Saturday, June 17, 2017

வினோத நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் : உதவிக்கரம் எதிர்நோக்கும் ஏழை பெற்றோர்

பதிவு செய்த நாள்17ஜூன்2017 03:19

ஈரோடு: வினோத நோயால் பாதிக்கப்பட்ட, ஈரோடு மாவட்ட சகோதரர்கள், எழுந்து நிற்பதற்கே சிரமப்படுகின்றனர்; அவர்களின் சிகிச்சைக்கு உதவி கேட்டு, ஏழை பெற்றோர் ஏங்கி நிற்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், வளையபாளையம் பகுதி யில் வசிப்பவர் குப்புசாமி, 46; வரப்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி, ராதா, 38. இவர்களது மகன்கள், ராசுக்குட்டி, 22, ஈஸ்வரமூர்த்தி, 20.

மகன்கள் ஆளாகி, வறுமையை விரட்டுவர் என பெற்றோர் கனவு கண்டனர். ஆனால், நடந்ததோ வேறு. மற்ற குழந்தைகளை போல் ஓடியாடி திரிந்த பிள்ளைகள், இன்று எழுந்து நடக்க முடியாமல், வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

இது குறித்து, குப்புசாமி, ராதா கூறியதாவது:

ராசுக்குட்டி, 10 வயது வரை, மற்ற சிறுவர்களை போல இயல்பாக இருந்தான். ஆறாம் வகுப்பு படித்த போது, திடீரென ஒரு நாள் காலை, எழுந்து நிற்க முடியவில்லை. துாக்க கலக்கத்தில் தடுமாறுகிறான் என, நினைத்தோம்.
மீண்டும் மீண்டும் முயன்றாலும் கீழே விழுந்தான். கோபி அரசு மருத்துவமனைக்கு சென்றோம். பரிசோதித்த மருத்துவர்கள், 'சத்து குறைபாடு தான்; நல்ல ஆகாரம் தந்தால் சரியாகி விடும்' என்றனர். ஆனால், எது கொடுத்தாலும், ராசுக்குட்டியால் எழுந்து நிற்க முடியவில்லை. பள்ளிப் படிப்பும் பாதியிலேயே முடிந்தது.

நிற்க முடியாது என்றாலும், உட்கார்ந்தபடி, வீட்டு வேலைகள் செய்தான். இதைப் பார்த்த நண்பர்கள், தனியார் நிறுவனத்தில், டெய்லர் வேலைக்கு சேர்த்து விட்டனர். எட்டு ஆண்டுகளாக, நண்பர்களின் உதவியுடன் வேலைக்கு சென்றான். கடந்த ஆண்டு முதல், கை, கால்களையும் அசைக்க முடியவில்லை. இதனால் வேலைக்கும் செல்லாமல், வீட்டில் முடங்கியுள்ளான்.

இந்நிலையில், இளைய மகன் ஈஸ்வரமூர்த்தியும், சில ஆண்டுகளுக்கு முன், நிற்க முடியாமல் விழுந்தான். ராசுக்குட்டியை பாதித்த வினோத நோய், அவனையும் தாக்கியதை உணர்ந்து, தாள முடியாத வேதனைக்கு ஆளாகினோம். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள நினைத்தோம்.
கோபியை சேர்ந்த ஒரு மருத்துவர், பெங்களூரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல், ஹெல்த் அண்ட் நியூரோ சயின்ஸ் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன், ராசுக்குட்டியை அழைத்து சென்றோம்.

பரிசோதித்த மருத்துவ குழுவினர், ஒரு வாரம் கழித்து வருமாறு கூறினர். பணம் இல்லாததால் போக முடியவில்லை. ஒரு முறை பெங்களூரு சென்று வந்ததற்கே, 15 ஆயிரம் ரூபாய் செலவானது.

கையில் இருந்த பணம், நகை, ஆடு, மாடு என அனைத்தையும் விற்று செலவு செய்தாகி விட்டது. லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளோம். கடவுள் போல், எங்கள் குழந்தைகளை காப்பாற்ற, ஏதாவது உதவி கிடைக்காதா என காத்துக் கிடக்கிறோம்.
இவ்வாறு அவர்க
ள் கூறினர்.
உதவ நினைப்போர், 76392-62627 என்ற, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

10 ஆண்டுகளாக ஏமாற்றம்
மாற்றுத் திறனுடையோர் நல சங்க தலைவர் துரைராஜ் கூறியதாவது:
நல்ல நிலையில் நடமாடும் ஒருவர், நிற்க முடியாமல் போகிறது என்றால், தசை சிதைவு எனும், 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' நோய், தாக்கியுள்ளது என்பதற்கான அறிகுறி. நடையில் மாற்றம் தெரியும், அடிக்கடி கீழே விழுவர். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து விட்டால், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் தந்து சரிபடுத்த வாய்ப்புள்ளது.

ஆனால், ராசுக்குட்டி பெற்றோருக்கு அந்த அளவுக்கு விபரம் இல்லை. இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 10 ஆண்டுகளாக, இதை சொல்லாமல் ஏமாற்றியுள்ளனர் என்றுதான் கூறவேண்டும். தற்போது, பெங்களூரு மருத்துவர்கள், இந்நோய்க்கு சிகிச்சைக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். பெங்களூரில் தங்கி மருத்துவம் பார்க்க வேண்டும். இவர்களிடம் அதற்கான வசதியில்லை. ஈரோடு மாவட்ட நிர்வாகம், தமிழக முதல்வர், அமைச்சர் அல்லது தன்னார்வ தொண்டு அமைப்புகள் மனது வைத்தால், இவர்களை காப்பாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...