Saturday, June 17, 2017

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை புதிய தகுதி பட்டியல் வெளியிட உத்தரவு
பதிவு செய்த நாள்17ஜூன்2017 03:28

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்காக, 2017 மார்ச்சில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பேட்டில் திருத்தங்கள் செய்து, தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருத்தப்பட்ட புதிய தகுதி பட்டியலை, மூன்று நாட்களில் வெளியிடவும், உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, 'நீட்' மதிப்பெண்ணுடன், தொலைதுாரம் மற்றும் சிரமமான பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 10 முதல், 30 சதவீதம் வரையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்களும் சேர்த்து கணக்கிடப்படும். 

இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., இந்த விதிமுறையை
அறிவித்தது.

வெயிட்டேஜ் மதிப்பெண்
தொலைதுாரம், சிரமமான பகுதிகளில் இயங்கும் மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் ஆண்டுகளின் அடிப்படையில், இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட பகுதிகள் எவை என்பது, 2017 மார்ச்சில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பேட்டுடன் இணைக்கப்பட்டது.

'மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு பின்பற்றிய நடைமுறையை எதிர்த்தும், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறையையே பின்பற்ற வேண்டும்' எனக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, கிராமப்புறங்களில் இயங்கும் தொடக்க சுகாதார மையங்கள் மற்றும் திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார மையங்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றையும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவதற்கான வரைமுறையில், அரசு சேர்த்தது. இதற்காக, மே மாதம் புதிய அரசாணையை பிறப்பித்தது.

அதிக இடங்கள்
இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டு, முதுநிலை மருத்துவ படிப்புக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கே, அதிக இடங்கள்
கிடைத்தன.இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

அதில், 'தகுதியில்லாதவர்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது; தொலைதுாரம் மற்றும் சிரமமான பகுதிகளில் பணியாற்றாத அரசு டாக்டர்களுக்கு, வெயிட்டேஜ் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், ஆர்.சுரேஷ்குமார் 
அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
அரசு பின்பற்றிய நடைமுறையின்படி, மலை பகுதிகளில் உள்ள தொடக்க சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், 131 பேர்; தொலைதுாரம் மற்றும் கடினமான பகுதிகளில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், 15 பேர்.கிராமப்புறங்களில் உள்ள தொடக்க சுகாதார மையங்களில் பணியாற்றும், 1,354 பேர்; திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றும், 244 பேர் என, மொத்தம், 1,744 பேர் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டது.

தகுதி பெறாதவை
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தகவல் குறிப்பேட்டில், இணைக்கப்பட்ட பட்டியலில் இடம் பெறாத பகுதிகள், இந்த கல்வியாண்டுக்கு தகுதி பெறாதவை. தொடக்க சுகாதார நிலையங்கள் இயங்கும் கிராமப்புற பகுதிகளாக, 1,747 இடங்களை, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவதற்காக, அரசு, கணக்கில் எடுத்து கொண்டுள்ளது.ஆனால், தகவல் குறிப்பேட்டில் இணைக்கப்பட்ட பட்டியலின்படி, 114 பகுதிகள் மட்டுமே உள்ளன.
கிராமப்புறங்களில் இயங்கும் தொடக்க சுகாதார மையங்கள், திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்களை, மாற்றி அமைக்க வேண்டும்.

அரசாணை ரத்து
எனவே, 2017 மார்ச்சில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பேட்டில் திருத்தம் கொண்டு வரும் வகையில், மே, 6ல் வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. 

தகுதி பட்டியலில் குறைபாடு இருந்தாலும், மார்ச்சில் வெளியிடப்பட்ட தகவல் குறிப்பேட்டில் கூறியுள்ள பகுதிகளில் பணியாற்றிய, அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் செல்லும். மூன்று நாட்களில் தகுதி பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
'மேல் முறையீடு செய்வோம்'சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் பேட்டி:

இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படியும், நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் தான், முதுநிலை மருத்துவ படிப்புக்கான, கவுன்சிலிங்
நடந்தது. சிரமமான பகுதி டாக்டர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அளிப்பது, மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. 

தற்போது, மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் தொடர்பான அரசாணையை, உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...