று! வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தோம். 'இது தெரியாதா?...பெரியம்மா உடல்நிலை ரொம்பவும் மோசமாகிவிட்டது. எந்த நேரமும் காலமானார் நியூஸ் வெளியாகலாம். அதுமாதிரி அறிவிக்கப்பட்டவுடன், அவரது உடலைப் போர்த்த அவர் விரும்பி அணியும் மடிசார் புடவையை கேட்டார்கள். அவரை அலங்கரித்துவிட்டு இங்கே கொண்டு வருவார்கள். சிறிதுநேரம் வைத்திருந்துவிட்டு ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுபோக திட்டமிட்டிருக்கிறார்கள்' என்றார்கள். வாசலில் காவலுக்கு நின்ற எங்களின் கண்களில் நீர் பனித்தன. வெளியே காட்டிக்கொள்ளமுடியாத நிலைமை!


மாவிலை, சந்தனக்கட்டைகள்... இப்படி ஒவ்வொன்றாக வீட்டுக்கு வந்தன. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வருவதற்கு முன்பே, அவருக்கான இறுதிச் சடங்குப் பொருட்கள் போயஸ் கார்டனை வந்தடைந்தன. இரவு 11.30 மணி இருக்கும். எங்கள் வயர்லெஸ் அலறியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அப்போலோ நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தகவல் வந்தது. அதிர்ந்துபோனோம். போயஸ் கார்டனில் இருந்த பணிப்பெண்கள், சமையல்காரர், வீட்டு வேலை செய்கிறவர்கள் என அனைவரும் கதறி அழுதனர். டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை ஜெயலலிதாவின் உடலுடன் ஆம்புலன்ஸ் வந்தது. ஜெயலலிதாவின் உடலை இறக்கி நடு ஹாலில் டைனிங் டேபிள் இருந்த இடத்தில் வைத்தார்கள். எங்கிருந்தோ ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை அழைத்துவந்தார்கள். பிறந்த வீட்டு கோடி என்கிற முறையில் புதிய புடவை ஒன்றை ஜெயலலிதாவின் உடல் மீது சசிகலா போர்த்தினார். உடன் தீபக்கும் நின்றார். 'இவர்தானே...ரத்த உறவு. சசிகலா போடுகிறாரே?' என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம்.




அந்த நேரத்தில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், செக்யூரிட்டிகள்..என்று அந்த தெருவில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். துக்கம் அனுஷ்டிப்பதற்காக அவர்களை உள்ளே அனுமதித்தோம். அப்போது மடிசார் புடவை, நகைகள் அணிவிக்கப்பட்டு தூங்குவது போல காட்சியளித்தார் ஜெயலலிதா. இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார். அவர் அருகில் தீபக் நின்றிருந்தார். சசிகலா குடும்பத்தினர் வந்து முன்னால் நின்றனர். அர்ச்சகர் முதலில் மாவிளையில் தண்ணீர் தெளித்தார். மஞ்சள் சந்தனத்தை ஜெயலலிதாவின் கைகளில் பூசினார் சசிகலா. அதன் பின் சில சம்பிரதாயங்களை திவாகரனில் ஆரம்பித்து ஆண், பெண்... என்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்த எங்களைப்போன்ற பணியாளர்களும் ஜெயலலிதாவின் உடலை வணங்கினோம். எல்லாம் முடிய காலை 5.30 மணி ஆகிவிட்டது. பிறகு, ஜெயலலிதாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்றனர். வேதா இல்லத்தில் சிங்கம் போல வளைய வந்த ஜெயலலிதாவை அந்த நிலைமையில் பார்த்த எவருக்கும் கண்கள் குளமாகி இருக்கும்!” என்று கலக்கமான குரலில் சொல்லி முடித்தார்.

- ஆர்.பி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024