Friday, October 13, 2017

தலையங்கம்

அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு



தமிழக அரசில் பணிபுரியும் 12 லட்சம் ஊழியர்களுக்கும், 7 லட்சம் மாத ஓய்வூதியதாரர்களுக்கும் ‘தீபாவளி’ பரிசாக சம்பள உயர்வை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொழிந்து இருக்கிறார்.

அக்டோபர் 13 2017, 03:00 AM

தமிழக அரசில் பணிபுரியும் 12 லட்சம் ஊழியர்களுக்கும், 7 லட்சம் மாத ஓய்வூதியதாரர்களுக்கும் ‘தீபாவளி’ பரிசாக சம்பள உயர்வை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொழிந்து இருக்கிறார். 2016–ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ‘மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதியவிகிதங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்திருந்தார். அந்த உறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய அரசாங்கம் 7–வது ஊதியகுழு பரிந்துரையை தன் ஊழியர்களுக்கு அமல்படுத்தியவுடன், மாநில அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, இந்த பரிந்துரையை நிறைவேற்றும் வகையில், அதற்கான வழிமுறைகளை ஆராய நிதித்துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு தன் அறிக்கையை தந்தவுடன் நேற்று முன்தினம் அமைச்சரவைக்கூடி, அரசு ஊழியர்கள், மாத ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள, ஓய்வூதிய உயர்வு அளிக்க முடிவுசெய்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை அறிவிப்பாக வெளியிட்டார்.

இதன்படி, அனைத்து ஊழியர்களுக்கும் ஒட்டுமொத்த சம்பளத்தில் 20 முதல் 25 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலக உதவியாளர் இப்போது 21 ஆயிரத்து 792 ரூபாய் சம்பளம் வாங்கினால், இனி 26 ஆயிரத்து 720 ரூபாய் சம்பளமாக பெறுவார். இளநிலை உதவியாளர் 9 ஆயிரத்து 549 ரூபாயும், செகண்டரி கிரேடு ஆசிரியர் 10 ஆயிரத்து 90 ரூபாயும், சத்துணவு அமைப்பாளர்கள் 2 ஆயிரத்து 910 ரூபாயும், சத்துணவு சமையலர் 2 ஆயிரத்து 118 ரூபாயும் சம்பள உயர்வு பெறுவார்கள். இதுமட்டுமல்லாமல், ஒரு அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரத்து 700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2.25 லட்சமாகவும் இருக்கும். பென்சனை பொறுத்தமட்டில், குறைந்தபட்சம் குடும்ப ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 ஆகவும், அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஆகவும் இருக்கும். இதுபோல, ஓய்வுபெறும்போது அளிக்கப்படும் பணிக்கொடை அதிகபட்சமாக ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 ஆயிரத்து 719 கோடி கூடுதலாக செலவாகும்.

ஏற்கனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.46 ஆயிரத்து 332 கோடியும், ஓய்வூதியத்திற்காக ரூ.20 ஆயிரத்து 577 கோடியும், ஆக மொத்தம் ரூ.66 ஆயிரத்து 909 கோடி சம்பளத்திற்காகவும், பென்சனுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய் செலவில் 38.17 சதவீதமாகும். இந்த ரூ.14 ஆயிரத்து 719 கோடி ஒரு ஆண்டுக்கு கூடுதல் செலவாகும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக ரூ.7 ஆயிரத்து 350 கோடி செலவாகும். அரசின் நிதிப்பற்றாக்குறை இன்னும் அதிகமாகும் நிலையில், இந்த 19 லட்சம் பேருக்கு கொடுக்கப்போகும் ஊதிய உயர்வுக்காக, தமிழ்நாட்டில் உள்ள 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை அரசு சுமத்திவிடக்கூடாது. ஏற்கனவே சரக்கு மற்றும் சேவைவரியால் தாங்க முடியாத சுமையினால் தவிக்கும் மக்களுக்கு, இனிமேலும் வரிவிதித்தால் நிச்சயமாக தாங்கமுடியாது. இந்த சம்பள உயர்வு அறிவித்த நாளிலேயே அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த நேரத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரமுடியுமா? என்பது சந்தேகமே. அரசு ஊழியர்களுக்கு தாராளமாக சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. இதன்காரணமாக இனிமேல் லஞ்ச ஊழலுக்கு எந்த அரசு ஊழியர்களுக்கு இடையேயும், எந்த துறைகளுக்கும் இடையேயும் இடமே இருக்கக்கூடாது. இதுபோல, அவர்களின் பணித்திறமையும் கண்டிப்பாக மேம்பட வேண்டும்.















No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...