Sunday, October 8, 2017

உங்கள் இ-வாலட்டில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா?

கார்க்கிபவா



இ-வாலட்கள் டெங்குவை விட வேகமாகப் பரவி வருகின்றன. வசதியாக இருப்பது, கையில் ரொக்கமாக வைத்திருக்கத் தேவையில்லை என்பது போல பல நல்ல விஷயங்கள் இருப்பதால் மக்களும் இவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இ-வாலட் நிறுவனங்கள் தரும் தள்ளுபடிகளும், கேஷ்பேக் ஆஃபர்களும் இன்னும் அதிகமானோரை இ-வாலட் பக்கம் திருப்பி வருகிறது.
இ-வாலட் பயனர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை அந்தந்த நிறுவனங்களே சொல்லித் தந்துவிடுகின்றன. அதிலும் கவனமாக இருக்க வேண்டிய சில பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

டவுன்லோடு:
அதிகாரபூர்வ ஆப் ஸ்டோர்களிலிருந்துதான் இந்த ஆப்களைத் தரவிறக்க வேண்டும். மற்ற இணையதளத்திலிருந்தோ, மின்னஞ்சல் அல்லது ப்ளூடூத் மூலமாக யாராவது அனுப்பினாலோ அவற்றை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அவ்வப்போது வரும் ஆப் அப்டேட்களைத் தவறாமல் செய்துவிடவும்.

பாஸ்வேர்டு:
இப்போது கைரேகை ஸ்கேனர் வந்துவிட்டதால் பெரும்பாலானோர் அதை ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள். அந்த வசதி இல்லாத மொபைல் வைத்திருந்தால் உடனே பாஸ்கோடு போட்டுவிடவும்.

அதிகப் பணம் வைத்திருக்க வேண்டாம்:
பெரும்பாலும் இ-வாலட் பயன்படுத்துகிறவர்கள் பெரிய தொகை இருக்கும் பொருள்களை அதன் மூலம் வாங்குவதில்லை. சிறிய அளவிலான ட்ரான்ஸாக்‌ஷனுக்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எதுவாக இருந்தாலும், இ-வாலட்களில் அதிகப் பணம் வைக்க வேண்டாம். தேவையானபோது அப்லோடு செய்துகொள்ளலாம்.

கிரெடிட் /டெபிட் கார்டு தகவல்கள்:
நேரத்தை மிச்சப்படுத்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களைச் சேமித்து வைக்கும் ஆப்ஷன் இருக்கும். எப்போதும் அதை செய்துவிட வேண்டாம். முடிந்தவரை, ஒவ்வொரு டிரான்ஸாக்‌ஷன் போதும் அதை எண்டர் செய்வதே பாதுகாப்பானது.

பாஸ்வேர்டை மாற்றுங்கள்:
மின்னஞ்சலுக்கு மட்டுமல்ல; மொபைல் மற்றும் இ-வாலட் பாஸ்வேர்டுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்பட வேண்டும். மொபைலுக்கும், இ-வாலட்டுக்கும் ஒரே பாஸ்வேர்டு வைப்பதை தவிர்க்கவும்.



விளம்பர கால்கள்:
தொலைபேசிவழி யாராவது அழைத்து இ-வாலட் பற்றியத் தகவல்கள் கேட்டால், அதைப் பகிராதீர்கள். குறிப்பாக பாஸ்வேர்டு போன்றத் தகவல்களை எந்த இ-வாலட் நிறுவனமும் தொலைபேசியில் கேட்காது என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்.

மின்னஞ்சல்:
இ-வாலட் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களைப் பொதுவாக குறுஞ்செய்தி மூலம் நாம் பெறுவோம். அதோடு சேர்த்து மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷனும் ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், சில சமயங்களில் குறுஞ்செய்தி வருவது தாமதமாகலாம்; அல்லது வராமலும் போகலாம்.

டபுள் செக்:
மொபைல் மற்றும் டிடிஎச் ரீசார்ஜுகள்தான் மொபைல் வாலட்கள் மூலம் அதிகம் செய்யப்படுகின்றன. இதைச் செய்யும்போது மொபைல் எண் மற்றும் டிடிஎச் ரெஜிஸ்ட்ரேஷன் எண்களைக் கவனமாக டைப் செய்யவும். தவறான எண்களுக்கு ரீசார்ஜ் ஆகிவிட்டால் அதைத் திரும்பப் பெற இயலாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.10.2024