Sunday, October 15, 2017

மாநில செய்திகள்

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அலைமோதிய மக்களால் திக்குமுக்காடிய தியாகராயநகர்



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க அலைமோதிய மக்களால் தியாகராயநகர் பகுதி திக்குமுக்காடி வருகிறது.

அக்டோபர் 15, 2017, 04:45 AM


சென்னை,

தீபாவளி பண்டிகை 18–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் வர்த்தக பகுதியான தியாகராயநகருக்கு ஜவுளி வாங்க மக்கள் குடும்பம், குடும்பமாக திரள்கின்றனர். தங்களுக்கு தேவையான ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். அலைமோதிய மக்கள் கூட்டத்தால் தியாகராயநகரில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள் திக்குமுக்காடி வருகின்றன.பொதுமக்கள் பெரும்பாலும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருவதால் வடக்கு, தெற்கு உஸ்மான் சாலை, பாண்டி பஜார், பர்கிட் சாலை என தியாகராயநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தை மனதில் கொண்டு பெரும்பாலானோர் மின்சார ரெயிலையே தேர்வு செய்து பயணிக்கின்றனர். இதனால் மின்சார ரெயில்களும் கூட்டம் நிரம்பி வழிகிறது.இந்த கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபடாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தியாகராயநகர் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.

பிக்பாக்கெட்டில் ஈடுபடும் திருடர்களின் புகைப்படங்களை சுவரொட்டிகளாகவும், அகன்ற திரையில் ஒளிபரப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி திருடர்கள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக போலீசார் அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சாதாரண உடையிலும், உயரமான கோபுரங்களில் நின்றபடி பைனாகுலர் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாம்பலம் ரெயில் நிலைய வளாகத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.தியாகராயநகரை போலவே புரசைவாக்கம், எம்.சி.ரோடு, வணிக தளமான பிராட்வே என்.எஸ்.சி.போஸ் சாலை, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் ஜவுளி பொருட்கள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். விடுமுறை நாளான நேற்று பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...