Sunday, October 8, 2017


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம் நாகஸ்வரக் கலைஞர்கள்!

எம்.குமரேசன்

கலைக்கு சாதி, மதம் கிடையாது என்பதுபோல, ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு கலைஞர்கள் நாகஸ்வர வித்வான்களாக சேவகம் செய்துவருகின்றனர்.




நாகஸ்வரக் கலைஞர்களில் ஷேக் சின்ன மவுலானா, தனக்கென தனிப் பாதை வகுத்தவர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உலகமெங்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்துவதுபோல, முதன்முதலாக உலகம் முழுக்கச் சுற்றுப்பயணம் சென்று, நாகஸ்வரக் கச்சேரி நடத்திய பெருமைமிக்கவர். இசைத் துறையில் அவர் பெறாத விருதுகளே கிடையாது. சங்கீத கலாநிதி, சங்கீத சூடாமணி போன்ற விருதுகளுடன் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இவரின் பேரன்கள் காசிம் மற்றும் பாபு ஆகியோர்தான் இப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்கள்!

தாத்தா சின்ன மவுலானாதான் இவர்களுக்கு குரு. ஆறு வயதிலிருந்தே நாகஸ்வரம் கற்றனர். பன்னிரண்டு வயதில் தனியாகக் கச்சேரி நடத்தினர். சின்ன மவுலானா மேற்பார்வையில் இசை பயின்ற இவர்களை, 1996-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம், ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்களாக நியமித்தது. ஏழுமலையான் கோயிலில் எந்த முக்கிய விழா நடந்தாலும் இவர்களின் நாகஸ்வரக் கச்சேரி அரங்கேறும். சமீபத்தில் நிறைவுற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழாவிலும், இவர்கள் பங்கேற்று நாகஸ்வரம் வாசித்தனர். கடந்த 21 ஆண்டுகளாக ஏழுமலையானுக்கு இந்தச் சேவையைச் செய்துவருகின்றனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதி, நாகஸ்வர கலைஞர்களுக்குப் புகழ்பெற்றது. இந்தச் சகோதரர்களுக்கும் பூர்வீகம் குண்டூர்தான். 300 ஆண்டுகளாக இவர்களின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நாகஸ்வரம் வாசித்துவருகிறது. தற்போது, தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் இவர்கள் நிரந்தரமாகக் குடியேறியுள்ளனர். நாகஸ்வரம் வாசிக்கும்போது நெற்றியில் திருநீர் பூசி பக்தி மணம் கமழ காணப்படுகின்றனர். திருப்பதி மட்டுமல்ல, சிருங்கேரி மடம், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில்களுக்கும் இவர்கள்தாம் ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்கள்.



1999-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஷேக் சின்ன மவுலானா மறைந்தார். தாத்தாவின் பெயரில் ஷேக் சின்ன மவுலானா அறக்கட்டளை தொடங்கி நடத்திவருகின்றனர். ஸ்ரீரங்கத்தில் நாகஸ்வரம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். தவிலும் கற்றும்கொடுக்கின்றனர். சின்ன மவுலான மறைந்த ஏப்ரல் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் அவரைப் போற்றும் வகையில் சிறப்பு ஆராதனை நடத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது. நாகஸ்வரம் மற்றும் தவிலில் சிறந்து விளங்கும் 10 பேரைத் தேர்ந்தெடுத்து, அதில் தேர்ந்தவர்களிடம் பயிற்சி பெறவைக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி சின்ன மவுலானா அறக்கட்டளை வழங்குகிறது. தேவைப்படுபவர்களுக்கு நாகஸ்வரமும் வாங்கிக் கொடுக்கின்றனர்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று நாகஸ்வரக் கச்சேரி செய்யும் காசிம் சகோதரர்கள் கூறுகையில், ``தாத்தாவும் எங்கள் தந்தை ஷேக் காசிம் சாகிப்பும்தான் மானசீகக் குருக்கள். நாங்கள் 9-வது தலைமுறை. கலைஞனுக்கு சாதி, மத, பேதமில்லை. கலைக்கு மதிப்பளிக்கும் வகையில், ஏழுமலையான் கோவிலில் எங்களை ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்களாக நியமித்துள்ளனர். திருமலையில் நடைபெறும் எல்லா விழாக்களிலும் நாங்கள் இசைப்போம். ஸ்ரீரங்கம் கோயில், சிருங்கேரி மடம் போன்றவற்றுக்கும் ஆஸ்தான வித்வான்களாக இருக்கிறோம். நாகஸ்வரக் கலை அழிந்துபோய்விடக் கூடாது. நம் பாரம்பர்ய மங்கல இசை காக்கப்பட வேண்டும்'' என்கின்றனர்.

ஏழுமலைவாசனின் எழில் உருவத்தைக் கண்ட பக்தர்கள், இவர்களின் இசையையும் செவி குளிரக் கேளுங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 19.10.2024