Monday, June 1, 2015

ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வராததால் சிக்கல் ! : வேளச்சேரி 2 அடுக்கு மேம்பால திட்டம்?

சென்னை: வேளச்சேரியில், இரண்டு அடுக்கு மேம்பால திட்ட பணிகளுக்காக, மூன்று முறை ஒப்பந்தம் விடப்பட்டும், ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வரவில்லை. அடுத்து நடக்கவுள்ள ஒப்பந்தத்திலாவது, பணிகளை எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வருவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரம், பொன்மார், கேளம்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளிக்கரணை கைவேலி வரை, வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகின்றன. வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, விஜயநகர் வரை, காலை மாலை நேரங்களில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசல், புறவழி சாலையில், வேளச்சேரி ஏரியில் இருந்து, விஜயநகர் சந்திப்பு வரை, வாகன தேக்கத்தை ஏற்படுத்துகிறது.

உத்தேச மதிப்பு

அதற்கு தீர்வு காணும் வகையில், விஜயநகர் சந்திப்பில், மேம்பாலம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர் செய்திகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், வேளச்சேரி, விஜயநகர் பேருந்து நிலைய பகுதியில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். உத்தேச மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பாலம் அமைப்பதற்கு தேவையான கையகப்படுத்தவுள்ள நிலங்களும் அடையாளம் காணப்பட்டன.

வேளச்சேரி இரட்டை அடுக்கு பாலத்தின் ஒரு அடுக்கு, வேளச்சேரி புறவழி சாலையில் துவங்கி, தாம்பரம் -- வேளச்சேரி சாலையின் இருபுறமும் இறங்கும். இரண்டாம் அடுக்கு, விஜய நகர் - -தரமணி சாலையில் துவங்கி, வேளச்சேரி ரயில் நிலைய பாலத்தின் முன் முடியும்.

அதில், ஒரு அடுக்கு, 1,400 மீட்டர் நீளமும், மற்றொரு அடுக்கு 700 மீட்டர் நீளமும் இருக்கும். பாலத்தின் அகலம் மட்டும், தேவைக்கு ஏற்றபடி மாறுபடும் என்ற வகையில் வரை படம் தயாரித்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

தயக்கம் ஏன்?

அங்கு பல மாதங்கள் காத்திருப்புக்கு பின், வரைபட ஒப்புதல் கிடைத்தது. அடுத்ததாக, 75 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, கடந்த ஓராண்டில், மூன்று முறை ஒப்பந்தம் நடத்தியும் யாரும் எடுக்க முன்வரவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால், மேம்பாலம் அமைக்க திட்டமிட்ட தொகை, மிகவும் குறைவு என, கூறப்படுகிறது. இதனால், முதல்வர் அறிவித்த இரண்டு அடுக்கு மேம்பால திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் தரப்பில் கூறியதாவது:

வேளச்சேரி இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்க, திட்டமிடப்பட்ட 75 கோடி ரூபாய் மிகவும் குறைவாக உள்ளதாக, ஒப்பந்ததாரர்கள் கருதுவதால், ஒப்பந்தம் எடுக்கவில்லை. அவர்கள் கூடுதலாக 33 சதவீதம் கோருகின்றனர். ஆனால், நிதித்துறை வழக்கத்தில் இல்லாதபடி, 20 சதவீதம் கூடுதலாக தருவதாக அறிவித்தும், ஒப்பந்தம் எடுக்க மறுக்கின்றனர். தற்போது, நான்காவது ஒப்பந்தம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. அதில், ஒப்பந்தம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் வேளச்சேரி இரண்டு அடுக்கு மேம்பால பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024