Tuesday, June 2, 2015

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஜெயலலிதா விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மே மாதம் 11-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, அவர் தமிழக முதல்-அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார்.

இதற்கிடையே, கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் வருமானத்தை கணக்கீடு செய்ததில் பிழை இருப்பதாகவும், எனவே இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா அரசுக்கு சிபாரிசு செய்தார்.

இதேபோல், இந்த வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு தகுதியான வழக்கு என்று கர்நாடக அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமாரும் அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்கினார். மேலும் அரசு கேட்ட சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த ரவிவர்ம குமார், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறினார். மேல்முறையீடு செய்வதற்கு இந்த வழக்கு தகுதியானது என்று கர்நாடக அரசின் சட்டத்துறையும் பரிந்துரை செய்தது.

எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

இதற்கிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி தலைவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யுமாறு கர்நாடக அரசை வற்புறுத்தி வந்தனர். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

இதுபற்றி மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இந்த நிலையில், கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவலை மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் சட்ட மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசுக்கு அதிகாரம்

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்தனர். மேலும், இந்த தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு சட்டத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தோம். சட்டத்துறை அதிகாரிகள் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கி, மேல்முறையீடு செய்ய இது தகுதியான வழக்கு என்று சிபாரிசு செய்தனர்.

அரசு தலைமை வழக்கறிஞர், அரசு சிறப்பு வக்கீல், சட்டத்துறை அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை மந்திரிசபை கூட்டத்தில் தாக்கல் செய்து நான் விளக்கி கூறினேன். அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து இதன் சாதக-பாதகங்களை எடுத்து வைத்தேன். இந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியபோது அரசு சிறப்பு வக்கீலை நியமனம் செய்யும் அதிகாரம் மற்றும் வழக்கை நடத்தும் அதிகாரம் கர்நாடகத்துக்கு தான் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்தோம்.

பழிவாங்கும் நோக்கம் இல்லை

அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதில் கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் நற்பெயர் உள்ளது. மேலும் இது மேல்முறையீடு செய்வதற்கு தகுதியான வழக்கு. எனவே சட்டத்துக்கு உட்பட்டு, கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு முதல்-மந்திரி எனக்கு உத்தரவிட்டு இருக்கிறார். இதில் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

இந்த வழக்குக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வழக்கு குறித்து புகார் கொடுத்தவர் சுப்பிரமணியசாமி. வழக்கு விசாரணை கர்நாடகத்தில் நடைபெற்றதால் வழக்கை நடத்தும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு கிடைத்து உள்ளது. வழக்கை சட்டப்படி நடத்த வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது. மேல்முறையீடு செய்வதற்கான முடிவை எடுப்பதில் தாமதம் செய்யவில்லை. அவ்வாறு தாமதித்ததாக கூறுவது தவறானது.

அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா

மேல்முறையீடு செய்யும் முன்பு அனைத்து அம்சங்களையும் ஆராய வேண்டியது அவசியம். மேலும் அப்பீல் செய்ய 90 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதனால் இது தாமதமான முடிவு என்று கூற முடியாது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வாதிடுவார். அவருக்கு உதவியாக வக்கீல் சந்தேஷ் சவுட்டா செயல்படுவார்.

இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் தலையிடவில்லை. கட்சி மேலிடத்துடன் மாநில அரசு கலந்து ஆலோசிக்கும் என்று அபிஷேக் சிங்வி கூறியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் ரீதியாக எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் வரவில்லை. இது முழுக்க முழுக்க நாங்கள் ஆலோசித்து எடுத்த முடிவு ஆகும். மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனுடன் இதை தொடர்புபடுத்துவது சரியல்ல.

இவ்வாறு மந்திரி டி.பி. ஜெயச்சந்திரா கூறினார்.

பி.வி.ஆச்சார்யா பேட்டி

இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து பி.வி.ஆச்சார்யா கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நானும், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும் கர்நாடக அரசுக்கு உறுதியாக பரிந்துரை செய்தோம். எங்கள் பரிந்துரையை ஏற்று மேல்முறையீடு செய்வது என்று கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இந்த முடிவை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மேல்முறையீட்டு வழக்கில் எனது வாதத்தை சிறப்பாக எடுத்து வைப்பேன்.

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024