Sunday, October 8, 2017


பெண்ணும் ஆணும் ஒண்ணு 21: புகுந்த வீட்டை ஏன் வெறுக்கிறாள்?

Published : 18 Sep 2017 11:09 IST

ஓவியா




சாதி, வரதட்சணை இவற்றுடன் கைகோக்கும் இன்னொரு விஷயம், ஜாதகம் பார்ப்பது. ஜாதகப் பொருத்த பிரச்சினைகளுக்காக ஆண்டுக்கணக்கில் திருமணங்கள் தள்ளிப்போவதும் உண்டு. இப்படியான சூழலில் வெறும் குழப்பத்திலும் பதற்றத்திலும் காத்திருப்பவர்களாகப் பெண்கள் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர். இந்தக் காலங்களில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தால்கூட சில வீடுகளில் நிறுத்திவிடுகின்றனர். கோவிலுக்குச் சென்று வேண்டுதல் நடத்துவது, ஜோசியரிடம் செல்வது எனச் சுழலும் வாழ்க்கை. அதுவரை படிக்கவைத்த உயர் படிப்புகள் எவையும் இது மாதிரியான நேரத்தில் பயன்படுவதோ பயன்படுத்தப்படுவதோ இல்லை. படிப்பு, வேலை, தோற்றம் ஆகிய பொருத்தங்களுக்கெல்லாம் முன் நிபந்தனையாகப் போய்விடுகிறது இந்த ஜாதகப் பொருத்தம். ஜாதகம் பொருந்துகிறதா என்று பார்த்த பின்னரே மற்றவற்றைத் தொடர்கிறார்கள்.

பெண் பார்க்கும் படலம்

ஜாதகப் பொருத்தத்துக்குப் பிறகு பெண் பார்ப்பது என்று ஒரு நாளைக் குறிப்பார்கள். இப்போது இதில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது. சில காலங்களுக்கு முன்புவரை ஒரு பண்டத்தை வாங்குவதற்கு முன் எப்படிச் சோதித்துப் பார்ப்பார்களோ அதுபோல் பெண்ணைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். பெண்ணை நடக்கச் சொல்லிப் பார்ப்பது, பாடச் சொல்லிக் கேட்பது இவையெல்லாம் இதில் அடக்கம். இவ்வளவும் செய்துவிட்டுப் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போகும் கொடுமையும் நடக்கும். சில முறை இந்த மாதிரி நடந்துவிட்டால் அந்தப் பெண்ணின் மனம் அவமானத்தால் பட்டுப்போகும். பல பெண்களுக்கும் மிகக் கொடுமையான காலகட்டமாக அந்த நாட்கள் அமைந்துபோகும். துள்ளல் மிகுந்த கனவுகள் எல்லாம் பட்டுப்போய், அமையும் வாழ்க்கை எதுவானாலும் சரி என்கிற மனநிலை இயல்பாகவே அவர்களுக்கு வந்துவிடும்.

பெண் பார்க்கும் சடங்கு, பெண்ணின் அடிப்படைத் தன்மானத்தைக் கேள்வி கேட்கும் நிகழ்வு என்ற புரிதல் படித்த பெண்களுக்கு முழுமையாக வந்திருக்கிறதா என்பது பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விதான். மாப்பிள்ளை பார்ப்பது எனும் சடங்கு இங்கு கிடையாது. பெண் பார்ப்பது என்ற கருத்தே பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பதை நாம் இன்னும் உணராமல்தான் இருக்கிறோம்.

மாறாத சடங்குகள்

காலமாறுதலும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை உருவாக்கியிருக்கும் புதுவெளியும் இந்த நிகழ்வின் வடிவங்களில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. அதன் உச்சபட்ச மாற்றமாக இப்போது மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் பெண் நிமிர்ந்து மாப்பிளைளையைப் பார்க்கக்கூட முடியாது. ரகசியமாகத்தான் பார்க்க முடியும். பார்க்காமலேயே சம்மதித்த திருமணங்களும் ஏராளம். இதனால் கடுமையான ஏமாற்றத்துடன் தொடங்கப்பட்ட மணவாழ்க்கைகளும் ஏராளம். பண்பாடு என்ற பெயரில் எவ்வளவு பெரிய தவறுகளை எல்லாம் நாம் செய்துவந்திருக்கிறோம்?

மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் சேர்க்கும் செல்வத்தின் முக்கிய பலன் தனது பிள்ளைகளுக்கு இது போன்ற சடங்குகள் அனைத்தையும் கடைப்பிடித்துத் திருமணம் செய்துவைப்பதுதான் என்று நம்புகிறார்கள். செல்வமில்லாதவர்கள் கடன் பெற்று, தங்கள் பிற்கால வாழ்க்கையையும் ஓய்வையும் விற்று இந்தத் திருமணக் கடன்களை முடிக்கிறார்கள். ஆனால், அந்தச் சடங்குகள் எல்லாம் பகுத்தறிவுக்கும் மனித வாழ்க்கைக்குத் தேவையான நியாயங்களுக்கும் அப்பால் நிற்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமண வாக்குறுதிகள்

இவையெல்லாம் கூடிவந்த பின் இரு வீட்டார் சம்பந்தம் பேச முற்படுகிறார்கள். திருமணத்துக்குப் பின் பெண் வேலைக்குப் போக வேண்டுமா போகக் கூடாதா போன்றவற்றை இந்தப் பேச்சுவார்த்தைகள் தீர்மானிக்கின்றன. இப்போது பெண் மாப்பிள்ளையுடன் பேசத் தொடங்கிவிட்டபடியால் இந்தப் பெரியவர்கள் பேச்சுடன் உடன்பட்டோ முரண்பட்டோ அவர்கள் தங்களுக்குள் ஒரு பேச்சுவார்த்தை நடத்திக்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் பெண் வேலைக்குச் செல்வது, அவள் பிறந்த வீட்டுடன் அவள் வைத்துக்கொள்ள விரும்பும் உறவின் தன்மை போன்றவை பற்றிய பிரச்சினைகள் இடம்பிடிக்கின்றன. இதில் ஆண்தான் வழங்குகிறவனாக இருக்கிறான். எனவே, அவன் கோரிக்கை என்று எதையும் வைப்பதில்லை. கிட்டத்தட்ட வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வாக்குறுதி வழங்குவதே அவர் பணியாக இருக்கிறது. நமது மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இங்குதான் பிறக்கிறார்கள்.

சிறை வைத்துவிட்டு நீதியா?

இப்படிப் பல கட்டங்களைத் தாண்டித்தான் இங்கு திருமணங்கள் நடக்கின்றன. பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டுகிறான். இந்தத் தாலிக்குள்ள பொருள் ஒன்றுதான். தாலி கட்டிய கணவனுக்குச் சொந்தமானவள் இந்தப் பெண், அவனது உடைமை என்பதுதான் அது. மருத்துவர், உளவியல் நிபுணர், பொறியியல் வல்லுநர், காவல் துறை அதிகாரி, நீதிபதி என எந்தத் துறையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் இந்தச் சமுதாயத்தில் இன்றுவரை அவர்களை ஆண்கள் வெட்ட வெளிச்சமாக ஒரு பண்டமாக நடத்தி, உடைமை கொண்டு சாசனம் எழுதிக்கொள்கிறார்கள். கட்டுகிறவருக்கும் கட்டிக்கொள்கிறவருக்கும் உறுத்தவில்லை. இந்தத் தாலி கட்டுதல் பற்றிப் பேசக்கூட முடியாத அளவுக்குப் புனிதப் பூச்சு பூசி வைத்திருக்கிறார்கள்.

இதன் பிறகு மணமான பெண் தனது பிறந்த வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்கு இடம்பெயர்கிறாள். இதுதான் அடிப்படையான சிக்கல். ஒரு பெண் திருமணத்தால் தனது வீட்டைத் துறந்து செல்கிறாள். ஆனால், ஆணுக்கு இந்தச் சிக்கல் இல்லை. இங்கு பெண் வாழ்க்கையின் நோக்கம் மறைமுகமாக ஒட்டுமொத்த சமுதாயத்தால் வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. இனி போகிற இடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டியதே அவளுக்கான விதி. இதுதான் அவள் வாழ்வுக்கான தர்மம். இதைப் போன தலைமுறைப் பெண் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டதுபோல் இந்தத் தலைமுறைப் பெண் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மறுத்தும் அவள் பேசத் தொடங்கவில்லை. தனது மறுப்பைத் தனது மனநிலையாக வைத்துக்கொள்கிறாள் பெண். இதுதான் இன்று பல குடும்பங்களின் சிக்கலாகப் பரிணமிக்கிறது.

இந்தத் தலைமுறைப் பெண் முதியோரைப் பார்த்துக்கொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறாள். முதியோர் பாதுகாப்பின் தேவை குறித்து நாம் பேசத்தான் வேண்டும். ஆனால், முதலில் கடமைகளை வரையறுப்பதில் இந்தச் சமுதாயம் என்ன நீதியைப் பின்பற்றியிருக்கிறது? ஆண் வீடு சார்ந்து பெண்ணின் வாழ்க்கை என்ற அநீதியான சட்டகத்துக்குள் பெண்ணின் வாழ்க்கையைச் சிறை வைத்துவிட்டு அவளிடமிருந்து நீதி கேட்பது என்ன நியாயம்? இந்தக் கேள்விக்கான முதல் பலி பெண் கணவனைத் தவிர கணவன் வீட்டு உறுப்பினர்களைத் தனது முழு உறவாக ஏற்றுக்கொள்ள மறுதலிப்பதிலிருந்து தொடங்குகிறது. தன் இடம் எது என்கிற சிக்கலிலிருந்தே அவர்களின் மணவாழ்க்கை சிக்கல்கள் ஆரம்பமாகின்றன.

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர் | தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

No comments:

Post a Comment

NEWS TODAY 19.10.2024