ஓ.பன்னீர்செல்வம் பொதுக்கூட்டத்தைக் காலிசெய்த 'மெர்சல்' படம்! - தேனியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்
எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி
Theni:
அ.தி.மு.க கட்சியின் 46-ம் ஆண்டு துவக்க விழா ஆளும் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தலைமையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், ‘எங்களுக்கு மோடி இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்!’ என்று பேசி, பரபரப்பைக் கிளப்பினார். இந்தப் பொதுக்கூட்டத்துக்கு சற்றும் குறைவில்லாமல், தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் உத்தமபாளையத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ‘எடப்பாடி – பன்னீர் அணியில் எங்களின் ஸ்லீப்பர் செல்கள் 20 பேர் இருக்கிறார்கள்’ என்று சொல்லி, அவர் பங்குக்கு பரபரப்பை உருவாக்கினார்.
இந்நிலையில் நேற்று, தேனி கூடலூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்.பி பார்த்திபன் ஆகியோர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பன்னீர்செல்வம் ஊரில் இல்லாத காரணத்தால், அவர் கலந்துகொள்ளவில்லை. அதனால், மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பெரும்பாலும் பொதுக்கூட்டத்துக்கு வரவில்லை. ஒன்றிய, நகர நிர்வாகிகளை வைத்து கூட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தினகரன் ஆதரவாளரும், கூடலூர் பகுதியில் அறியப்படும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவருமான அருண்குமார் என்பவருக்குச் சொந்தமான தியேட்டரில், விஜய் நடித்து சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படம் இலவசமாக திரையிடப்படுவதாகச் செய்தி பரவியது. இதையறிந்த பன்னீர் தரப்பு ஆதரவாளர்கள் அனைவரும் அணிகள் பேதம் பார்க்காமல் குடும்பத்தோடு 'மெர்சல்' படம் பார்க்கச்சென்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பன்னீர் தரப்பு ஏற்பாடுசெய்திருந்த பொதுக்கூட்டம் காத்தாடியது. சிறிது நேரத்தில், காலிச் சேர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கெடுத்தன. இனி, கூடலூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால், ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துதான் செய்ய வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்கு பன்னீர்செல்வம் டோஸ் விட்டதாகக் கிசுகிசுக்கிறார்கள் அவரது நெருங்கிய வாட்டாரங்கள். பல சர்ச்சைகளுக்கு உள்ளான மெர்சல் படம், தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் அரசியல் பேதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் இருக்க உதவியது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கூடலூர் மக்கள்.
No comments:
Post a Comment