18 வயதுக்குள் பெண்ணுக்குத் திருமணம்... உச்ச நீதிமன்ற அதிரடித் தீர்ப்புகுறித்த அலசல்!
ரமணி மோகனகிருஷ்ணன்
Chennai:
இந்தியாவில் 18 வயதுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சட்டபூர்வமாக சிறுவர்கள்தாம். பெண்ணின் சட்ட பூர்வமான திருமண வயது 18. ஆனால், 15 வயதுக்கு உள்பட்ட சிறுமியைத் திருமணம்செய்து, கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்று இந்திய தண்டனைச் சட்டம் 375 சொல்லும் விநோதம் இருக்கிறது. எனவே, இந்தச் சட்டத்தைத் திருத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், '18 வயதுக்குட்பட்ட பெண்ணைத் திருமணம் செய்த கணவராக இருந்தாலும், உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து, குழந்தைகள் நல செயற்பாட்டாளர், பெண்கள் அமைப்பு, சமூக செயற்பாட்டாளர்களிடம் கருத்து கேட்டோம்.
தேவநேயன், தோழமை அமைப்பு
''உலகப் பெண் குழந்தைகள் நாளில் இந்தத் தீர்ப்பு வந்திருப்பது வரவேற்கக்கூடியது. ஏற்கெனவே இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்த குளறுபடியை இந்தத் தீர்ப்பு தீர்த்துள்ளது. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், இன்றும் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையே இந்தத் தீர்ப்பு நிரூபிக்கிறது. இதற்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் மிகவும் வலுவானது என்பதையும் தாண்டி, நடைமுறையில் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர், மாவட்டம்தோறும் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் மாவட்ட சமூகநல அலுவலர்தான் அந்த வேலையைப் பார்த்துக்கொள்கிறார். இதைச் சரிசெய்ய வேண்டும். பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்' சொல்லிக்கொடுப்பதால் மட்டும் எதுவும் மாறிவிடாது. இருபாலருக்குமான பாலியல் கல்வி அவசியம்.''
உ.வாசுகி, ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்
''குழந்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி 18 வயதுக்குக் கீழே இருப்பவர் குழந்தையே. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டமும் 18 வயதிற்குட்பட்டவர்களை மைனராகவே சொல்கிறது. திருமணமானால் மட்டும் 15 வயதுக்கு மேலிருந்தால் பாலியல் வன்கொடுமை என்று இருந்தது தவறானது. இப்போதைய தீர்ப்பு, முரண்பாடுகளைக் களைந்துள்ளது. இந்தச் சட்டம் வந்தால், குழந்தைத் திருமணங்கள் குறையும். ஆனால், சில நேரங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் காதலிக்கும்போது, இருவரும் பரஸ்பரம் விரும்பி உடலுறவு வைத்துக்கொள்வார்கள். இது பெண்ணின் வீட்டுக்குத் தெரிய வரும்போது, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது புகாரை அளிக்கிறார்கள். 15 வயதுக்கு மேலிருக்கும் பெண்ணைத் திருமணம்செய்து, பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடலுறவுகொள்வது பாலியல் வன்கொடுமை என வைத்துவிடுங்கள். ஆனால், இருவரும் பரஸ்பரம் விரும்பி உடலுறவுகொள்வது குற்றம் என்று கருதப்படுவது தவறு. எனவே, சம்மதம் கொடுக்கப்பட்டதா என்பதைக் கொஞ்சம் விரிவாக ஆராயலாம். எடுத்த எடுப்பிலேயே அந்தப் பையனை பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியாகப் பார்க்க வேண்டாம் என ஏற்கெனவே எங்கள் அமைப்பின் சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.''
கே.சாந்தகுமாரி, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பு
“ ‘இன்டிபெண்டன்ட் திங்கிங்' என்கிற அமைப்பு தொடர்ந்த வழக்கில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி
இருக்கிறது. ஆனால், 18 வயதுக்கு மேலே இருந்தாலும், பெண்ணின் விருப்பமில்லாமல் நடைபெறும் ஓர் உடலுறவு, பாலியல் வன்கொடுமையாகவே கருதப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் திருமணத்துக்குப் பிறகான வல்லுறவுக்குஎதிராகச் சட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவிலோ திருமணமான கணவர், வல்லுறவு கொள்வதைக் குற்றமாகக் கருதும் சட்டங்கள் இல்லை. திருமண உறவில் நீதிமன்றம் தலையிடுவதை, ஒரு மூன்றாமவர் உள்நுழைவதாக இந்தியச் சமூகம் நினைக்கிறது. பெண்ணுரிமை அடுத்தகட்ட பாய்ச்சலைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், இது மாற வேண்டும். திருமணத்துக்குப் பிறகும் மனைவி மீது நிகழும் வல்லுறவுக்கு எதிரான வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும்.''
No comments:
Post a Comment