Sunday, October 8, 2017


டெங்கு காய்ச்சல் வார்டுகளில் இடநெருக்கடி:மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், சுகாரத்துறையினர் தங்களின் பதவிகளை தக்க வைக்கவும், டெங்கு விசாரணையில் இருந்து தப்பிக்கவும் டெங்குவால் மரணம் என யாருக்கும் மறந்தும்கூட பதிவு செய்வதில்லை.

அரசு மருத்துவமனையில் உடல்களை ஒப்படைக்கும்போது, டெங்கு காய்ச்சல் என சான்று கொடுக்க மாட்டோம் என்ற நிபந்தனையின் பேரிலேயே சடலங்களை உறவிவனர்களிடம் ஒப்படைக்கின்றனர். உறவினர்களும், இறந்தவர் உடல்களை எந்த சேதாரமும் இல்லாமல் பெறுவதற்காக மருத்துவமனை முடிவுக்கு சம்மதித்து உடல்களை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை நெருங்கும் நிலையில், அவர்களை கைவிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியார் மருத்துவமனைகள் அனுப்பி விடுகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையங்களும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்களில் அனுப்பி விடுகின்றன. அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையம் தொடங்கும் அளவுக்கு டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவில் 200-க்கும் மேற்பட்ட காய்ச்சல் நோயாளிகள் வருகின்றனர். இவர்களில் பலருக்கு மருத்துவமனையின் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். அதற்கு பிறகு அவர்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் 304, 202, 115 ஆகிய வார்டுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் வார்டுகளில் ஐசியூ பிரிவிலும், பொது வார்டுகளில் வைத்தும் டெங்கு பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நோயாளிகள் குவிவதால் மருத்துவனையில் அவர்களுக்கு போதிய பெட் வசதியில்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், பெட் வசதியில்லாமல் அவர்கள் தவிப்பதும், முழுமையான சிகிச்சை பெறும் முன்பே டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது.

மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: காய்ச்சலுக்கு தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலியாக இருக்கிற பெட்டுகளை ஒருங்கிணைத்து காய்ச்சல் நோயாளிகள் தடையின்றி சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் அதிகமாக வந்தால் மற்ற வார்டுகளிலும் வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் பெட் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.10.2024