Tuesday, June 2, 2015

மருத்துவராகப் பதிவு செய்ய தேர்வு நடத்த மத்திய அரசு முயற்சி: டாக்டர்கள் சங்கம் கண்டனம்

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த பிறகு மருத்துவராக இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெற வேண்டும் என, மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய முறைக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எம்.பி.பி.எஸ். படிப்பவர்கள் பயிற்சி மருத்துவத்தை முடித்த பிறகு தேசிய அளவில் நடத்தப்படும் வெளியேறும் தேர்வில் ("எக்சிஸ்ட் டெஸ்ட்') வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்ற பின்னரே மருத்துவராக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய முடியும்; முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை எழுத முடியும் என்ற புதிய முறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
மீண்டும் எதற்கு தகுதித் தேர்வு? இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்தான் தேர்வுகளை நடத்துகின்றன. ஒரு மருத்துவராக வெளிவருவதற்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர்தான் ஒருவர் மருத்துவராகிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு தகுதித் தேர்வு என்பது அவசியமற்றது.
மாற்று என்ன? ஒரு தகுதித் தேர்வின் மூலம் மட்டுமே மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தி விட முடியாது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தரம் குறைவாக உள்ளது. பாடத் திட்டங்களிலும், பயிற்சி முறைகளிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
இந்தக் குறைபாடுகள் முதலில் சரி செய்யப்பட வேண்டும்.
மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும். அதை விடுத்து முதுநிலை மருத்துவ மாணவர் நுழைவுத் தேர்வில் மாணவர் வாங்கும் மதிப்பெண்களில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன என்ற காரணத்தைக் காட்டி வெளியேற்றும் தேர்வு முறையைக் கொண்டு வருவது சரியல்ல.
இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மருத்துவர்களின் நலன்களுக்கு எதிரான செயலாகும். எனவே வெளியேற்றும் தேர்வு முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்'' என்று டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024