Sunday, June 18, 2017

சீன மொபைல்களுக்கு போட்டியாக மலிவு விலையில் பழைய மாடல் ஐபோன்களை களமிறக்கும் ஆப்பிள்

2017-06-18@ 00:59:30




புதுடெல்லி: இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்கும் வகையில், சீன நிறுவன மலிவு போன்களுக்கு போட்டியாக, பழைய ஐபோன் மாடல்களை குறைந்த விலையில் களமிறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக சந்தைகளில் கடந்த ஆண்டில் முதல் முறையாக விற்பனை சரிவை சந்தித்த ஆப்பிள் நிறுவனத்துக்கு, இந்திய சந்தைதான் கை கொடுத்தது. இதனால் இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் பலனாக, பெங்களூருவில் தனது துவக்க நிலை மாடலான ஐபோன் எஸ்இ-யை தயாரித்து வருகிறது. இது விரைவில் சந்தைக்கு வர உள்ளது. ஆனால், ஐபோனின் ஆரம்ப விலையை விட குறைவாக சீன ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இந்திய நிறுவன மொபைல்களைவிட இவை அதிகமாக விற்பனையாகின்றன. குறைந்த விலையிலேயே அதிக திரை அளவு, கூடுதல் ரேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றின் விற்பனை உயர்வுக்கு சாதகமாக அமைந்துள்ளன. எனவே, ஐபோன் மோகம் இந்தியர்களிடையே இருந்தாலும் இவற்றை வாங்க தயங்கும் அளவுக்கு விலை மிக அதிகம்.

இந்த நிலையை மாற்ற, பழைய மாடல் போன்களை மீண்டும் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது ஆப்பிள். பழைய பயன்படுத்திய ஐபோன்களில் கோளாறுகளை நீக்கி இந்தியாவில் சந்தைப்படுத்த அரசு அனுமதிக்கவில்லை. எனவே இந்த புதிய முறை கைகொடுக்கும் என ஆப்பிள் நம்புகிறது. இதன்படி பழைய மாடலான ஆப்பிள் 5எஸ் ரூ.20,400க்கே (சுமார் ரூ.300 டாலர்) கிடைக்கிறது. ஆப்பிள் எஸ்இ அமெரிக்காவில் 400 டாலருக்கு கிடைக்கிறது. ஆன்லைன் இணையதளம் ஒன்றில் இந்த மாடல் கடந்த மாத அதிரடி தள்ளுபடி விற்பனையில் ரூ.15,999க்கு கிடைத்தது.
கடந்த ஆண்டில் 26 லட்சம் ஐபோன்கள் இந்தியாவுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் பழைய மாடல் போன்கள் 55 சதவீதம். ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தை பொறுத்தவரை துவக்கநிலை மாடலாக ஐபோன் 6 மற்றும் எஸ்இ ஆகியவைதான் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் ஐபோன் 5எஸ் மாடல் ஆப்பிள் போன் விற்பனை செய்யும் ஏஜென்ட்கள், நிறுவனங்களின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிப்புக்கு கைகொடுத்ததே 5எஸ் மாடல்தான். இப்போதுகூட குறைந்த விலைக்கு கிடைப்பதும் இதுதான். எனவே இதே மாடலை களம் இறக்குவதன் மூலம் சீன நிறுவனங்களுக்கு போட்டியாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டுகிறது. சீனாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடங்கி விட்டது.

இதனால் அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய ஒரு சந்தையில் கால் பதிக்க வேண்டிய அவசர, அவசியம் இந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், எத்தனை மலிவு விலை ஆன்டிராய்டு போன்கள் வந்தாலும் ஐபோன் மோகத்தில் உள்ள இந்திய சந்தையை குறி வைத்துள்ளது.
அமெரிக்காவில் உபயோகித்த பழைய ஐபோன்களை இந்தியாவில் விற்க ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம் திட்டம் வகுத்திருந்தது. இதற்கு இந்தியா அனுமதி அளிக்கவில்லை. இதற்கு மாற்றாக தற்போது புதிய உத்தியை கையாண்டு, இந்தியாவில் ஸ்திரமாக காலூன்றவும், மலிவு விலையில் போன்களை உற்பத்தி செய்யும் சீன மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு சவாலாக திகழ ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024