Monday, June 1, 2015

அனலாய்க் காற்று!

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் அதிகமான கோடை வெயில் மற்றும் அனல் காற்றால் இறந்தோர் எண்ணிக்கை மே 31-ஆம் தேதி வரை 2,218 பேராக அதிகரித்திருக்கிறது. ஆந்திரத்தில் 1,677 பேரும், தெலங்கானாவில் 541 பேரும் இறந்துள்ளனர். இதுதவிர, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் அனல் காற்றால் இறந்துள்ள போதிலும் அதன் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.
÷ஆந்திரத்தில் கோடைக் காலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் காய்வது புதிதல்ல. கடந்த பதின் ஆண்டுகளாக தென் இந்தியாவில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைக் கடக்கும் நகரங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், தற்போது ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெயில் அளவு சராசரியாக 115 டிகிரி பாரன்ஹீட் (46 டிகிரி செல்சியஸ்) என்பதாக இந்த ஆண்டு உயர்ந்திருப்பதுதான் இத்தனை பேரின் மரணத்துக்குக் காரணம்.
÷ரத்தத்தைச் சுண்ட வைக்கும் வெயிலில் அதிகம் பாதிக்கப்படுவோர் முதியோர், சிறார்கள். இவர்கள் வெளியில் நடமாடினால்தான் இறப்பு நேரிடும் என்பதல்ல. இவர்கள் வீட்டுக்குள் இருந்தாலும், இந்த அனல் காற்றைத் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உடல் வலுவிழந்து இருப்பின், இறந்து போகிறார்கள்.
÷கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமான வெப்பத்துக்கும், அனல் காற்றுக்கும் ஒரு முக்கியக் காரணம் சுற்றுச்சூழல் பாதிப்பு. அத்துடன் பல்வேறு அறிவியல் காரணங்களையும் வானியல் வல்லுநர்கள் பட்டியலிடுகிறார்கள். இப்போது அதைப் பற்றிக் கவலைப்படுவதைக் காட்டிலும், மனிதர்களைக் காப்பாற்றுவதும், ஏரி, குளங்களில் இருக்கும் நீர் ஆவியாகாமல் தடுப்பதும்தான் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய மிக இன்றியமையாப் பணிகள்.
÷ஒளி ஊடகங்கள், பண்பலை வானொலிகள், செல்லிடப்பேசியில் குறுந்தகவல்கள் மூலமாக அனல் காற்று, வெப்பம் குறித்த அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக இலவச மருத்துவம் அளிக்கும் ஏற்பாடுகளும் இத்தகைய மரணங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும்.
÷அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் 1995-98களில் அனல்காற்று வீசியபோது, கண்காணிப்பு மற்றும் அறிவிப்புகளால் மூன்று ஆண்டுகளில் 117 உயிர்கள் காப்பாற்றப்பட்டன (அதாவது சராசரியாக உயிரிழப்பு குறைந்தது) என்று அமெரிக்க வானிலை மையம் கணித்துள்ளது. இந்தியாவிலும் மக்களுக்கு அறிவுறுத்துதல் மூலம் மரணங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது.
÷மழை, வெள்ளத்துக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு முக்கியத்துவம் தந்து, பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கு உள்பட்டதாக அதனை அறிவிக்கின்றனவோ, அதேபோன்று, இந்த அனல் காற்றையும், அதனால் ஏற்படும் மரணங்களையும்கூட பேரிடர் என்றே கருத வேண்டும். இந்தியாவில் இதுவரையிலும் அனல் காற்று குறித்தும், அதன் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது குறித்தும் எந்தவொரு திட்டமும் இல்லை. இனியும் அவ்வாறு மெத்தனமாக இருத்தல் கூடாது என்பதையே தற்போதைய அனல் காற்று மரணங்கள் அறிவுறுத்துகின்றன.
÷பொதுமக்கள் தங்கள் பணிகளை காலை 10 மணிக்குள் முடித்துக் கொள்வது என்பதும், பிறகு மாலை 5 மணிக்கு மேல் தொடங்குவது என்பதும், எங்கிருந்தபோதிலும் வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் அருந்துதல் அல்லது நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுதல் அவசியம் என்பதும் பொதுவான காப்புமுறைகள்.
÷ஆயினும், நண்பகலிலும் போக்குவரத்து இயக்கமும், கடைகள் திறந்திருப்பதும் காணப்படும் என்றால், தொழிலை நம்பியிருக்கும் சாதாரண மக்கள் வேறு வழியின்றி வீதிக்கு வர வேண்டிய அவசியம் நேரிடுகிறது. அரசு அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் செயல்படும் என்றால் அரசு சார்ந்த செயல்பாட்டுக்காக பொதுமக்கள் வெளியே வராமல் இருக்க முடியுமா? அரசின் அறிவுறுத்தல் மிகத் தெளிவானதாக இருப்பின், குறிப்பிட்ட நேரத்துக்கு, இன்றியமையாத பணிகள் தவிர்த்து, மற்ற பணிகளுக்கு ஓய்வு நேரமாக அறிவிப்பதும், பணி நேரத்தை மாற்றி அமைப்பதும் மக்களுக்குப் பேருதவியாக அமையும்.
÷மனிதர்களின் மரணம் ஒருபுறம் இருக்க, இத்தகைய வெயில் மற்றும் அனல் காற்று அந்த மாநிலங்களின் நீர் ஆதாரங்களை ஆவியாக்கிவிடும். நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஈரப்பதம் முழுவதையும் அனல் காற்று இழுத்துச் சென்றுவிடும். கோடை முடிந்த பிறகு இந்த மாநிலங்களில் மிகக் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடும், விவசாயத்துக்கு பாசன நீர் இல்லாத நிலைமையும் தலைவிரித்தாடும்.
÷ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் சில வேதிப் பொருள்களைத் தூவுவதன் மூலம் நீர் ஆவியாவதைப் பெருமளவு குறைக்க முடியும். அதற்கான ஆலோசனை வழங்குதல், அத்தகைய வேதிப்பொருள் கிடைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவதும், விவசாயிகள் எந்தெந்தப் பயிருக்கு, எந்தெந்த நேரத்தில் பாசனத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் நீர் வீணாகாதபடி பயன்படுத்த உதவும்.
÷தமிழ்நாட்டிலும்கூட, கோடைக் காலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டும் நகரங்கள் குறைந்தது 10-ஆக உள்ளது. தமிழ்நாட்டில் அனல் காற்று இல்லை என்றாலும், நீர் ஆதாரங்களில் நீர் ஆவியாகாமல் தடுப்பதற்கான வழிமுறைகள், பாசன மேலாண்மை ஆலோசனைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதால் நமக்கு நன்மையே. 2025-இல் இந்தியாவில் மிகக் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் என்று அறிக்கைகள் எச்சரிக்கும் நிலையில், நாம் இப்போதே நடவடிக்கையில் இறங்கத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024